ஒற்றுமையுணர்வே பெருந்தொற்றை வெல்லும் பெரும் ஆயுதம்
2021-05-27 11:05:18

கரோனா பெருந்தொற்றினால் உலகம் பெரும் இன்னலுக்குள்ளாகி வரும் நிலையில் அத்தொற்றினால் உலகத்துக்குச் சில முக்கிய படிப்பினைகள் கிடைத்துள்ளன. அவற்றுள் முதன்மையானது மருத்துவக் கட்டமைப்பு மேம்பாடு. உலகளவில் வளர்ந்த நாடுகளாகத் திகழும், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் ஆகியன கூட கரோனா பெருந்தொற்றினால் பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்திருக்கின்றன. வளர்ந்த நாடுகளிலேயே இந்த நிலை என்றால் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நிலைமையோ இன்னும் மோசம். இந்த உயிரிழப்புகள், திடீரென ஏற்படும் பெருந்தொற்றினைச் சமாளிப்பது எப்படி? அதற்கான மருத்துவக்கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியம் ஆகியனவற்றைச் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கின்றன. தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது, மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியன வெறுமனே ஒரு நாட்டைச் சார்ந்து நடக்கும் செயல்கள் அல்ல. அதற்குப் பல நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. இத்தகு ஒத்துழைப்பிற்கு உலகளாவிய நாடுகளிடையே ஒருங்கிணைப்பு தேவைப்படுகின்றது. அத்தகைய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி உலகளாவிய பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவுள்ளதாக அண்மையில் நடைபெற்ற உலகச் சுகாதார மெய்நிகர் உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் ஒரு மனதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த அறிவிப்பு கோவிட் 19 பெருந்தொற்றை வெல்வதற்கான முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.

கண்ணுக்குத் தெரியாத ஒரு தீ நுண்மி இன்று உலகையே அச்சுறுத்தி் கொண்டிருக்கின்றது. இந்த அச்சுறுத்தலை வென்றெடுக்க வேண்டிய பெரும் கட்டாயத்தில் உலகம் இருக்கின்றது. ஆனால், வேறுபட்ட நாடுகளில் காணப்படும் வேறுபட்ட வகைக் கரோனா தொற்று இந்தப் போரை மேலும் கடினமானதாக மாற்றி வருகின்றது. இந்த இக்கட்டினை எப்படி வெல்வது? என்பதற்கான விடையை உலகளாவிய சுகாதார உச்சி மாநாட்டிற்குப் பின் வெளியிடப்பட்ட ரோம் பிரகடனம் வெளிப்படுத்தியுள்ளது. உலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்துவது மற்றும் தங்களுக்கான முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியவற்றைக் குறிப்பிடும் இந்தப் பிரகடனம், உலகளவில் அதிக மக்கள் தொகையையும் பெரும் பொருளாதார வலிமையும் கொண்டதாக இருக்கும் ஜி20 நாடுகள் குழு போன்ற அமைப்புகள் கடுமையான சுகாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை எதிர்காலச் சந்ததியினருக்கும் கற்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

தொற்றுநொய்க்கு எதிரான உலகளாவிய முன்னெடுப்புகள் மக்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தையும் முதலிடத்தில் வைப்பதற்குரிய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதோடு இப்பிரச்சினையை மூட நம்பிக்கைகளின் அடிப்படையிலன்றி அறிவியலின் அடிப்படையில் அணுக வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக இப்பணியில், தொற்றுநோயை முன்வைத்து அரசியல் செய்வதையும் களங்கம் ஏற்படுத்துவதையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும். இப்போக்கானது உலகளாவிய நிலையில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்து விடும்.

இன்றிருக்கும் நிலையில் கரோனா பெருந்தொற்றை வெல்வதற்கான சிறந்த ஆயுதமாகத் தடுப்பூசியே கருதப்படுகின்றது. ஆனால், தடுப்பூசிகளை விநியோகிப்பதில் உலகளவில் சமச்சீரற்ற போக்குக் காணப்படுகின்றது. இதனிடையில், தடுப்பூசியை வழங்குவதில் காணப்பட்டு வரும் ஏற்றத்தாழ்வு பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிக்குப் பெரும் சவாலாக இருப்பதாக உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்தல், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான தடுப்பூசி விநியோகத்தை அதிகரித்தல், உலகச் சுகாதார அமைப்பின் தடுப்பூசிப் பகிர்வு திட்டத்திற்கு ஆதரவளித்தல் ஆகிய முடிவுகளை எடுத்துள்ளனர்.

தடுப்பூசி விநியோகத்தைப் பொருத்தவரை தேசியவாதச் சிந்தனையை நிராகரித்து நியாயமான விநியோகத்தை ஊக்குவிக்க வேண்டும். அதனடிப்படையில் உலகளாவிய தொற்று எதிர்ப்பு ஒத்துழைப்பு  மற்றும் பொதுச் சுகாராதரத்தை மேம்படுத்தும் பணியில் சீனா ஈடுபட்டு வருகின்றது. தங்கள் நாட்டில் ஏற்பட்ட பெருந்தொற்றை மிகத் திறமையாகக் கையாண்டு கட்டுக்குள் கொண்டு வந்த சீனா, தற்போது வரை 80க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் மூன்று சர்வதேச நிறுவனங்களுக்குத் தடுப்பூசிகளை வழங்கியுள்ளதுடன் தடுப்பூசி தேவைப்படும் 40 நாடுகளுக்குத் தடுப்பூசிகளை ஏற்றுமதியும் செய்துள்ளது.

இதனிடையில் இவ்வுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், மனித குலத்துக்குச் சவால் விடுக்கும் கடைசி தொற்றாக கரோனா தொற்று இருக்காது என்பதால் ஐக்கிய நாடுகள் அவை மற்றும் உலகச் சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளை வலுப்படுத்தி, உலகளாவியப் பொதுச் சுகாராத அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் முக்கியக் கட்டத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், உலகின் முக்கிய நாடுகள் பெருந்தொற்றைத் தோற்கடிப்பதோடு நின்றுவிடாமல் எதிர்காலத் தலைமுறையினரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் உலகளாவிய பொதுச் சுகாதார முறைக்கு அடித்தளம் அமைப்பதிலும் முன்னிலை வகிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.