கொவைட்-19, பொருளாதார பிரச்னைகளுக்கான பிரிக்ஸ் தீர்வுகள்
2020-11-18 19:15:45

கொவைட்-19, பொருளாதார பிரச்னைகளுக்கான பிரிக்ஸ் தீர்வுகள்

காலநிலை மாற்றம், தீவிரவாதம், பொருளாதாரச் சரிவு, தற்சார்புவாதம், வறுமை என பல பிரச்னைகளை உலக நாடுகள் எதிர்கொண்டு வந்தாலும், அழுத்தம் அதிகமாகவும் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியதுமான பிரச்னையாக இருப்பது கொவைட்-19 நோய்தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு. தீவிரவாதம் போன்றே, வைரஸ் தொற்றுக்கும் மதம், இனம், எல்லை என எவ்வித பேதமுமின்றி அனைவரையும் தாக்கக் கூடியது. இப்பிரச்னையை வர்த்தகம் அல்லது இன்ன பிற விவகாரங்களைப் போல பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்று காத்திருக்கவும் முடியாது, உடனடித் தீர்வு அவசியமாகிறது.

இதுசமயம், மற்ற விவகாரங்களைப் போல கரோனா வைரஸ் தடுப்பிலும் அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல. அதற்கு ஒரே தீர்வு உலக நாடுகள் ஒன்றாக இணைந்து நிற்பதுதான். அத்தகைய ஒற்றைக்குரல்தான், பிரிக்ஸ் நாடுகளின் 12ஆவது மாநாட்டில் எதிரொலித்தது. கொவைட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், சரிந்துள்ள உலகப் பொருளாதாரத்தை மீட்கவும் இம்மாநாட்டில் பிரிக்ஸ் தீர்வு வழிமுறைகளை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மொழிந்துள்ளார். தொற்றுநோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கான கொவேக்ஸ் வசதிகளில் சீனா இணைந்துள்ளதையும், பிரிக்ஸ் நாடுகளில் தேவைப்படுவோருக்கு மருந்து விநியோகம் செய்யப்படும் என்பதையும் அவர் அழுத்தம்பட தெரிவித்துள்ளார்.

‘ரஷியா மற்றும் பிரேசிலுடன் இணைந்து 3ஆம் கட்ட தடுப்பு மருந்து சோதனை, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுடனான ஒத்துழைப்பு’ என தனது சொல்லுக்கு ஏற்ப சீனா செயல்பட்டும் வருகிறது. அதேபோல, பாரம்பரிய மருத்துவம் தொடர்பான ஒரு கருத்தரங்கை பிரிக்ஸ் நாடுகள் நடத்த வேண்டும் என்றும் கொவைட்-19 தடுப்புக்கு பாரம்பரிய மருத்துவத்தின் பங்குகளைக் கண்டறிய வேண்டும் என்றும் சீனா மொழிந்துள்ளது வரவேற்கத்தக்கது.

பலதரப்புவாதத்தின் முக்கியத்துவம் பற்றி தொடர்ச்சியாக உலக மேடைகளில் முழங்கி வரும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும். வேகமான இணையம், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கூட இணைய வழி வர்த்தகம், இணைய வழிக் கல்வி என்ற வேகமான உலகமயமாக்கலில் தற்சார்பு மற்றும் தன்நாட்டுக்கே என்ற வாதம் ஏற்பானது அல்ல. பலதரப்புவாதமும், சமமான மற்றும் நேர்மையான அணுகுமுறைதான் நாடுகளுக்கு இடையேயான போர்களையும், சண்டைகளையும் தவிர்க்கும். மாறாக, அரசியலில் ஆதிக்கம் செலுத்த நினைப்பதும், சுயலாபத்தில் ஈடுபடுவதும் குழப்பங்களைத்தான் கொண்டு வரும் என்று இம்மாநாட்டில் சீனா பதிவு செய்துள்ளது கவனிக்கத் தக்கது.

இம்மாநாட்டில் கொவைட்-19 தவிர அதிகம் கவனம் பெற்ற விவகாரம் உலகப் பொருளாதார மீட்சி. குறிப்பாக, பிரிக்ஸ் நாடுகள் ஒன்றாக இணைந்து எப்படி புதிய தொழில்புரட்சியை ஏற்படுத்துவது, அதனை எப்படி வேகப்படுத்துவது என்பன குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பின்படி, சீனாவின் சியாமென் மற்றும் ஃபுஜியன் மாநிலத்தின் சியாமென் நகரில் புத்தாக்க மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.  தொழிற்சாலை மற்றும் விநியோகத் தொடர்பை பாதுகாப்பது, பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது ஆகியவை பொருளாதார மீட்சிக்கு உறுதுணையாகும். அதற்கு உரிய வழிவகைகளை ஏற்படுத்தி தருவது குறித்து பிரிக்ஸ் தலைவர்களின் இச்சந்திப்பில் பதிவு செய்யப்பட்டது.

2020இல் உலகின் பொருளாதார வளர்ச்சி 4.4 விழுக்காடு சுருங்கும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு நான்கில் ஒரு பகுதி; உலக மக்கள் தொகையில் 40 விழுக்காடு. எனவே, பிரிக்ஸ் நாடுகளின் ஆரோக்கியமான வளர்ச்சியும், பொருளாதார மீட்சியும் உலகுக்குப் பயனளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பாண்டுரங்கன், பெய்ஜிங்.