• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டா ட்சூ கல் சிற்பம்
  2016-10-14 17:25:44  cri எழுத்தின் அளவு:  A A A   

கீழை நாட்டின் கலை முத்து– டா ட்சூ கல் சிற்பம்

சீனாவின் சோங்சிங் மாநகரின் மேற்கிலுள்ள பசுமையான மலைத் தொடர் மற்றும் நதிகளின் இடையில், டா ட்சூ எனும் செழிப்பான இடம் அமைந்துள்ளது.

எழில்மிக்க இயற்கை காட்சிகள் மற்றும் திறமையான மக்களால், வளமிக்க அழகிய டா ட்சூ இடம் உருவானதோடு, செழுமையான டா ட்சூ பண்பாடும் தோன்றியது. கீழை நாட்டின் ஒளிவீசும் முத்து என போற்றப்படும் டா ட்சூ கல் சிற்பக் கலை இவ்விடத்தில்தான் பிறந்தது.

இன்று, சிஆர்ஐ-ஹிந்து பிரிவு பணியாளர் அனில் உடன் இணைந்து டா ட்சூவின் அழகைக் கண்டறிவோம்.

கி.பி. 1174ஆம் ஆண்டு, சிச்சுவான் பகுதியைச் சேர்ந்த கல் சிற்பக் கலைஞர்கள் டா ட்சூ மாவட்டத்திலுள்ள பௌ டிங் மலையில் ஒன்றுகூடி, 70க்கும் மேற்பட்ட ஆண்டுகால முயற்சியுடன், மலைப் பாறையில் சுமார் 10 ஆயிரம் சிலைகளைச் செதுக்கினர். தற்போது டா ட்சூ கல் சிற்பக் கலையுடன் கூடிய 75 கற்குகைகளில், 50 ஆயிரத்துக்கும் அதிகமான சிலைகள் உள்ளன. யாங்சி ஆற்றுப் பள்ளத்தாக்கில் ஈடிணையற்ற கற்குகைக் கலையால், டா ட்சூ கல் சிற்பம், உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இங்குள்ள சாய்ந்த வடிவில் 31 மீட்டர் நீளமுடைய சாக்கியமுனியின் சிலை, இந்திய பௌத்த மதத்துடனான தொடர்பை வெளிப்படுத்துகிறது.

என் பின் உள்ள ஆயிரம் கைகளுடன் கூடிய கருணை தேவியின் சிலையைப் பாருங்கள். அது பிரகாசமாகவும் உயிர்த்துடிப்புடன் கூடியதாகவும் உள்ளது. ஆனால் கருணை தேவிக்கு என்ன நடந்தது உங்களுக்கு தெரியுமா? இப்போது அது பற்றிய தகவலை உங்களிடம் கூறுகின்றேன்.

டா ட்சூ கல் சிற்பங்களில், மிக அதிக முயற்சியுடன் தயாரிக்கப்பட்டது இந்த கருணை தேவியின் சிலை தான். கடினமான பாறையில் செதுக்கப்பட்ட அதன் ஆயிரம் கைகள் வெவ்வேறான வடிவில் உள்ளன. அதன் கைகளும் கண்களும் தங்கமுலாம் பூசப்பட்டதால் அது தகதகவென ஒளிவீசுகிறது.

800 ஆண்டுகளுக்கும் மேலான காலம், இந்தக் கருணை தேவியின் வெளி தோற்றத்தைப் பாதித்துள்ளது. 2008ஆம் ஆண்டு தேசிய அளவிலான கல்லிலான தொல் பொருட்களின் பாதுகாப்புக்கான முதலாவது திட்டப்பணியாக, ஆயிரம் கைகளுடன் கூடிய கருணை தேவி சிலையை மீட்கும் பணி தொடங்கியது.

8 ஆண்டுகள் தொடர்ந்த முன்னிலை மீட்பு பணியில், எக்ஸ் கதிர் சோதனை, முப்பரிமாண நிகழ்படத்தின் மூலமான ஆய்வு உள்பட உலகளவில் முன்னேறிய பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பன்முகங்களிலும் செப்பனிடப்பட்ட இந்த கருணை தேவி, 2015ஆம் ஆண்டில் பொது மக்களுக்கு மீண்டும் காட்சி அளித்தது. புதிதாக தங்கத்தால் பூசப்பட்ட ஆயிரம் கைகளுடன் கூடிய கருணை தேவியின் சிலையை இன்று நாம் கண்டு ரசிக்கின்றோம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040