ஆர்சிஇபி உடன்படிக்கையின் கையொப்பம் பலதரப்புவாதத்தின் வெற்றி
2020-11-15 23:17:36

8 ஆண்டுகளில் 28 சுற்று அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் மூலம், பிராந்திய பன்முகப் பொருளாதாரக் கூட்டாளியுறவு உடன்படிக்கையில் கையொப்பமிடும் விழா நவம்பர் 15ஆம் நாள் காணொளி வழியாக தடையின்றி நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக, உலகளவில் மிக அதிகமான மக்கள் தொகையும் மிகப் பெரிய வளர்ச்சி ஆற்றலும் கொண்டிருக்கும் தாராள வர்த்தக மண்டலத்தின் கட்டுமானம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும்.

இது, பிரதேசப் பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டை ஆழமாக்கி, கரோனா பாதிப்பில் சிக்கியுள்ள உலகப் பொருளாதாரத்துக்கு இயக்காற்றலைக் கொண்டு வரும் அதேவேளை, பிராந்திய நாடுகள் பலதரப்புவாதத்தையும் தாராள வர்த்தகத்தையும் ஆதரிக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. மேலும், திறப்பு மற்றும் ஒத்துழைப்பானது, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் சரியான வழிமுறையாகும் என்பதும் இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தாராள வர்த்தகம் தொடர்பான இதர உடன்படிக்கைகளுடன் ஒப்பிடுகையில், மேலும் பெரும் சகிப்புத் தன்மையுடைய ஆர்சிஇபி எனும் பிராந்திய பன்முகப் பொருளாதாரக் கூட்டாளியுறவு உடன்படிக்கையில், வர்த்தக முதலீட்டின் தாராளமயமாக்கம் மற்றும் வசதிமயமாக்கம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் எண்ணியல் பொருளாதார காலத்தின் தேவைக்குப் பொருந்திய அறிவுசார் சொத்துரிமை, மின்னணு வணிகம் உள்ளிட்ட அம்சங்களும் இவ்வுடன்படிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுடன்படிக்கையின் உயர்தரம் மேலும் முக்கியமானதாகும். சுங்கவரி இல்லா உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கையும் சேவை வர்த்தகம் மற்றும் முதலீட்டின் திறப்பு அளவும் முந்தைய 10+1 உடன்படிக்கையை விட உயர்வு. குறிப்பாக, சீனா-ஜப்பான் இடையேயும் ஜப்பான்-தென் கொரியா இடையேயும் புதிதாக உருவாக்கப்பட்ட தாராள வர்த்தக உறவினால், இப்பிரதேசத்துக்குள்ளான தாராள வர்த்தக நிலை பெரிதும் உயர்த்தப்பட்டுள்ளது.