• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-03 10:26:41    
நேயர்களின் கருத்துக்கள்

cri
கலை: வணக்கம் நேயர்களே. சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளை பற்றிய உங்களது கருத்துக்களின் எங்களது தொகுப்பாக வலம் வரும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

க்ளீட்டஸ்: கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் வாயிலாக நிகழ்ச்சிக்களை பற்றிய கருத்துக்களையும், விமர்சனங்களையும் எழுதியனுப்பி வரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

கலை: பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கும் எங்கள் முயற்சிகளுக்கு, உறுதுணையாய் அமைவது கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களூடாக நீங்கள் தரும் ஆதரவே.

க்ளீட்டஸ்: நண்பர்களே, தொடர்ந்து நிகழ்ச்சிகளை கேளுங்கள், மறவாமல் உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்புங்கள்.

கலை: இனி இன்றைய நமது நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு செல்கிறோம்.

க்ளீட்டஸ்: நிகழ்ச்சியின் முதலில் கடித வழி கருத்துக்கள்.

கடிதப்பகுதி

கலை: அசுவபுரம் மும்பை சுகுமார் எழுதிய கடிதம். சீனத் தலைவரின் ஐரோப்பியப் பயணம் பற்றிய தகவல்களை செய்திகளின் மூலம் கேட்டறிந்தோம். மதம் மற்றும் பண்பாடு குறித்த சீனாவின் கருத்துக்கள் போற்றுதலுக்குரியவை. அரசியலிலும், அறிவியலிலும் மதத்தை இணைக்காது இருப்பது நலம்.

க்ளீட்டஸ்: இலங்கை மட்டக்களப்பு யு. பிரவீன்ராஜ் எழுதிய கடிதம். தங்களது நிகழ்ச்சிகளை கேட்பதன் மூலம் நாங்கள் ஓரிரு வார்த்தைகள் சீன மொழியில் கதைக்க முடிகிறது. சீன வரலாற்றுச் சுவடுகள், அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு, சனிக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் கேள்வியும் பதிலும் ஆகியவை தகவல் களஞ்சியமாக அமைகின்றன. நிகழ்ச்சிகள் மென்மேலும் சிறப்புடன் அரங்கேற வாழ்த்துகிறேன்.

கலை: அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி குறித்து மணமேடு எம். தேவராஜா எழுதிய கடிதம். தியன்ஜின் மாநகரிலான பாரம்பரிய சீன மருந்து தயாரிப்பு பற்றிய நிகழ்ச்சியில் பின்விளைவுகள் இல்லாத மருந்தாக கருதப்படும் பாரம்பரிய மருந்து தயாரிப்புக்கு சீன அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை நன்றாக அறிய முடிந்தது. தியன் ஜின் மாநகரின் பாரம்பரிய மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் வளர்ச்சி இதை நீரூபிக்கிறது. பண்டைக்கால கசாயம் எனும் மூலிகைச்சாற்றின் அடிப்படையை கொண்ட இந்த பாரம்பரிய மருத்துவம், இந்தியாவிலும் கிராமங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

க்ளீட்டஸ்: நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி தென்பொன்முடி தெ. நா. மணிகண்டன் எழுதிய கடிதம். சீனப் பயணம் மேற்கொண்ட சிறப்பு நேயர்களுடனான கலந்துரையாடல் கேட்டேன். அதன் மூலம் 1984ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை சீனப் பயணம் சென்று திரும்பிய நேயர்கள் சீன வானொலி கேட்க ஆரம்பித்தது, சீன வானொலி அவர்கள் வாழ்வில் எப்படி ஒன்றுகலந்துவிட்டது, சீன பயண அனுபவத்தில் அவர்கள் அறிந்த புதுமையான தகவல்கள் என பலவற்றை அறிந்துகொள்ள முடிந்தது.

