சீனாவின் பெய்தாவ் தொகுதி:உலகத்திற்கு முக்கியப் பங்கு

சரஸ்வதி 2019-05-23 09:23:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் பெய்தாவ் தொகுதி:உலகத்திற்கு முக்கியப் பங்கு

மே திங்கள் 22ஆம் நாள், 10ஆவது சீனச் செயற்கைக் கோள் புவியிடங்காட்டி ஆண்டுக் கூட்டம் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. புவியிடங்காட்டி வசதியின் 10 ஆண்டுகாலம் என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும். கடந்த 10 ஆண்டுகாலத்தில், செயற்கைக் கோள் புவியிடங்காட்டி தொகுதியின் வளர்ச்சி, சாதனை, வாய்ப்பு மற்றும் எதிர்காலம் இதில் விவாதிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகாலத்தில், உலகச் செயற்கைக்கோள் புவியிடங்காட்டி தொகுதி விரைவாக வளர்ச்சியை அடைந்துள்ளது. இதில், சீனாவின் பெய்தாவ் தொகுதி மாபெரும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. அதன் சேவை குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து உலக அளவில் விரிவடைந்து வருகிறது. இதன் மூலம், உலக செயற்கைக் கோள் புவியிடங்காட்டி தொகுதி என்ற இலட்சியத்திற்கு சீனாவின் அறிவுத்திறமை மற்றும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளது என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

பெய்தாவ் செயற்கைக் கோள் தொகுதி, சீனாவின் முக்கிய தேசிய விண்வெளி அடிப்படை வசதியாகும். இத்தொகுதியின் கட்டுமானத்தில் சீன அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. தற்போது, இத்தொகுதி உலகளவில் சேவை வழங்கும் கட்டத்தில் நுழைந்துள்ளது. இதன் பயன்பாட்டுத் துறை விரைவாக வளர்ந்து வருகிறது. இது, உலகச் செயற்கைக் கோள் இலட்சியத்திற்கு சீனாவின் முக்கிய ஆற்றலை வினியோகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் செயற்கைக் கோள் புவியிடங்காட்டித் தொகுதி கமிட்டியின் தலைவர் வாங் சௌ யாங் இதில் உரைநிகழ்த்திய போது கூறுகையில்

கடந்த 10 ஆண்டுகளில், பெய்தாவ் தொகுதியின் சேவை, ஆசிய-பசிபிக் பிரதேசத்திலிருந்து உலகளவில் விரிவாக்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானம் சீராக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு, 10 ஏவூர்திகளின் மூலம் 19 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன. இது சீனாவின் வேகத்தைக் காட்டுகிறது. திட்டமிடப்பட்ட காலத்துடன் ஒப்பிடும் போது, 2 ஆண்டுகளுக்கு முன்பே உலகளவில் சேவை வழங்குவதை நிறைவேற்றியுள்ளது. உலகச் செயற்கைக் கோள் புவியிடங்காட்டி இலட்சியத்திற்கும் இது பங்காற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இது வரை, சீனாவின் பெய்தாவ் தொகுதியின் 38 செயற்கைக் கோள்கள் புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. உலகளவில் பயன்பாட்டாளர்களுக்கு சேவையை வழங்கி வருகின்றன. திட்டப்படி, இவ்வாண்டில் பெய்தாவ் 3ஆவது தொகுதியைச் சேர்ந்த 6 முதல் 8 வரையிலான செயற்கைக் கோள்கள் ஏவப்படும். 2020ஆம் ஆண்டில் 2 முதல் 4 வரை பெய்தாவ் செயற்கைக் கோள்கள் செலுத்தப்படும். ஆகவே, 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள், பெய்தாவ் 3ஆவது தொகுதியின் கட்டுமானம் முற்றிலும் முடிக்கப்பட்டு, உலகின் பயன்பாட்டாளர்களுக்கு மேலும் தரமான சேவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்