சீனத் தேசிய மக்கள் பேரவை

中国国际广播电台


மக்கள் பேரவை அமைப்புமுறை சீனாவின் அடிப்படை அரசியல் அமைப்பு முறையாகும். தேசிய மக்கள் பேரவை அதியுயர் அரசு அதிகார நிறுவனமாகும். மாநிலம், தன்னாட்சிப் பிரதேசம், மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள மாநகர், சிறப்பு நிர்வாகப் பிரதேசம், படை ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் இப்பேரவை உருவாக்கப்படுகின்றது. அரசின் சட்டமியற்றல் அதிகாரத்தை இது செயல்படுத்துகின்றது. நாட்டின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய பிரச்சினைகளைத் தீர்மானிக்கும் உரிமை அதற்கு உண்டு.

தேசிய மக்கள் பேரவையின் முக்கிய கடப்பாடுகள் வருமாறு: அரசியல் அமைப்பு சட்டத்தைத் திருத்துவது, இதன் நடைமுறையாக்கத்தைக் கண்காணிப்பது, குற்றவியல் வழக்கு, சிவிலியல் வழக்கு, அரசு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சட்டங்களையும், ஏனைய அடிப்படைச் சட்டங்களையும் இயற்றுவது திருத்துவது, தேசியப் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சித் திட்டத்தையும் அதன் நடைமுறையாக்கத்தையும் அரசின் வரவு செலவு நடைமுறையாக்க அறிக்கையையும் பரிசீலித்து அனுமதி வழங்குவது, மாநிலம் தன்னாட்சிப் பிரதேசம், மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள மாநகர் ஆகியவற்றின் உருவாக்கத்துக்கு அனுமதிவழங்குவது, சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் உருவாக்கத்தையும், அதன் அமைப்பு முறைமையையும் தீர்மானிப்பது, போர் சமாதானம் ஆகியவற்றை தீர்மானிப்பது, அரசின் அதியுயர் அதிகார நிறுவனங்களின் தலைவர்கள் அதாவது தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி உறுப்பினர்களையும் அரசு தலைவர் துணை அரசு தலைவர் ஆகியோரையும் தலைமை அமைச்சரையும் மற்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து தீர்மானம் மேற்கொள்வது, மத்திய ராணுவ ஆணையகத்தின் தலைவரையும் ஏனைய உறுப்பினர்களையும் தெரிவு செய்த அதியுயர் மக்கள் நீதிமன்ற தலைவர், அதியுயர் மக்கள் வழகறிஞர் மன்றத்தின் தலைவர் ஆகியோரை தேர்வு செய்வது என்பன சீனத் தேசிய மக்கள் பேரவையின் முக்கிய கடப்பாடுகளாகும். இவர்களைப் பதவியிலிருந்து நீக்கும் உரிமை தேசிய மக்கள் பேரவைக்கு உண்டு. பேரவையின் பதவிக் காலம் 5 ஆண்டு. ஆண்டுக்கு ஒருமுறை கூட்டத் தொடர் நடைபெறும். கூட்டம் நடைபெறாத நாட்களில் அதன் நிரந்தரக் கமிட்டி அதியுயர் அரசு அதிகாரத்தை நிறைவேற்றுகின்றது. தலைவர் துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், உறுப்பினர்கள் ஆகியோரால் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டி உருவாக்கப்படுகின்றது.

 

தேசிய மக்கள் பேரவை, அதன் நிரந்தரக் கமிட்டி, அரசவை ஆகியவற்றின் சட்டமியற்றல் நிறுவனங்கள், உள்ளூர் இடங்களின் சட்டமியற்றல் வாரியங்கள், தேசிய இனத் தன்னாட்சிப் பிரதேசங்களின் சட்டமியற்றல் வாரியங்கள், பொறுளாதார சிறப்பு பிரதேசங்கள் மற்றும் சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களின் சட்டமியற்றல் வாரியங்கள் ஆகியவை சட்டமியற்றும் பணியில் ஈடுபடுகின்றன.