ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் விரைவான வளர்ச்சி

மதியழகன் 2018-06-27 09:51:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 3ஆவது ஆண்டுக் கூட்டம், 25, 26 ஆகிய இரு நாட்களில் மும்பையில் நடைபெற்றது. உள்கட்டமைப்புக்கு நிதி திரட்டும் வகையில் “புதுமையாக்கம் மற்றும் ஒத்துழைப்பு” என்ற தலைப்பிலான நடப்புக் கூட்டத்தில், பல்வேறு நாடுகளின் அரசுகள், சர்வதேச அமைப்புகள், செய்தி ஊடகங்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நடப்புக் கூட்டத்தில், ஆசிய உள்கட்டமைப்புக் கருத்தரங்கு முதல்முறையாக நடத்தப்பட்டது. உள்கட்டமைப்புக் கட்டுமானத்தில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பது, இக்கருத்தரங்கில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட அம்சமாகும். இது பற்றி ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத் தலைவர் டேன்னி அலெக்சாண்டேர் பேசுகையில்:

தற்போது, ஆசியாவின் அடிப்படை வசதிக் கட்டுமானத்தில் பல இலட்சம் கோடி அமெரிக்க டாலர் நிதிப் பற்றாக்குறை காணப்படுகிறது. அரசுகள் மற்றும் பலதரப்பு வங்கிகளின் பங்கேற்பு குறைவாக உள்ளது. இப்பற்றாக்குறையைப் போக்கும் வகையில், நடப்புக் கூட்டத்தில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்தியாவின் சுரங்க இருப்புப் பாதைக் கட்டுமானம், வேளாண்மைக்கு பயன்படும் நீர் வசதியை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், இந்தியாவுக்கு 190 கோடி அமெரிக்க டாலர் கடன் வழங்குவதாக, இவ்வங்கி நடப்புக் கூட்டத்தில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பற்றி, சார்க்  அமைப்பின் வளர்ச்சி நிதியத்தின் முதன்மை செயல் அதிகாரி சுனில் மோடிவால் கூறியதாவது:

இந்தக் கடன் திட்டம் செயலுக்கு வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். இது, தெற்காசிய பிராந்தியத்தின் உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தலைமை பங்கு ஆற்றும் நிலையில், மேலதிக நிதி கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

வங்கியில் இணைவது தொடர்பான லெபனானின் விண்ணப்பம் 26ஆம் நாள் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியன் ஆளுநர் குழுவில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இவங்கியின் 87ஆவது உறுப்பினராக, லெபனான் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நாளில், வங்கியின் ஆண்டுக் கூட்டத்தின் துவக்க விழாவில் இந்திய  தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பங்கேற்று உரை நிகழ்த்தினார்.  மோடி கூறியதாவது:

3 ஆண்டுகளுக்கும் குறைந்த காலத்தில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை, 87ஆக அதிகரித்துள்ளது. 10ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதி திரட்டப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கி, ஆசியாவில் முக்கிய பங்காற்றி வருகிறது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, ஆசிய நாடுகளின் கூட்டு முயற்சிகள் கொண்டு வரும் சாதனையாகும். அது, ஆசிய நாடுகள் மற்றும் மக்களுக்கு அருமையான எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஆண்டுக் கூட்டம், 2019ஆம் ஆண்டு ஜுலை திங்களில் ஐரோப்பாவின் லக்சம்பர்க் நாட்டில் நடைபெறும் என்று ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் ஆளுநர் குழு செவ்வாய்கிழமை அறிவித்தது.

 

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்