மஞ்சள் பேரரசர்

中国国际广播电台

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய சமவெளிப் பகுதியில் பல பழங் குடிகள் வசித்தன. அவற்றிலே மிகவும் புகழ்பெற்றவை மஞ்சள் பேரரசர் பழங்குடியும், யாண்டியின் பழங்குடியும் ஆகும். அந்த இரண்டு மன்னர்களும் சகோதரர்கள். கிழக்கு சீனாவில் ஜியுலி என்னும் சக்தி வாய்ந்த ஒரு பழங்குடியின் தலைவனாக சியூ திகழ்ந்தான்.

சியூவுக்கு 81 சகோதரர்கள். அவர்கள் எல்லோருக்குமே இரும்புத்தலைகள். அவர்களின் கரங்களோ செப்பு போல வலுவானவை. அவர்களின் அறிவும் மிகவும் முன்னேறியது. இதனால், மற்றபழங்குடிகள் மீது அவர்கள் அடிக்கடி படையெடுத்தனர்.

ஒரு முறை யாண்டி பழங்குடி மீது சியூ படையெடுத்து தோற்கடித்தான். ஆகவே யாண்டி கேட்டுக் கொண்டதால் மஞ்சள் பேரரசரும், மற்ற பழங்குடித்தலைவர்களும் ஒன்று சேர்ந்து, சியூவுக்கு எதிராகப் போர் தொடுத்தனர்.

இரண்டு படைகளும் சுவோலு என்ற இடத்தில் புகழ்மிக்க போர் புரிந்தன.

போரின் தொடக்கத்தில், சியூ தனது வலுவான உலோக சக்தியாலும் ஆற்றல் மிக்க படை வீரர்களாலும் வெற்றிகளைக் குவித்தான். எனினும், மஞ்சள் பேரரசர் டிராகன்களையும் இதர தெய்வீக விலங்குகளையும் துணைக்கு அழைத்ததால் அவருடைய கை ஓங்கியது. சியூ காற்றையும் மழையையும் கட்டுப்படுத்தும் தனது சக்தியைப் பயன்படுத்தி, தன்னைத் தூரத்திவகும் மஞ்சள் பேரரசரின் முன்னேற்றத்தைத் தடுத்தான். பின்னர் மழை மேகங்களைக் கலைப்பதற்காக மஞ்சள் பேரரசர் வறட்சித் தேவதையை வரவழைத்தார். உடனே சியூ இந்த உலகை மூடுபனியால் நிரப்பினான். இதனால், மஞ்சள் பேரரசரின் படைகள் திசைதெரியாமல் குழம்பின. ஆனால் மஞ்சள் பேரரசரோ தென் திசையைக் காட்டும் ஒரு ரதத்தை உருவாக்கி திசை கண்டார். கடைசியில் சியூவும் அவனுடைய 81 சகோதரர்களும் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

மஞ்சள் பேரரசருக்கு எல்லாப் பழங்குடிகளின் மரியாதை கிடைத்தது. அவரை தன்னேரில்லாத் தலைவராக அவர்கள் ஏற்றனர்.

மஞ்சள் பேரரசர் தமது வாழ்நாளில் பல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தியதாக புராணங்கள் கூறுகின்றன. அரங்குகளை, படகுகளை வண்டிகளை அவர்தான் உருவாக்கினார். எழுத்து, இசை, கணிதம், ஆகியவற்றையும் கண்டுபிடித்தார். மஞ்சள் பேரரசரின் மனைவி லுவோசு, குடையைக் கண்டுபிடித்தாள். பட்டுப்புழு வளர்க்கவும், பட்டுநெசவு செய்யவும் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தாள்.

இப்போது, சீனர்கள் தங்களை மஞ்சள் பேரரசரின் வழித்தோன்றல்கள் என்று, பெருமையோடு கூறிக்கொள்கின்றனர். ஒவ்வொரு வசந்த காலத்திலும் உலகெங்கும் உள்ள சீனர்கள் மஞ்சள் பேரரசரின் சமாதி உள்ள ஷாங்ச்சி மாநிலத்தின் ஹுவாங்லிங் கிராமத்தில் திரண்டு மரியாதை செலுத்துகின்றனர்.