சீனாவில் துவன்வூ விழா கொண்டாட்டம்

வான்மதி 2018-06-18 15:05:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனப் பாரம்பரிய நாட்காட்டியின்படி 5ஆவது மாதத்தின் 5ஆம் நாளான இன்று துவன்வூ விழாவாகும். டிராகன் படகுப் போட்டி, ட்சொங்ட்சி எனும் உணவு தயாரிப்பு, மூலிகை சாற்றில் குளிப்பு, வாகனப் பயணம் உள்ளிட்ட வழிகளின் மூலம் சீன மக்கள் துவன்வூ திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.

2000 ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடைய துவன்வூ விழா, மிக முன்னதாகவே சீனாவின் தென் கிழக்குக் கடலோரப் பகுதியில் வாழும் மக்கள் நீர்க் கடவுள் அல்லது டிராகன் கடவுளுக்குப் படையல் கொடுத்து வழிபாடு செய்வதற்கு முக்கிய திருநாளாக அமைந்தது. இவ்விழா, வசந்த விழா, சிங்மிங் திருநாள், நிலா விழா ஆகியவைப் போன்று சீனாவின் 4 முக்கியமான பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றாகும். 2009ஆம் ஆண்டு துவன்வூ விழா உலகப் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களில் சேர்க்கப்பட்ட முதலாவது சீன விழாவாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் துவன்வூ விழா கொண்டாட்டம்

டிராகன் படகுப் போட்டி இன்று வரை சீனாவின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆற்று மற்றும் கடலோரப் பகுதியிலும் துவன்வூ விழாவை முன்னிட்டு கொண்டாடும் முக்கிய நிகழ்ச்சியாகும்.

துவன்வூ விழாவின் போது சீனாவின் பல இடங்கள் வெப்பமான கோடைக்காலத்தில் உள்ளன. பருவங்களின்படி உடல் நிலையை சரிப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் சீன மக்கள், துவன்வூ திருநாளில், மருக்கொழுந்து உள்ளிட்ட தாவரங்களை நீரில் கொதிக்க வைத்து குளிப்பதுண்டு. மூலிகை சாறு எனப்படும் இந்த நீரில் குளித்தால், தோல் நோய் மற்றும் கொசு கடியைத் தவிர்க்க முடியும். தற்போது தோல் பராமரிப்பு பொருட்கள் அதிகமாக உள்ளன. ஆனால் தாவரங்களால் தயாரிக்கப்பட்ட மூலிகை சாற்றில் குளிக்கும் மரபுவழி மூலம் உடல் நலத்தை பராமரிக்க பலர் விரும்புகின்றனர்.

சீனாவில் துவன்வூ விழா கொண்டாட்டம்

ட்சொங்ட்சி எனும் உணவு வகையைச் சாப்பிடுவதும் துவன்வூ திருவிழாவின் போது மரபு வழி பழக்க வழக்கங்களில் ஒன்றாகும். சீனாவின் தென் பகுதி முதல் வட பகுதி வரை நூறு வகைகளான ட்சொங்ட்சி காணப்படுகின்றன. பெய்ஜிங் நாட்டுப்புற பழக்கவழக்க அருங்காட்சியகத்தில், ட்சொங்ட்சி தயாரிப்புக்கான சிறப்புப் பகுதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்திலிருந்து பெய்ஜிங்கிற்கு வந்த பயணி ஒருவர் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், துவன்வூ தொடர்பான பண்பாட்டு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் போது, திருவிழாவைப் பற்றி அதிகம் புரிந்து கொள்வதோடு, பாரம்பரிய பண்பாட்டின் வசீகரத்தையும் ஆழ்ந்த முறையில் உணர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

துவன்வூ விழா விடுமுறையின் காரணமாக, சீனர்கள் பலர் குடும்பத்தினருடன் ஒன்றுகூடி மகிழவும், வாகனத்தை ஓட்டி சுற்றுலா பயணம் செய்யவும் வாய்ப்புகள் அதிகம். சீன நாட்டுப்புற பழக்கவழக்க சங்கத்தின் துணைத் தலைமைச் செயலாளர் சாங் போ அம்மையார் கூறுகையில், காலத்தின் வளர்ச்சியுடன் பாரம்பரிய விழாவில் அதிகப் புதிய உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மரபுவழி திருவிழா பொது மக்களின் வாழ்க்கையில் ஊடுருவி, புதிய உயிராற்றலைப் பெற்றுள்ளதை இது காட்டுகிறது என்று தெரிவித்தார். மேலும், தேசப் பண்பாட்டின் பரவலில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்றான துவன்வூ, இயற்கை விதி மற்றும் பருவங்களுக்கிணங்க சீன மக்கள் செயல்படும் எழுச்சியையும், குடும்பம் மற்றும் நாட்டின் மீதான ஆழ்ந்த அன்புணர்வையும் வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்