கலை: ஆரணி ஏ. ஆர். விக்னேஸ் எழுதிய கடிதம். சீன வானொலியின் செய்திகளின் மூலம் 7வது ஆசிய ஐரோப்பிய உச்சி மாநாடு, உச்சி மாநாட்டில் சீன அரசுத்தலைவர் கலந்து கொண்டு நிகழ்த்திய உரை, சீனாவும் சிங்கப்பூரும் தாராள வர்த்தக உடன்படிக்கை கையொப்பம் இட்டமை என பல தகவல்களை அறிந்துகொண்டேன். ஆப்பிரிக்க பொருளாதார ஒருங்கிணைப்பு பற்றிய கட்டுரையும் சிறப்பு.

க்ளீட்டஸ்: சீனாவின் மனித உரிமை லட்சியத்தின் வளர்ச்சி பற்றி மதுரை 20. என். ராமசாமி எழுதிய கடிதம். மனித உரிமை லட்சியத்துடன் கூட்டாக வளர்ந்த 30 ஆண்டுகள் பற்றிய ஆய்வுக்கூட்டத்தை அண்மையில் சீன மனித உரிமை ஆய்வகம் நடத்தியது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பின் மூலம் சீனச் சமூக நிலைமையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், மனித உரிமைத்துறையிலும் விரைவான வளர்ச்சி காணப்பட்டுள்ளது. இது பாராட்டுதலுக்குரியதாகும்.

கலை: இலங்கை காத்தான்குடி மு. இ. பா. நஸ்ஹா எழுதிய கடிதம். அறிவை வளர்க்கவும், செய்திகளின் மூலம் தகவல்களை அறியச்செய்யவும் உதவும் ஊடகங்ளின் பணியில் உங்களது பணி சிறப்பானது. அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் ஓர் ஊடகமாக எமக்கு சீன வானொலி விளங்குகிறது. அர்ப்பணிப்பும், கடமையுணர்வும் கொண்டு எமக்காக பணியாற்றும் சீன வானொலிக்கு நன்றிகள்.

க்ளீட்டஸ்: அன்றாட சீன மொழி நிகழ்ச்சி குறித்து வேலூர் கு. ராமமூர்த்தி எழுதிய கடிதம். நிகழ்ச்சியை வழங்கும் கலையரசி அவர்கள், சீன மொழியை கற்பிக்கும்போது, உடன் வழங்கும் அறிவிப்பாளரின் வினாக்களுக்கு அழகாக தமிழில் விளக்கமளித்து சொல்லிக்கொடுப்பது அழகாக உள்ளது. சீன மொழி உடனே புரியாத போதும், கனிவாக சொல்லிக்கொடுக்கும் பாங்கு நிகழ்ச்சியை கேட்க ஆர்வத்தை தூண்டுகிறது.

கலை: நாமகிரிப்பேட்டை கவித்துளி சக்தீஸ்வரன் சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சிவகாமி அவர்கள் வழங்கிய திபெத்தின் லாசா நகரம் பற்றிய தகவல்கள் அடங்கிய தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியை கேட்டேன். லாசா நகரம் பற்றிய செய்திகள், சுற்றுலா இடங்கள் தொடர்பான அரிய தகவல்கள் என அழகாக தொகுத்தளித்தமைக்கு பாராட்டுக்கள்.

மின்னஞ்சல் பகுதி

......பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன்......

ஜனவரி திங்கள் 25ஆம் நாள் வழங்கிய செய்தித் தொகுப்பு மக்களுடன் இணைந்து சீன வசந்த விழா கொண்டாடிய சீன அரசுத்தலைவரை நினைத்து மிகவும் பெருமை கொள்ள செய்தது. நாட்டு மக்களின் நலன் மீது அக்கரை கொண்டு அவர்களுடன் வசந்த விழாவை சேர்ந்து கொண்டாடியது நில நடுக்க சோகத்தையும் மறக்க செய்து, அந்த மாநிலத்தின் மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்து இருக்கும். மக்களின் மனதை அறிந்து நடக்கும் சீனத் தலைவர்களின் இது போன்ற கொண்டாட்ட நடவடிக்கைள் பாராட்டப் படவேண்டியவை.

......வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்......

பிப்ரவரித் திங்கள் 13 ஆம் நாள் இடம்பெற்ற உங்கள் குரல் நிகழ்ச்சியில் அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் இருபதாவது கருத்தரங்கில் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி தொடர்ந்து இடம்பெற்றது. நிகழ்ச்சியின் துவக்க அறிவிப்பை மாற்றிய நண்பர் கலைமகள் அவர்களுக்கு என் நன்றி. இன்றைய நிகழ்ச்சியில் என்னுடைய உரையின் பிற்பகுதி மற்றும் முனைவர் ந.கடிகாசலம் அவர்களின் உரையின் முற்பகுதி ஆகியன இடம்பெற்றன. மிக்க நன்றி. காலதாமதமின்றி, கருத்தரங்கு நிகழ்ச்சியினை உங்கள் குரல் நிகழ்ச்சியில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்தமைக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

…விஜயமங்க‌லம் குணசீலன்......

அமெரிக்க அரசுத்லைவர் ஒபாமாவின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் பற்றிய செய்தித்தொகுப்பு கேட்டேன். தம்முடைய ஆட்சியின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்களுக்கு நிறய பயன்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அவருடைய எண்ணம் விரைவில் நிறைவேறி மக்களுக்கு நல்லது நடக்கும் என நம்பலாம். புதிய அமெரிக்க அரசுத்தலைவரது பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்.

......பாண்டிச்சேரி N.பாலகுமார்......

சீன கதை நிகழ்ச்சியில் பேரழகி சி ஷு கதையின் கடைசி பாகம் கேட்டு மகிழ்ந்தேன். இக்கதையின் ஆரம்பம் முதல் கேட்டு வருகிறேன். கதையில் வரும் பாத்திரங்கள், மிக கூர்மையாக கவனிக்கா விட்டாலும், கதையின் ஒட்டத்தை தெளிவாக புரிந்துக் கொள்ளமுடிந்தது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல ஒரு கதை கேட்ட மகிழ்ச்சி அளித்தது. குறிப்பாக கதை வாசிக்கும்போது நான் இருப்பதில்லை. ஏதோ ஒரு பாத்திரமாகிவிடுகிறேன் சீன கதை நிகழ்ச்சியில் கதை கேட்பது என்பது, துவக்கத்தில் "அறுக்குதுப்பா" என்று நினைப்பேன். இப்போது அந்த முடிவை மாறிக்கொண்டேன். கதையின் கதாபாத்திரங்களை கண்முன் நிறுத்தியதற்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

கீழ்குந்தா கே. கே. போஜன்

சீன வசந்தவிழா மற்றும் புத்தாண்டின் கொண்டாட்டம் பற்றி நிகழ்ச்சிகள் மூலம் அறிந்துகொண்டேன். இந்தியாவில் பொதுவாக புத்தாண்டு நாளில் தேசியக் கொடியை தலைவர்கள் ஏற்றுவதில்லை. ஆனால் சீனாவில் புத்தாண்டு நாளில், தியென்னான்மென் சதுக்கத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மரியாதை செய்யப்படுவதை அறிந்துகொள்ள முடிந்தது. விழாவை கொண்டாட அரசு தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் உதவித்தொகை வழங்கியதை கேட்டு மகிழ்ந்தேன். குறிப்பாக சின்ச்சியாங் உய்கூர் சிறுபான்மை தேசிய இன மக்கள் உதவித்தொகையை பெற்று சிறப்பாக விழாவை கொண்டாடினார்கள் என்பதை கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.

……ஊத்துக்குளி க.ராகம் பழனியப்பன்……

பிப்ரவரி 13ம் நாளன்றைய சீனாவின் வட பகுதியில் வறட்சி நிலைமை பற்றிய செய்தி தொகுப்பு கேட்டேன். பல தகவல்களை அறிய முடிந்தது விமானம் மற்றும் ராக்கெட் துணை கொண்டு செயற்கை மழை பெய்வித்ததை அறியும் போது சீன அரசின் நடவடிக்கைகளை எண்ணி வியக்கிறேன். விவசாயிகள் நலனில் அக்கறை காட்டும் அரசுக்கு பாராட்டுக்கள்.

……விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன்……

பிப்ரவரி 9ம் நாளன்றைய •சீன உணவு அரங்கம்• நிகழ்ச்சி கேட்டேன். சீன மொழியில் உயர்வு என்று பொருள்படும் இனிப்பு வகை உணவுப் பொருள் தயாரிப்பை அறிந்தேன். இதே முறையில் மக்காச்சோளம் இல்லாமல் இங்கும் தயாரிக்கப்படுகிறது. வீடுகளிலும் தயாரிப்பார்கள். தேனீர் விடுதியில் நிச்சயம் கிடைக்கும். இதற்கு இங்கு கஜீர் என்று கூறுவார்கள். நான் சீனா வரும்போது வாணி அவர்கள் இதை எனக்கு தயாரித்து தரட்டும். தமிழ்ப்பிரிவு பணியாளர்கள் இங்கு வரும்போது நாங்களும் உயர்வு (கஜீர்) மூலம் வரவேற்போம்.

……செந்தளை என்.எஸ்.பாலமுரளி……

பிப்ரவரி 8ம் நாளன்றைய நேயர் விருப்பம் நிகழ்ச்சி கேட்டேன். நேயர்களின் விருப்பத்திற்கு ஏற்ற பாடல்களை உடனுக்குடன் வழங்குவது சீன வானொலி தமிழ்ப்பிரிவின் முக்கியப் பணியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிப்ரவரி 11ம் நாளன்றைய விளையாட்டுச் செய்திகளை கேட்டேன். விளையாட்டுப் போட்டிகளின் மீதான சீன மக்களின் கவனம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர்கள் அளிக்கும் ஆதரவு மூலம் வீரர்கள் ஊக்கமடைவார்கள்.

......ஊட்டி. எஸ்.நித்தியா......

பிப்ரவரி திங்கள் 11 ஆம் நாள் புதன் கிழமை அன்று ஒலிபரப்பான விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சியைக் கேட்டேன்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி முடிவடைந்த போதிலும் அதன் மீது சீனர்கள் கொண்டுள்ள ஆர்வத்தை பற்றி அறிந்தேன். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வரலாற்றில் என்றுமே அழியாத இடத்தை பிடித்துள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் போட்டியின் மூலம் ஈக்கப் பட்டுள்ள சீன‌ மக்கள்

தங்களது திறமைகளை வெளிக்காட்ட பெய்சிங் ஒலிம்பிக் ஒரு தூண்டு கோலாக அமைந்ததில் நாம் அனைவரும் பெருமை அடைவோம்.

முனுகப்பட்டு, பி. கண்ணன்சேகர்

பிப்ர‌வரி 23ஆம் நாள் திபெத் தன்ன‌ட்சிப் பிர‌தேச‌த்தின் புத்தாண்டு நாள் என்ப‌தை அறிந்தேன். திபெத் ம‌க்க‌ளின் வாழ்க்கை முன்னேறிய சூழ்நிலையில் இந்த‌ புத்தாண்டு, ம‌கிழ்ச்சிக்கு குறைவில்லாது இருக்கும் என‌ க‌ருதுகிறேன். விவ‌சாய வளர்ச்சிக்கும், ஆய‌ர்களின் மேம்பாட்டுக்கும் சீன‌ ந‌டுவ‌ண் அரசு மேற்கொண்ட சிற‌ப்பான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளால் உற்சாக‌ கொண்டாட்ட‌ம் குறைவில்லாது ந‌ட‌க்கும். ந‌ம்பிக்கையோடு ந‌டக்க‌ிவுள்ள இந்த புத்தாண்டு மகிழ்ச்சி, திபெத்தில் ம‌ட்டும‌ல்லாது சீனா முழுக்க‌வும் எதிரொலிக்க‌ வாழ்த்துகிறேன்.