உலகப் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சி பற்றிய வட்ட மேசை பேச்சுவார்த்தை
2020-11-25 12:11:02

உலகப் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சி பற்றிய வட்ட மேசை பேச்சுவார்த்தை

சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 24ஆம் நாள் பெய்ஜிங்கில் காணொளி வழியாக, உலக வங்கித் தலைவர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர், உலக வர்த்தக அமைப்பின் துணைத் தலைமை இயக்குநர், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமை இயக்குநர், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் தலைமைச் செயலாளர், நிதி நிலைத்தன்மை அவையின் தலைவர் ஆகியோருடன் இணைந்து 5ஆவது வட்ட மேசை பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். தொற்று நோய் பரவலுக்குப் பிந்தைய காலத்தில் உலகப் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவது என்ற தலைப்பில், உலகப் பொருளாதார நிலைமை, சீனப் பொருளாதார நிலைமை, உலகப் பொருளாதார மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

லீ கெச்சியாங் கூறுகையில், 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், சீனா சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தை அடிப்படை இயக்காற்றலாகக் கொண்டு, சந்தை, சட்டம் மற்றும் சர்வதேசமயமான வணிகச் சூழ்நிலையின் உருவாக்கத்தை சீனா விரைவுபடுத்தும். புதிய வளர்ச்சிக் கட்டமைப்பை உருவாக்கும் சீனா, உள்நாட்டுத் தேவையையும் வெளிநாட்டுத் திறப்பையும் விரிவாக்கி, உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பை முன்னேற்றி, அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பை வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் அடிப்படையில் மேலும் பெரும் கூட்டு வெற்றியை நனவாக்கப் பாடுபடும் என்று சுட்டிக்காட்டினார்.

கோவிட்-19 நோய் தடுப்பில் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ள சீனாவுக்கு இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சர்வதேசப் பொருளாதார நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் பாராட்டு தெரிவித்ததோடு, சீனாவுடன் இணைந்து நிதி, வேலை வாய்ப்பு, வறுமை நிவாரணம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்கி, பலதரப்புவாதத்தை ஆதரித்து, உலகின் வளர்ச்சி மற்றும் செழுமையை மேம்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தனர்.