• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிச்சுவான் இசை நாடகம்
  2016-10-14 17:25:46  cri எழுத்தின் அளவு:  A A A   

பிளம் மலர் போல் நறுமணம் வீசும் ச்சுங் சிங் நகரின் சிச்சுவான் இசை நாடக அரங்கம்

சிச்சுவான் இசை நாடகம், சீனாவின் தென் மேற்கு பிரதேசத்தில் பரவி வரும் பழமை வாய்ந்த இசை நாடக வடிவமாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சீனாவின் தாங் வம்சக் காலத்தில், "இசை நாடகங்களில் சிச்சுவான் இசை நாடகம் முதலிடம்" என்று போற்றப்பட்டது.

சீனாவின் சிச்சுவான் இசை நாடகத்தின் பிரதிநிதியாக, ச்சுங் சிங் நகரின் சிச்சுவான் இசை நாடகக் குழு, இந்த இசை நாடகத்தின் புத்தாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. ச்சுவான் இசை நாடக குழு பற்றி குறிப்பிடும் போது, "பூக்கும் இரண்டு பிளம் மலர்களை" குறிப்பிட வேண்டும். சீனா மற்றும் வெளிநாடுகளில் இவ்விரு பிளம் மலர்களிலிருந்து, அருமையான நறுமணம் வீசுகிறது. இவ்விரு பிளம் மலர்களில், ஒன்று, பிளம் மலரின் இதழ் போன்ற தோற்றமுடைய ச்சுங் சிங் ச்சுவான் இசை நாடகக் கலை மையமாகும். இன்னொருவர், சீன இசை நாடகத் துறையில் பிளம் விருதைப் பெற்றுள்ள சேன் தியே மெய் அம்மையார் ஆவார்.

ச்சுங் சிங் ச்சுவான் இசை நாடக மையத்தின் வெளி தோற்றம், பிளம் மலரின் இதழ் போல் காணப்படுகிறது. இம்மையத்தின் கட்டிடங்கள், முக்கிய அரங்கம், சுற்றுலா இசை நாடக அரங்கம், பண்பாட்டுக் கண்காட்சி மண்டபம், அருங்காட்சியகம் முதலியவை இடம்பெறுகின்றன. சிச்சுவான் இசை நாடகப் பண்பாட்டைப் பரவல் செய்யும் வகையில், இக்கலை மையம் குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளுக்குத் திறந்து வைக்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் சிச்சுவான் இசை நாடகத்தின் ஈர்ப்பாற்றலை உணர்ந்து கொள்ளலாம்.

சேன் தியே மெய் அம்மையார், சீனாவின் ச்சுவான் இசை நாடகத் துறையில் தலைச்சிறந்தவராவார். அவர் சீன இசை நாடகத்துறையின் "பிளம் விருதை" பெற்றார். சீனத் தேசிய நிலை பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ச்சுவான் இசை நாடகத்தின் வாரிசு அவராவார். தனிச்சிறப்பு வாய்ந்த பாட்டு முறையினால், சிச்சுவான் இசை நாடக இன்னிசையில் முக்கிய முன்னேற்றத்தை படைத்து, ச்சுவான் இசை நாடகக் கலையை உலகிற்குப் பரவல் செய்துள்ளார்.

இன்று, அனில் ச்சுங் சிங் சிச்சுவான் இசை நாடக குழுவுக்கு வருகை தந்து, இங்குள்ள ஆசிரியர் ஃபெங் சி ஹாய்யுடன் இணைந்து, ச்சுவான் இசை நாடகத்தின் ஈர்ப்பாற்றலை உணர்ந்து கொள்கிறார்.

சிச்சுவான் இசை நாடக நடிகர்கள் அரங்கேற்றத்துக்கு முன், கதா பாத்திரத்தின் தகுநிலை, தோற்றம் மற்றும் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில், அவர்களின் முகத்தில் வேறுபட்ட வண்ணங்களில் பல்வகை உருவங்கள் வரையப்படுகின்றன. சிச்சுவான் இசை நாடகத்தில் கதா பாத்திரங்களின் முகமூடியின் தனிச்சிறப்பு மற்றும் பலதரப்பட்ட சிறப்புகள், சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த இசை நாடகங்களில் காணப்படுவது குறைவு. சிச்சுவான் இசை நாடகத்தில் கதா பாத்திரங்களின் ஆடைகள் பலவகையானவை. எந்த கதா பாத்திரம், எந்த ஆடையை அணிவது என்பதற்கு குறிப்பிட்ட கடுமையான விதிகளைக் கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும். தற்போது அனிலின் முகத்தில் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அவர் தளபதி ஆடையை அணிந்து, அரங்கேற்றத்துக்கு ஆயத்தம் செய்துள்ளார்.

நவீனமயமாக்க பெரிய ரக நகரமான ச்சுங் சிங்கில், ச்சுவான் இசை நாடக குழு, இந்த பழமை வாய்ந்த கலையைக் கொண்டு, உலகத்துடன் இணையும் பாலத்தை உருவாக்கியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040