வானத்தை பிளந்த பன்கு

中国国际广播电台


ஆதிகாலத்தில் இந்த மண்ணும் விண்ணும் ஒன்றாகச் சேர்ந்தே இருந்தன. இரண்டும் கலந்து ஒரே கோளமாக இருந்தது. அந்த கோளத்திற்குள் சூரியளின் வெம்மை தகித்தது. திசை தெரியாத ஒரே இருட்டு, அப்படிப்பட்ட நிலையிலும் பன்கு என்ற ஒரு மாவீரன் அந்தக் கோளத்திற்குள் 18000 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தான். ஒரு நாள் திடீரென அவன் கண்விழித்த போது பயங்கரச் சூடாக இருந்தது. கோபத்தில் கொதித்தான். வெப்பமும் இருளும் நிறைந்த முட்டை ஓடு போன்ற கோளத்திற்குள் உடம்பை நீட்டி நெளிக்க முடியாமல் திண்டாடினான். அவன் பிறந்ததில் இருந்தே ஒரு கோடாரி அவனோடு ஒட்டிக் கொண்டிருந்தது. அதைக் கொண்டு பலமாக ஓங்கி வெட்டி, கோளத்தின் வெளி ஓட்டை உடைத்தான். கோளத்திற்குள் இருந்த எடை குறைவான பொருட்கள் எல்லாம் மிதக்கத் தொடங்கின. அவை எல்லாம் சேர்ந்து வானமானது. கனமான பொருட்கள் கீழ் நோக்கி அமிழ்ந்து, தரையாக மாறின. அந்தத் தரையின் மீதுதான் நாம் நடக்கிறோம்.

வானமும் பூமியும் மீண்டும் சேர்ந்து விடக்கூடாதே என்று பயந்த பன்கு, வானத்தைத் தனது தலையால் முட்டித் தூக்கி நிறுத்தினான் வலுவான பாதங்களால், ஓங்கி மிதித்து தரையை அழுத்தினான். பிறகு தனது உடம்பை பெரிதாக வளர விட்டான். தினமும் 11 அங்குலம் உயரமாக வளர்ந்தான். அவனோடு சேர்ந்து வானமும் மேலே உயர்ந்தது. தரையோ தினமும் 11 அங்குலம் கீழே தாழ்ந்தது. மற்றொரு 18000 ஆண்டுகள் கடந்தன. பன்கு உயரமாக வளர்ந்து ஒரு அரக்கனாக மாறினான். அவனுடைய உயரம் 90000 மைல் அதாவது 45000 கிலோ மீட்டர். மேலும் சில ஆயிரம் ஆண்டுகள்கடந்தன. அதற்குள் வானமும் பூமியும் ஒரு நிலையாக நின்று கொண்டன. கடைசியாக நிமிமதிப் பெருமூச்சு விட்ட வீரன் பன்கு களைத்துப் போனான். கடைசி வலிமையையும் ஒன்றுதிரட்டி, பூமியில் விழுந்து மயங்கிப் போனான்.

அவன் இறப்பதற்கு சற்று முன்பு அவனுடைய இடது கண் சூரியனாக மாறியது. வலது கண் நிலாவானது. அவனுடைய கடைசி மூச்சு காற்றாகவும் மேகங்களாகவும் ஆனது. கடைசிப் பேச்சு இடி முழக்கமானது. அவனுடைய தலை மயிரும் மீனசயும் மின்னிடும் நட்சத்திரங்களாக மாறின. கைகளும் பாதங்களும் மலைகளாயின. அதை விட அதிசயம், அவன் உடம்பில் ஓடிய ரத்தம் ஆறுகளாகவும் ஏரிகளாகவும் ஆனது. அவனுடைய தசையோ வளம் கொழிக்கும் நிலமானது. பற்களும் எலும்புகளும் தங்கம், வெள்ளி செம்பு என்று கனிமங்களாக மாறின. பன்குவின் வியர்வைதான் காலைப்பனித்துளி. இவ்வாறாக, பன்குவின் உடம்பில் இருந்து இந்த உலகம் உருவெடுத்தது.