• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் பற்றிய இந்திய அறிஞரின் கருத்துக்கள்
  2015-03-27 15:26:45  cri எழுத்தின் அளவு:  A A A   
மார்ச் 26ஆம் நாள் சீனாவின் போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2015ஆம் ஆண்டுக் கூட்டத்தில் 17 நாடுகளைச் சேர்ந்த 21 செய்தி ஊடகங்களின் தலைவர்கள் பரந்துபட்ட அளவில் விவாதித்தனர். அவர்கள் பட்டுப் பாதை முன்மொழிவு கையொப்ப விழாவில் பங்கெடுத்தனர். உரிய நேரத்தில் பரிமாற்ற அமைப்புமுறையைக் கட்டியமைத்து, மனிதர்களின் பரிமாற்றத்தை விரைவுப்படுத்தி, மூலவளங்களை ஒன்றுடன் ஒன்று பகிர்ந்துகொண்டு, புதிய ஒத்துழைப்பு மாதிரியைப் படைக்க அவர்கள் வாக்குறுதியளித்தனர்.

பட்டுப்பாதை இந்தியாவுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது. பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடல் வழிப் பட்டுப்பாதையின் ஆக்கப்பணி பற்றி இந்தியாவின் புதிய தலைமுறை ஊடகக் குழுமத்தின் வரைவு மற்றும் வளர்ச்சிப் பிரிவுத் தலைவர் திரு மாலன் சுப்ரமணியன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

1600 ஆண்டுகளுக்கு முன்பு சீனத் துறவி பா ஹியான் புத்த மத நூல்களைத் தேடி இந்தியாவிற்குத் தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். அவர் பயணம் செய்த வழி பின்னர் பட்டுப் பாதை என்று அழைக்கப்பட்டது. அவர் இந்தியாவிலிருந்து இந்தியப் பெருங்கடல் வழியாகச் சீனா திரும்பினார். அந்த வழி, 'கடல் வழியான பட்டுப்பாதை'என்றழைக்கப்படுகிறது. அமைதி, ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை, சேர்ந்து முன்னேறுதல், ஒருவரிடமிருந்து இன்னொருவர் பரஸ்பரம் கற்றுக் கொள்ளுதல், கடின உழைப்பு இவற்றின் அடையாளமாக பட்டுப்பாதை திகழ்கிறது.

பொருளாதாரக் கூட்டு முயற்சிகள் மூலம் இந்தப் பழைய பட்டுப்பாதையில் உள்ள பகுதிகளை முன்னேற்றம் அடையச் செய்வதற்காக சீன அதிபர் ஷீ ச்சின்பிங் சில முயற்சிகளை முன்மொழிந்துள்ளார். அண்டை நாடுகளுடன் இணைந்து ஆசியாவின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது, ஆசியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவது என்பன இந்த முயற்சியின் பின்னுள்ள நோக்கங்கள்.

உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஊக்கம் அளிப்பது, குறைந்த செலவில் கட்டுமானத்திற்கான புதிய முறைகளைக் கண்டறிவது, வர்த்தகம் முதலீடு இவற்றுக்கான தடைகளை அகற்றுவது ஆகியவற்றிற்கு இந்தப் பட்டுப்பாதை வழியை உருவாக்கும். இந்தியா– சீனம் கூட்டுறவில் ஏற்கனவே உருவாக்கப்பட்டு வரும், வங்காளதேசம் – சீனம் – இந்தியா – மியான்மர் பொருளாதார முற்றம், இந்தியாவில் நிறுவப்படும் சீனத்தொழில் பூங்காக்கள் ஆகியன இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

அண்மையில் உலகின் கவனத்தை ஈர்க்கும் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் ஆயத்தப் பணி பற்றி அவர் கூறியதாவது:

"ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி, ஆசியப் பிரதேசத்தின் அடிப்படை வசதிக் கட்டுமானத்தை மேலும் விரைவுபடுத்தும். பட்டுப்பாதை பொருளாதார மண்டலமும், ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியும், ஒரு வகை புத்தாக்கம் ஆகும் என கருதுகின்றோம்" என்றார் அவர்.

அவர் மேலும் கூறியதாவது:

இந்திய பெருங்கடலில் சீனாவின் பொருளாதார ஆர்வங்கள் அண்மைக்காலமாக வேகமாக அதிகரித்து வருகிறது. இது இந்தியாவிற்கு சில கவலைகளை ஏற்படுத்தியுள்ளது இலங்கையிலும், மியான்மரிலும், பாகிஸ்தானிலும் துறைமுகங்கள் கட்டிக் கொடுக்க சீனா முன்வந்துள்ளது. அவை கடல் வாணிபத்திற்கான சிவில் துறைமுகங்கள்தான் என்ற போதிலும் இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை அது வலுப்படுத்தும் என்று இந்தியா கருதுகிறது.

தனது நாட்டில் உள்கட்டமைப்பை மேம்படுத்த சீனாவோடு கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும்போது சீனாவோடு நெருக்கம் கொள்ளக் கூடாது என்று தனது அண்டை நாடுகளைத் தன்னால் கட்டாயப்படுத்த இயலாது என்பதும் இந்தியாவிற்குப் புரிகிறது.

சீனாவின் பட்டு பாதை முயற்சிகளை மறித்து நிற்பதற்கு பதிலாக, இந்தியா அதனுடன் ஒத்துழைப்பதன் மூலம் தனது நாட்டின் நலன் சார்ந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றே நான் கருதுகின்றேன்.

வெவ்வேறு நாடுகள், மதங்கள், பிரிவுகள் ஆகியவற்றை சேர்ந்த மக்களிடையே செய்து கொள்ளப்படும் பரிமாற்றங்கள் ஆசியாவின் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதால், அரசியல் அமைப்புகளையோ, அரசையோ சாராத தனி மனிதனாகிய என்னை பட்டுப் பாதை கவர்கிறது என்றார் அவர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானிஸ்தான் தேசிய அமைதி போக்கு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது பற்றிய தீர்மானம்
• சியோல் நகரில் தாட் பரவலை எதிர்க்கும் பேரணி நடைபெற்றது
• உலக வறுமை ஒழிப்பு பற்றிய கருத்தரங்கு
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040