• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகின் எட்டாம் அதிசயம்
  2015-03-12 09:47:39  cri எழுத்தின் அளவு:  A A A   

 

சீ'அன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதே, அங்கு அகழ்ந்து எடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டெரகோட்டா என்று கூறப்படும் களிமண் வீரர்களும், குதிரைகளும், தேர்களும் தான். அதைப் பற்றி அறிந்த சமயத்திலிருந்தே, அதைச் சென்று பார்த்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அடிக்கடி வந்து போகும். ஹாங்காங்கின் அருங்காட்சியகத்தில் டெரகோட்டா வீரர்களின் உருவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு பலரும் சென்று கண்டு வந்த போதும், அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியாத போது, எப்போதாவது நிச்சயம் அதைச் சென்று பார்ப்போம் என்ற விருப்பம் மட்டும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது. அதைக் காண சீ'அன் விமான நிலையத்தில் இறங்கிய போது, கனவு நனவானது என்ற மகிழ்ச்சி இருக்கவே செய்தது. அதை விட பெரு மகிழ்ச்சி அவ்விடத்தைச் சென்று சேர கிளம்பிய நேரம். சீ'அன் நகரத்திலிருந்து, இரண்டு மணி நேரப் பயணம். யுவான் சுவாங் தங்கி, வாழ்க்கையின் முக்கிய அரிய செயலைச் செய்து காட்டிய பெரிய காட்டு வாத்துப் பகோடாவைப் பார்த்த பின்னர், லின் டொங் நோக்கிப் பயணப்பட்டோம்.

வழி நெடுகிலும் சாலை மிகவும் அழகாக அமைக்கப்பட்டு இருந்தது. லின் டொங் ஊருக்குள் நுழையும் போதே நம்மால் வேண்டிய இடத்தை அடைந்து விட்டோம் என்ற அறிகுறிகள் தெரியும் வகையில் ஊர் அமைந்திருந்தது. ஒரே மாதிரியான மொட்டை மரங்கள் சாலையின் இரு மருங்கிலும் நின்று பயணிகளை வரவேற்றுக் கொண்டு இருந்தன. அவ்வூர் மாதுளம்பழத்திற்கு மிகவும் பெயர் போனது என்று தெரிந்தது. வழி நெடுகிலும் மாதுளம்பழக் கடைகள். அழகாக அடுக்கி வைக்கப்பட்ட பழங்கள்.

நாங்கள் சேர வேண்டிய இடத்திற்கு வந்து விட்டோம் என்று வண்டி ஓட்டுநர் சொன்ன இடம் மிகச் சிறிய சந்து. வாகனங்கள் நிறைந்த சந்து. இது என்ன, இப்படி சந்திலா இவ்விடம் இருக்கிறது என்ற ஐயம் எழுந்தது. அகழ்ந்து ஆராயும் இடத்தைச் சுற்றி இப்படித் தான் இருக்குமோ என்று உடன் எண்ணம் வந்தது. சந்தின் அருகே ஒருவர் அறிமுகமானார். அவர் தான் எங்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப் போகும் வழிகாட்டி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அங்கிருந்து அவர் எங்களை இன்னும் சிறு சந்துகளின் வழியே அழைத்துச் சென்றார். ஒரு அகண்ட பரப்பளவு கொண்ட நுழைவாயிலை கடைசியில் அடைந்தோம்.

பிரம்மாண்டமான பகுதியை ஒரு சந்தின் வழியே கொண்டு வந்து காட்டி விட்டார்களே என்ற வருத்தம் இருக்கவே செய்தது. நுழைவுச் சீட்டினை என் மகள் வாங்கி வர, நாங்கள் அனைவரும் எங்கள் கனவுப் பயணத்தின் முக்கியப் பகுதியைக் காணத் தயாரானோம்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040