ரஷிய - துருக்கித் தலைவர்கள் தொலைபேசி வழித் தொடர்பு
2020-11-25 12:34:51

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் மற்றும் துருக்கி அரசுத் தலைவர் ரெசிப் தயிப் எர்தோகன் ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நாகா பிரதேச நிலைமை குறித்து விவாதித்தனர்.

இவ்வுரையாடலின் போது, நாகா பிரதேசத்தில் ரஷிய அமைதிக் காப்புப் படை வீரர்கள், போர் நிறுத்தத்தை பேணிக்காப்பது, அப்பாவி மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்வது ஆகிய பணிகளை மேற்கொண்டு வருவதைப் புதின் எடுத்துக்கூறினார்.

நாகா பிரதேசத்தில் வீட்டுக்கு திரும்பும் அகதிகளுக்கு உதவி வழங்குவது, அடிப்படை வசதிகளை மீண்டும் உருவாக்குவது, மத மற்றும் பண்பாட்டு வசதிகளை பாதுகாப்பது உள்ளிட்ட மனித நேய உதவிகளை மேற்கொள்ள வேண்டியது தற்போதைய முக்கியக் கடமையாகும் என்று இரு தரப்பினரும் கூறினர்.

மேலும், இரு தரப்புப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவு வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்றும், தொற்று நோய் தடுப்பு துறையின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தடுப்பூசி ஆய்வு, உற்பத்தி, பயன்பாடு ஆகிய துறைகளில் இரு நாடுகள் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் என்றும் இரு தரப்பினரும் தெரிவித்தனர்.