தீ உண்டான கதை

中国国际广播电台


பண்டைய சீன மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக தங்களது அறிவுத்திறனையும், ஆற்றலையும் பயன்படுத்தி அயராது உழைத்த நாயகர்கள் பற்றிய பல கதைகள் சீன நாட்டுப்புற இலக்கியங்களில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாயகன்தான் சூ ரென். அவருடைய பெயருக்கு ஏற்ப, தீ உண்டாக்குவது எப்படி என்பதை மக்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

அந்தக் காலத்தில் மக்கள் அந்த காரத்தில் வசித்தனர். தீயை எப்படி பற்றவைப்பது என்பதை அவர்கள் அறிந்திருக்க வில்லை. இரவு வந்து விட்டால் இருள் சூழ்ந்து கொள்ளும். கொடிய காட்டு விலங்குகளின் ஓலம் அச்சுறுத்தும் நடுக்காட்டில் பயத்தால் நடுங்கிய படி, ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு, கிடப்பதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி தெரியவில்லை. நெருப்பு இல்லாததால் இறைச்சியை பச்சையாகவே உண்டனர். கொதிக்க வைக்காத தன்ணீரைக் குடித்தனர். இதன் விளைவாக, அடிக்கடி நோய் நொடிகளால் அல்லல்பட்டனர். அவர்களின் ஆயுளோ குறுகிவிட்டது.

இந்த அப்பாவி மக்கள் படும் கஷ்டங்களையும், வேதனைகளையும் கண்டு சொர்க்கத்தில் இருந்த பு சி என்ற கடவுளுக்கு மனமிரங்கியது. தீயை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்த மக்களுக்கு கற்பிக்க அந்தக் கடவுள் விரும்பினார். ஆகவே, காட்டிலே பெருமழை பெய்யச் செய்தார். இடியும் மின்னனும் இறங்கி காட்டுமரங்கள் தீப் பற்றி எரிந்தன. இருட்டிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட அந்த மக்கள் வெளிச்சத்தையும், நெருப்பையும் கண்டு அரண்டு போனார்கள், மழை நின்றதும் மக்கள் தங்களது வசிப்பிடத்துக்குத் திரும்பியபோது, அணையாமல் எரிந்து கொண்டிருந்த மரக்கட்டைகளும் தீக்கங்குகளும் அவர்களைப் பயமுறுத்தின. ஆனால், தினமும் தங்களை நடுநடுங்க வைத்த காட்டு மிருகங்களின் ஓலம் நின்று போனதை ஒரு இளைஞன் கவனித்தான். பளபளக்கும் இந்தப் பொருட்கள் மிருகங்களை விரட்டி விட்டனவா? தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். இளைஞன், கொஞ்சம் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, நெருப்புக்கு அருகில் சென்ற போது, நடுக்கும் காட்டுக்குளிரில் அந்த வெப்பம் இதமாக இருந்தது. உடனே தன்னுடைய மக்கள் எல்லாரையும் அழைத்தான். எல்லோரும் குளிர்காய்ந்தனர். குளிர் காய்ந்ததை விட பெரிய விஷயம் அந்த நெருப்பில் செத்து மடிந்த காட்டு மிருகங்களின் உடல்கள் தீயில் வாட்டப்பட்டதால், அவற்றின் இறைச்சி சுவையாக இருந்தது. பச்சைமாமிசம் சாப்பிடுவதை விட இது எவ்வளவோ நன்றாக இருக்கிறதே.

அதன் பிறகு, நெருப்பினால் உண்டாகும் பல செளகரியங்களை மக்கள் உணர்ந்து கொண்டனர். ஆகவே, தீயை அணையாமல் காப்பாற்றினார்கள். விறகுச் சுள்ளிகளை போட்டு தீ வளர்க்கும் வேலையில் முறை வைத்து ஈடுபட்டனர். ஆனால், ஒரு நாள், இந்த வேலையில் ஈடுபட்டிருந்த ஆள் அசந்து தூங்கி விட்ட போது, தீ அணைந்து விட்டது. மீண்டும் மக்களின் வாழ்க்கையில் இருளும் குளிரும் சூழ்ந்து கொண்டன.

இந்த அவலத்தைக் கண்ட பு சி கடவுள், இளைஞனின் கனவில் தோன்றி, வெகு தொலைசில் சு மிங் என்ற ஒரு தேசத்தில் தீ எரிந்து கொண்டிருப்பதாகக் கூறியது. திடுக்கிட்டு விழித்த இளைஞன், எப்படியாவது இந்தத் தீயைக் கொண்டு வந்து விட வேண்டும் என்று புறப்பட்டான். மலைகளில் ஏறினான். நதிகளில் நீந்தினான்.

அபாயகரமான காடுகளின் ஊடே அஞ்சாமல் நடந்து சென்றான். இன்னல்கள் பல கடந்து சு மிங் தேசத்தைச் சென்றடைந்தான். ஆனால், அங்கே ஏமாற்றம் காத்திருந்தது. தகத்தக என்று கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அங்கு இல்லை. பகலிலும் இரவிலும் இருளே சூழ்ந்திருந்தது. களைத்துப் போய் சுவே மு என்ற மரத்தின் அடியில் அவன் தலைசாய்த்துப்படுத்த போது, சிறுவெளிச்சம் ஒன்று மின்னிமின்னி மறைவதைக் கண்டான். சுவே மு மரத்தை மரங்கொத்திப் பறவை கொத்தும் போது, இந்த வெளிச்சம் உண்டாவதை விரைவில் கண்டு கொண்டான். அவனுக்கு மன இருள் அகன்றது. அறிவு விடிந்தது. பல்வேறு குச்சிகளைக் கொண்டு, சுவே மு மரத்தின் மீது உரசிப்பார்த்தான். கடைசியாக ஒரு குச்சியைக் கொண்டு உரய போது, புகைகிளம்பி தீ மூண்டது.

தீயை உண்டாக்கும் இந்த முறையைத் தெரிந்து கொண்டு ஊருக்குத் திரும்பினான். இளைஞன், அன்றில் இருந்து மனிதனை சூழந்த இருளும், அவனுடைய மனதைக் கவ்விய அச்சமும் அகன்றன. இளைஞனின் அறிவாற்றலும் விடாமுயற்சியும் மக்கள் தலைவனாக அவனை மாற்றின. அவனுக்கு சூ ரென் என்று பெயர் சூட்டினார்கள். தீயைக் கொண்டு வந்தவன் என்பது இதன் பொருள்.