ஹு தொங்கில் வசந்த விழாக் கொண்டாட்டம்
2017-02-03 19:22:13  cri

சீனாவில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் சீனப் பெருஞ்சுவரை அடுத்து அதிகம் காணவிரும்பும் இடங்களில் மிக முக்கியமானது ஹு தொங் எனப்படும் குறுகலான நடைபாதைகள். சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இத்தகைய ஹு தொங் நடைபாதைகளை அதிகமாக காண முடியும். இன்று உலகின் எந்தவொரு வளர்ந்த நாடுகளிலும் காணப்படும் பிரமிப்பை நீங்கள் பெய்ஜிங்கில் கண்டுணர முடியும். உலகின் எல்லா நாடுகளிலும் காணப்படும் உணவகங்கள், காப்பி நிலையங்கள் ஆகியவை பெய்ஜிங்கின் எல்லாப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஆனால் இவை அல்ல பெய்ஜிங்கின் அடையாளங்கள். பெய்ஜிங் நகருக்கென்று தனித்த அடையாளங்கள் உண்டு. அந்த அடையாளங்களை கண்டுணர வேண்டுமானால் ஹு தொங் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டியது அவசியம். பழைய பெய்ஜிங் கட்டிட அமைப்புகளும் பழைய பெய்ஜிங் வாழ்க்கை முறைகளையும் உங்களுக்கு நினைவுபடுத்துபவை இந்த ஹு தொங்குகளே. அதிலும் குறிப்பாக வசந்த விழா போன்ற நாட்களில் ஹு தொங் பகுதிகளில் பயணம் மேற்கொள்வது ஒரு சிறந்த அனுபவம். சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் பல வகையான ஹு தொங்குகள் உள்ளன. அதில் குறிப்பிடத் தகுந்த ஒன்று ஹோ ஹை பூங்காவும் அதனை ஒட்டி அமைந்துள்ள ஹு தொங்கும் ஆகும்.

சீனமொழியில் ஹோ என்பதற்கு பின்பக்கம் என்று பொருள். ஹை என்பதற்குக் கடல் அல்லது பெரிய ஏரி என்று பொருள். இந்தச் சொல்லின் பொருளுக்கேற்ப பெய்ஹாய் பூங்காவின் பின்பகுதியில் மிகப்பெரும் ஏரியோடும் ஹு தொங்குகளோடும் அமைந்திருக்கின்றது ஹோ ஹை பூங்கா. சீனாவில் இது போன்ற ஏரிகளை உடைய பூங்காக்கள் பனிக்காலம் கோடைக்காலம் என எல்லாக் காலங்களிலும் கூட்டம் நிறைந்து காணப்படும். கோடைக்காலங்களில் ஏரிகளில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள் பனிக்காலங்களில் உறைந்து காணப்படும் ஏரிகளில் பனிச் சறுக்கு விளையாட்டினை விளையாண்டு மகிழ்கின்றனர். குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நாடாக சீனா இருப்பதால் இந்த ஆண்டு வசந்த விழா விடுமுறையில் இந்த ஏரியில் மிக அதிகமான மக்கள் பனிச் சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபட்டதைக் காண முடிந்தது. குழந்தைகள் தங்களின் பெற்றோர்களுடன் பனிச் சறுக்கு வண்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தனர். பூங்காவைச் சுற்றியுள்ள குறுகலான நடைபாதைகளில் பாரம்பரியமிக்க சீன உணவுக் கடைகள் நிரம்பி இருந்தன. எங்கும் மக்களின் கூட்டமும் அவர்களின் மகிழ்ச்சி ஆரவாரங்களும் கேட்டுக் கொண்டே இருந்தன.

ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஓவியக் கலைஞர்கள் அமர்ந்து கொண்டு சுற்றுலா பயணிகளில் விருப்பப்டுவோரின் உருவங்களை வரைந்து கொடுத்துக் கொண்டிருந்தனர். அது போன்ற இடமெங்கும் இளைஞர்களின் கூட்டம். சில நிமிடங்களுக்குள்ளாக அவர்கள் ஓவியம் வரைந்து கொடுப்பதென்பதே ஒரு மிகப்பெரிய அழகியல். பூங்காவைச் சுற்றியுள்ள குறுகலான தெருக்களில் ரிக்சாக்காரர்கள் தங்களது வண்டிகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்தனர். ஏரியின் குளிர்ந்த காற்றும் பழைய பெய்ஜிங்கின் நினைவுகளும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். அந்த மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் வெளிப்பட்டது. வாழ்க்கை அர்த்தப்படுவதே நினைவுகளும் அவை தருகின்ற மகிழ்ச்சிகளாலும் தானே. இந்த வசந்த விழா மக்களுக்கு அப்படிப்பட்ட மகிழ்ச்சியான நினைவுகளை வழங்கியிருக்கும். நினைக்கும் தோறும் நினைக்கும் தோறும் இனிமை பயக்கும் நினைவுகள் அவை.