• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திருமதி சித்ரா சிவக்குமார் அவர்களின் சி அன் பயணம்-1
  2015-03-12 09:43:50  cri எழுத்தின் அளவு:  A A A   

நாங்கள் சீஅன் நகரம் செல்லப் புறப்பட்டது மிகவும் எதேட்சயாக நடந்தது. பல வருடங்களாக செல்ல வேண்டும் செல்ல வேண்டும் என்று ஏற்பாடுகள் செய்த போதெல்லாம், அதை சாத்தியப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்த வருடம் பல மாதங்களாக, கிருஸ்துமஸ் விடுமுறை நாட்களில் எங்காவது செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், இந்த இடத்தைப் பற்றி எண்ணவில்லை. எந்தத் திட்டமும் டிசம்பர் 22ஆம் தேதி வரையிலும் தீட்டவுமில்லை. அன்று தான் திடீரென்று பயணம் மேற் கொள்ள வேண்டும் என்ற வேகம் ஏற்பட விழித்துக் கொண்டோம். பல ஊர்கள் பட்டியலில் இறுதியில் சீ'அன்னைத் தேர்ந்தெடுத்தோம். டெரகோட்டா வீரர்களைப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே குறி. 24ஆம் தேதியே கிளம்பத் தயாரானோம். சீனப் பயணம் மேற்கொள்ளத் தேவையான நுழைவு அனுமதி என் மகளுக்கும் என் தங்கையின் மகளுக்கும் இருக்கவில்லை. திங்களன்று காலையே சென்று பதிவு செய்து விட்டு, செவ்வாய் வாங்கிக் கொண்டு, புதனன்று கிளம்பியே விட்டோம். எங்கள் குடும்பமும் என் தங்கையின் குடும்பமும் சேர்ந்த ஆறுவர்.

நான் முனைவர் பட்டப் படிப்பிற்காக பல்கலைக்கழகத்தில் இவ்வருடம் சேர்ந்திருக்கிறேன். எங்கள் வகுப்பில் நான்கைந்து பேர்கள் தவிர, மற்ற அனைவருமே சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அறிமுக நாளன்று ஒரு மாணவி, தான் சீ'அன் நகரத்தவள் என்றும், யாரேனும் அங்கு செல்ல விரும்பினால், உதவி செய்யத் தயார் என்று கூறியது நினைவிற்கு வந்தது. உடன் அவரை விடுமுறை நாளென்றும் பாராமல், வி சாட் மூலம் தொடர்பு கொண்டேன். மறு நொடியே, எந்த இடம் பார்க்க வேண்டும் என்று கேட்டார். "டெரகோட்டா வீரர்கள் தான் முக்கியம். பிறகு என்ன இடமெல்லாம் பாhக்கலாம்" என்று அவரிடமே கேட்டேன். குறுகிய காலத்தில் இணையத்தில் ஆராய நேரம் இருக்கவில்லை.

சீ'அன் நகரத்திலிருந்து காக்கும் வீரர்களான டெரகோட்டா வீரர்கள் இருக்கும் இடம் இரண்டு மணி நேரப் பயணத்தில் லின் டொங் என்ற இடத்தில் இருக்கிறது என்று சொன்னார். இது வரையிலும் வீரர்கள் இருப்பது சீஅன் நகர் என்றே எங்கள் எண்ணத்தில் பதிந்திருந்தது. சென்று வந்தோர் கூறியது நினைவிற்கும் வரவேயில்லை. இப்போது எங்களுக்கு ஐயமின்றி லின் டொங் என்ற இடத்திற்கு நாங்கள் போக வேண்டும் என்று புரிந்தது. அப்படியென்றால் தங்குவது எங்கே? சீ'அன் நகரிலா? லின் டொங்கிலா? சீ'அன் நகரம் ஷான்சீ மாகாணத்தின் தலைநகர் என்ற காரணத்தினால், அங்கேயே தங்க முடிவு செய்தோம். விடுதிகளை விசாரித்து ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தோம்.

என் சக மாணவி செல்ல வேண்டிய மற்ற இடங்களை பற்றிய விவரங்களையும் தந்தார். டாக்ஸி கட்டணங்கள் மிகவும் அதிகம். டிசம்பர் மாதமென்பதால் குளிரும் அதிகமாக இருக்கும். அதனால் பார்த்துப் பயணம் செய்யுங்கள் என்ற அறிவுரையையும் தந்தார். அனைத்தையும் மனதில் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.

