குசின்
中国国际广播电台


குசின் என்பது சீனாவின் தொன்மை வாய்ந்த ஒருவகை மீட்டல் இசைக்கருவியின் பெயர். பண்டைகாலத்தில் அது சின் அல்லது யௌசின் என்று அழைக்கப்பட்டது. அது நீண்ட வரலாறுடையது. சுமார் மூவாயிரத்துக்கு முந்திய சொ வமிச காலத்தில் சீனத் தேசத்தின் மூதாதையர் இவ்விசைக்கருவியைத் தயாரித்தனர்.

குசின் எனப்படும் மீட்டல் இசைக்கருவி வடிவில் அழகானது. ஒலி இனிமையானது. பண்டைகாலத்தில் இவ்விசைக் கருவியை இசைப்பதற்கு முன், முதலில் குளித்துவிட்டு, சலவை செய்த ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். பின்னர், ஊது வத்தி கொளுத்திவிட்டு இரண்டு கால்களை மடித்து அமர்ந்து, குசின் எனப்படும் இசைக்கருவியைத் தன் கால்களின் மேல் அல்லது மேசையின் மேல் வைத்துக்கொண்டு இசைப்பது வழக்கம். இவ்விசைக்கருவியை இயக்கும் போது, இடது கையால் தந்தியை வருடி, வலது கையால் இசையின் அளவை நிர்ணயிக்கலாம். இசை அளவை நிர்ணயிப்பதற்குக் கண்டிப்பான விதிமுறை உண்டு.   

  

சீனாவின் பண்டைகால அறிஞருக்கும் இவ்விசைக் கருவிக்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. இவ்விசைக் கருவியைத் தயாரிப்பது, இயக்குவது, பரப்புவது முதலியவற்றில் அவர்கள் முக்கிய பங்காற்றினர் என்பதை ஏராளமான பண்டைகாலப் பதிவேடுகள் காட்டியுள்ளன.

இவ்விசைக்கருவியைத் தயாரிப்பது ஒரு சிறப்பான கலை. தாங் வமிசகாலமும் சூன் வமிச காலமும் இவ்விசை கருவியைத் தயாரித்த மிக சிறந்த காலம் ஆகும். அப்போது, இனிமையான ஒலியுடன் கூடிய நுட்பமான இவ்விசைக் கருவிகள் பல தயாரிக்கப்பட்டன. இருப்பினும் இவ்விசைக் கருவியின் தயாரிப்பு முறை பல ஆண்டுகளாகத் தொடரவில்லை. பண்டை காலம் தொட்டுப் பரவிவந்த குசின் எனப்படும் இசைக்கருவிகளில் பெரும்பாலானவை, இசை இயக்குப்பவர்களால் தாமாகவே தயாரிக்கப்பட்டதால், அவற்றின் உதிரிப் பகுதிகளின் அமைவும் அளவும் வேறுபட்டதாக இருந்தன. கடந்த பல பத்து ஆண்டுகளில் சீனாவில் குசின் எனப்படும் இசைக் கருவியின் தயாரிப்புப் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. அத்துடன், தொன்மை வாயந்த இவ்விசைக் கருவி புதுப்பிக்கப்பட்டுள்ளது. மனிதனின் ஆசை, கோபம், துன்பம், மகிழ்ச்சி ஆகிய உணர்ச்சிகளையும் இயற்கைக் காட்சிகளையும் துல்லியமாகவும் உயிர்த்துடிப்புடனும் இவ்விசைக்கருவி வெளிப்படுத்தக் கூடியது. இவ்விசைக் கருவியைப் பலவகைகளில் இயக்கலாம். அது தனியாகவும் இசைக்கப்படலாம். சியொ என்னும் இசைக் கருவியுடன் சேர்த்தும் இயக்கலாம். தவிர, பண்டைக்காலப் பாடலுக்குக் கூட்டிசையாகவும் பயன்படுத்தப்படலாம்.

《உயரமான மலையும் ஆற்று நீரும்》  என்னும் பாடலைக் கேட்டுமகிழுங்கள்.