வளரும் நாடுகளின் நம்பத்தக்க கூட்டாளி சீனா
2022-01-15 19:35:22

ஜி77 குழுவின் தலைவர் பதவியை ஒப்படைக்கும் நிகழ்வு உள்ளூர் நேரப்படி ஜனவரி 14ஆம் நாள் இணையவழியில் நடைபெற்றது. இக்குழுவின் 2021ஆம் ஆண்டிற்கான தலைவர் நாடான கினியாவின் வெளியுறவு அமைச்சர், 2022ஆம் ஆண்டிற்கான தலைவர் நாடான பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர், ஐ.நா. தலைமைச் செயலாளர், 76ஆவது ஐ.நா. பொது பேரவை தலைவர் ஆகியோர் இவ்விழாவில் உரை நிகழ்த்தினர். ஜி77 குழுவைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி சாங் ஜுன் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

கினியா தலைவர் நாடாக இருந்த போது மேற்கொண்ட முயற்சிக்கு நன்றியையும், தலைவர் நாடாகப் பொறுப்பேற்கும் பாகிஸ்தானுக்கு வாழ்த்துகளையும் சாங் ஜுன் முதலில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், 2030 நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் வளரும் நாடுகள் கடும் அச்சுறுதலை எதிர்நோக்குகின்றன. தற்போதைய நிலைமையில் ஜி77 குழு மற்றும் சீனாவின் பங்கு மேலும் முக்கியமானது. பல்வேறு தரப்புகளும் ஒன்றுபட்டு பொது வளர்ச்சிக்கான இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், பரந்தபட்ட வளரும் நாடுகளுடன் எப்போதுமே பொது எதிர்காலத்தை பகிர்ந்து கொள்ள விரும்பும் சீனா, இந்த நாடுகளுடன் தொடர்ந்து தொற்று நோய் தடுப்பு ஒத்துழைப்பை மேற்கொள்ளும். புதிய ஓராண்டில் ஜி77 குழுவின் உறுப்பு நாடுகளுடன் சீனா நெருக்கமான ஒத்துழைப்பை நிலைநிறுத்தி, வளரும் நாடுகளின் நேர்மையான நம்பத்தக்க கூட்டாளியாக செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.