சீன மருத்துவத்தில் நோய் கண்டறியும் முறை
中国国际广播电

கூர்ந்து கவனித்தல்

மக்களின் வெளித் தோற்றத்திற்கும் அவர்களின் உள் உறுப்புக்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு என்ற அடிப்படையில் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது. உள் உறுப்புக்களில் ஏதாவது கோளாறு என்றால் அது அவர்களின் தோற்றத்திலும் வெளிப்பாடுகளிலும் பிரதிபலிக்கும். ஆகவே நோயாளியின் வெளித் தோற்றத்தைக் கண்டே உள் உறுப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மருத்துவர்கள் மதிப்பிட்டு விடுவார்கள்.

கேட்டல் மற்றும் முகர்தல்

இந்த முறையில் நோயாளரியின் ஒலியைக் கேட்டும். அவருடைய உடம்பில் இருந்து வெளியேறும் கழிவுகளை முகர்ந்து பார்த்தும் நோய்க் கூறு கண்டறிய மருத்துவர்கள் முயல்கின்றனர்.

நோயாளியின் ஒலியை மருத்துவர்கள் கேட்பதன் மூலம் ஒலியுடன் தொடர்புடைய உறுப்புக்களில் ஏற்படும் மாற்ரங்களை மட்டுமல்ல இதர உள் உறுப்புக்களில் ஏற்படும் மாற்றங்களையும் மருத்துவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். இந்த ஒலி என்பதில் பேச்சு ஒலி, மூச்சு ஒலி, இருமல் ஒலி, செருமல் ஒலி, ஏப்ப ஒலி ஆகியவை அடங்கும்.

மேலும் நோயாளிகளின் உடம்பில் இருந்து வெளிப்படும் வாசனையை மருத்துவர்கள் முகர்ந்து பார்த்து நோய் பற்றி அறிகின்றனர். மனித உடம்பை கிருமிதாக்கும் போது மனிதர்களின் உள் உறுப்புக்களும் ரத்தமும் பாதிக்கப்படுவதாக நம்பப்படுகின்றது. இதனால் அவர்களுடைய உடம்பில் இருந்து வெளியேறும் திரவத்திலும் மலத்திலும் கெட்ட வாசனை வீசுகின்றது.

கேட்டறிதல்

இந்த முறையில் நோயாளியிடமோ அவருடைய நோய் பற்றித் தெரிந்தவர்களிடோ மருத்துவர் விசாரித்து நோய் எப்படி ஏற்பட்டது. எவ்வாறு அது பெரிதாக பரவியது. தற்போதைய நோய் அறிகுறிகள் எவ்வாறு சிகிச்சை தருவது என்பது பற்றி கேட்டறிகிறார். நோயாளியின் புறத்தோற்றத்தில் வெளிப்படையான அறிகுறிகள் தெரியாதபோது இது பயனுள்ள சிகிச்சை முறையாகும். மருத்துவர் தனக்குத் தேவையான தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கின்றார். மேலும் விசாரிப்பதன் மூலம் நோயுடன் தொர்புடைய இதர மறைமுகத் தகவல்களையும் அதாவது நோயாளியின் அன்றாட வாழ்க்கை முறை வேலைச் சூழல், உணவுப் பழக்கம், திருமணத் தகுதி போன்றவற்றைத் தெரிந்து கொல்ள முடிகின்றது.

நாடித்துடிப்பும், இதயத் துடிப்பும் அறிதல்

நோயாளியின் கையைப் பிடித்து நாடி நரம்பை அழுத்துவதன் மூலம் மருத்துவர் நோய் அறிகிறார். உடம்புக்குள் ஏற்படும் மாற்றங்கள் நாடித்துடிப்புக்களில் பிரதிபலிப்பதாக நம்பப்படுகின்றது. சில சமயங்களில் நோயாளியின் உடம்பில் ஒரு பகுதியிலுள்ள தோலை அழுத்துவதன் மூலம் அந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் நோயின் தன்மையையும் தீவிரத்தையும் மருத்துவர் புரிந்து கொள்கின்றார்.