லுங்மன் கற்குகை
中国国际广播

லுங்மன் கற்குகை, மத்திய சீனாவின் ஹொனான் மாநிலத்து லொயாங் நகரின் தெற்கு புறநகரிலிருந்து 12.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. லுங்மன் பள்ளத்தாக்கின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கிடையிலும் போக்குவரத்தின் முக்கிய இடமாக இது திகழ்கிறது. எழில் மிக்க இயற்கைக் காட்சித் தலமான இவ்விடத்தின் காலநிலை மக்களுக்கு ஏற்றது. அறிஞர்களும் கவிஞர்களும் சுற்றுலா மேற்கொள்ள நல்ல இடம் இது. லுங்மன் கற்குகை அமைந்துள்ள இவ்விடத்தின் கற்பாறை தரமானதாக இருப்பதால் சிலை செதுக்குவதற்குத் தகுந்தது. இதனால், கற்குகையைச் செதுக்க, பண்டைகால மனிதர் இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

லுங்மன் கற்குகை, கான்சு மாநிலத்து தங்ஹுவாங் முகௌ கற்குகை சாங்சிதாதொங் யுங்காங் கல்குகை ஆகியவை சீனாவின் மூன்று முக்கிய கல் வேலைப்பாடு கலைக் களஞ்சியமென அழைக்கப்படு கின்றது. கற்குகை செதுக்கும் பணி, கி.பி. 471ஆம் ஆண்டு முதல் 477ஆம் ஆண்டு வரை சுமார் 400 ஆண்டு காலம் நீடித்தது. இக்கல்குகை 1500 ஆண்டுகால வரலாறுடையது. இக்கல்குகையின் நீளம் தெற்கிலிருந்து வடக்கு வரை சுமார் ஒரு கிலோமீட்டர் ஆகும். இதுவரை பாதுகாப்பாக பராமரிக்கப்படும் கல்குகைகளின் எண்ணிக்கை 1300ஐத் தாண்டியுள்ளது. 3600க்கும் அதிகமான கல்லறை வாசகங்களும் 50க்கும் அதிகமான பௌத்த கோபுரங்களும் 97000க்கு மேற்பட்ட புத்தர் உருவச் சிலைகளும் உள்ளன. இவற்றில் பிங்யாங் மத்திய குகை, வுன்சியெ கோயில், குயாங் குகை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

பிங்யாங் மத்திய குகை, கி.பி. 386ஆம் ஆண்டு முதல் 512ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை பிரதிபலிக்கும் கல்குகை. இதை செதுக்குவதற்கு 24 ஆண்டுகள் பிடித்தன. மிக அதிகமான நேரம் செலவழிக்கப்பட்டது. இந்தக் குகையில் 11 புத்தர் உருவச்சிலைகள் உள்ளன. இவற்றில் சாக்கியமுனியின் உருவச்சிலை குறிப்பிடத்தக்கது. இவ்வுருவச்சிலையின் முன் பக்கத்தில் இரண்டு கம்பீரமான கல் சிங்கங்கள் உள்ளன. வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் தலா ஒரு சீடரின் உருவச் சிலையும் ஒரு கடவுள் உருவச்சிலையும் காணப்படுகின்றன. குகையில் பல கடவுள் சிலைகளும் மதப்பாடம் கேட்கும் சீடரின் உருவச் சிலைகளும் உள்ளன.

லுங்மன் கல்குகையில் மிகப்பெரிய குகையான வுன்சியெ கோயில், தாங் வமிச காலத்தின் கல் செதுக்கல் கலையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது. அதன் நீளமும் அகலமும் தலா 30 மீட்டரைத் தாண்டியது. வுன்சியெ கோயிலில், உருவச்சிலைகள் ஒரு முழுமையான கலைத் தொகுதியாகும். இவற்றில் லோசனா எனும் புத்தர் உருவச்சிலை தலைசிறந்த கலைப்பொருளாகத் திகழ்கின்றது. சுமார் 17 மீட்டர் உயரமுடைய இவ்வுருவச்சிலை தத்ரூபமாக உள்ளது. கொஞ்சம் கீழே நோக்கிப்பார்க்கும் இத்தேவியின் கண்பார்வை, வழிபாடு செய்வோரின் கண் பார்வையுடன் ஒன்றிணைந்து உள்ளத்தில் ஊடுருவக் கூடும். எல்லையற்ற கலை ஈர்ப்புத் தன்மை வாய்ந்தது.

குயாங் குகையானது, லுங்மன் கற்குகையில் மிகவும் முன்னதாக செதுக்கப்பட்ட ஒன்று. வடக்குவெய் வமிச காலத்தைப் பிரதிபலிக்கும் மற்றொரு கற்குகை இதுவாகும். இக்குகையில் புத்தர் உருவச்சிலைகள் பல உள்ளன. புத்தர் உருவச்சிலைக்கு முன் விளக்கங்கள் உண்டு. இவற்றைச் செதுக்கியவர்களின் பெயர், செதுக்கிய நாள், காரணம் ஆகியவை இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்குவெய் வமிச காலத்தில் நேர்த்தியான கையெழுத்துக்கள் மற்றும் செதுக்கல் கலையை ஆராய்வதற்கு மதிப்புள்ள தகவல்கள் இவை. சீன கையெழுத்து வரலாற்றில் மைல் கல்லாக விளங்கும் லுங்மன் 20 பொருட்களில் பெரும்பாலானவை இவ்விடத்தில் குவிந்துஇருக்கின்றன.

லுங்மன் கற்குகையில் ஏராளமான மதம், நுண்கலை, ஓவியம், நேர்த்தியான கையெழுத்துக்கள், இசை, உடுப்பு, நகை, மருத்துவம், மருந்து, கட்டடம், சீன மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்து ஆகியவை பற்றிய பொருட்களும் வரலாற்று தகவல்களும் உள்ளன. இதனால், இது, பெரிய ரக கல் செதுக்குதல் கலை அருங்காட்சியகமாகவும் திகழ்கிறது.

உலகப் பண்பாட்டு மரபுச்செல்வத்தைத் தேர்ந்தெடுக்கும் வரைமுறைப் படி லுங்மன் கற்குகை 2000ஆம் ஆண்டு நவம்பர் 30ந் நாள் உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. லுங்மன் வட்டாரத்திலுள்ள கல்குகைகளும் புத்தர் உருவச்சிலைகளும் சீனாவின் வடக்குவெய் வமிச காலத்தின் பிற்காலத்திலும் தாங் வமிச காலத்திலும் (கி.பி.493-907) மிக பெரிய அளவிலான கலை வடிவத்தைப் பிரதிபலித்துள்ளன. மதக் கருப்பொருளை வர்ணிக்கும் இந்த கலைப் படைப்புகள் சீனாவின் கல் செதுக்கல் கலையின் உயர்ந்த நிலையைச் சித்திரிக்கின்றன என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.