24ஆம் தேதி மதியம் கிளம்பி, மாலையில் அங்கு விமானத்தில் தரையிறங்கத் தயாரான போது, அறிவிப்பில் அப்போதைய சீதோஷணம் 0சி என்று சொன்னார்கள்.

நாங்கள் கிளம்பும் முன் பார்த்த விவரத்தின் படி இங்கு 3-8சி வரை இருக்கும் என்று எண்ணியிருந்தோம். பனியில் தான் இடங்களைப் பார்க்க வேண்டி இருக்குமோ என்று எண்ண ஆரம்பித்தோம். ஆனால் 0சி பனி இல்லாது இருந்தது ஆச்சரியமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. விடுதிக்கு வந்து சேர்ந்ததும், மாலையிலேயே எங்காவது சென்று வர வேண்டும் என்று தயாரானோம்.

தோழி சொன்ன ஹ_ய் மிங் ஜியே என்ற இடம் தங்கும் விடுதிக்கு அருகே இருந்ததால், விடுதியில் வழிகாட்டி மையத்தில் இருந்தோர், அந்த இடம் பார்க்க வேண்டிய இடம் என்று கருத்து தெரிவித்ததால், அங்கேயே சென்று இரவு உணவினையும் உண்டு வரலாம் என்று முடிவு செய்துக் கொண்டு கிளம்பினோம். அந்த வீதிக்கு இன்னொரு பெயர் முஸ்லிம் வீதி என்றும், உணவு நன்றாக கிடைக்கும் என்றும் கூறினார்கள். விடுதியிலிருந்து 10 நிமிட நடையில் இருக்கிறது என்றும் சொன்னார்கள். வெளியே வந்தும் குளிர் அதிகமாக இருக்கவே, -3சி என்று எண்ணுகிறேன், நடப்பதை விட டாக்ஸியில் செல்லலாம் என்று எண்ணம் கொண்டோம். சில அடிகள் தான் வீதியில் சென்றிருப்போம். நம்மூர் ஆட்டோ போன்ற ஒரு வண்டி செல்வதைக் கண்டோம். அது செல்வது மட்டும் ஆட்டோ போன்றது. ஆனால் நம்மூர் நாய்களைப் பிடித்துச் செல்லப் பயன்படுத்தும் சிறு அடைக்கப்பட்ட வண்டிதான் அது. குளிர் என்பதால் அது அப்படி அமைக்கப்பட்டு இருந்தது. எவ்வளவு என்று கேட்ட போது, 40 யுவான் என்றனர். 10 நிமிட நடையில் இருக்கும் இடத்திற்கு அத்தனையா என்ற கேள்வி எழுந்தது. இருந்தாலும், இந்த வண்டியில் செல்ல ஆசைப்பட்டதால், 15 யுவான்க்கு வந்தால் செல்வோம் என்று பேரம் பேசினோம். எங்களுக்குத் தெரிந்த கொஞ்ச சீனம் அங்கு எங்களுக்கு நன்றாகவே பயன்பட்டது. அவர்கள் பேரத்திற்குச் சம்மதித்து, வண்டியில் ஏறினோம். ஒரு வண்டியில் நான்கு பேர்கள் மட்டுமே செல்ல முடியும். இரண்டு வண்டிகள் பேசினோம். அந்தச் சவாரியும் சற்றே வித்தியாசமாகத் தான் இருந்தது. இறங்கும் போது, அந்த வண்டிக்கு என்ன பெயர் என்று கேட்டோம். அதற்கு "மோதி" என்று பெயராம். எங்கேயும் மோதிக் கொண்டே இருக்குமோ என்னவோ? இல்லை நம்ம நரேந்திர மோடி ஞாபகமாக வைக்கப்பட்டதோ என்னவோ?

குறிப்பிட்ட இடம் வந்ததும், அதற்கு மேல் வண்டி செல்லாது, நடந்து தான் செல்ல வேண்டும் என்று கூறி நிறுத்தினார்கள் மோதியை. இறங்கியதும் அவர்கள் காட்டிய வழியில் நடக்க ஆரம்பித்தோம். அது பெரிய சாலை. எதிரில் ஒரு ஓரத்தில் பல கடைகள் தெரிந்தன. சாலையைக் கடந்தோம். அந்த வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. அகலமான சாலையாக இருந்ததால், மெல்ல கடைகளை பார்த்த வண்ணம் சென்றோம்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040