இந்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் நடைமுறைகள் நிறைவு
2021-11-25 11:21:26

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் நடைமுறைகளை இந்திய அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், நவம்பரின் இறுதியில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் இந்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் 24ஆம் நாள் தெரிவித்ததாக இந்திய செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டது.

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி 19ஆம் நாள் வழங்கிய உரையில், வேளாண் பொருட்களின் புழக்கம் தொடர்பான 3 சட்டங்களைத் திரும்ப பெறுவதாகத் தெரிவித்தார். இதற்கு இந்திய விவசாயிகள் வரவேற்பு தெரிவித்தனர். இருப்பினும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வீடு திரும்பத் திட்டமிடவில்லை. வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.