சீனச் செயலிகளை முடக்கினால் முன்னேற்றச் செயல்கள் முடங்குமா?

சோமசுந்தரம் 2020-06-30 17:30:12
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn


(படம்:CFP)

இந்திய – சீன எல்லைப் பிரச்சனை என்பது வரலாறு விட்டுச் சென்ற பங்காளி சண்டை. இது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருகிறது என்றாலும் உலகமயமாக்கலின் காலக்கட்டத்தில் சீனாவை இந்தியாவும், இந்தியாவை சீனாவும் தவிர்த்து விட்டு, தனித்து வளர்வது மட்டுமல்ல தனித்து வாழ்வது என்பதும் சாத்தியமில்லாத ஒன்று என்பதை நாம் ஒப்புக் கொண்டுத்தான் ஆக வேண்டும்.

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் சீனாவுக்கு எதிரான கோஷங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. இதை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் தேசப்பற்று என்றும், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கொடுக்கும் மரியாதை என்றும் சொல்லலாம். ஆனால் இத்தகைய போக்கு எல்லைப் பிரச்சனையை தீர்க்க, சீனாவுடன் சுமுகமான உறவை மேற்கொள்ள எந்த விதத்திலும் உதவாது என்பதே நிதர்சனம்.

இரு நாட்டின் அரசு தரப்புக்களுக்கிடையில் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை உள்நாட்டு அரசியல் லாபத்திற்காக, பொதுமக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டு, எதிர்ப்பு கோஷங்கள், போடுவது, சீனப் பொருட்களை புறக்கணிப்பது, இந்தியாவில் வாழும் சீனர்களுக்கு ஹோட்டல்களில் தங்க அனுமதி மறுப்பது, அவர்களுக்குத் தேவையற்ற இடையூறு செய்வது போன்ற செயல்கள் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாகாது.

இந்தியாவில் வாழும் சீனர்களின் எண்ணிக்கையை விட சீனாவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். அங்கு வாழும் இந்தியர்களுக்கு அந்நாட்டு மக்கள் எந்த இடையூறு செய்ததாகவும் இதுவரை செய்திகள் இல்லை. கர்நாடகாவில் தண்ணீர் தரவில்லை என்றால் அம்மாநில மக்களை தமிழகத்தில் இடையூறு செய்வது, முல்லைப் பெரியாறு பிரச்சனை என்றால் கேரள எல்லையில் தமிழர்களை தாக்குவது இது போன்ற கண்ணோட்டத்தில் சீன – இந்திய பிரச்சனைகளை அணுகுவது இரு நாட்டு உறவுக்கு மட்டுமல்லாது, பொதுமக்களுக்கும் நன்மை தராது.

இன்று நாம் ஆவேசத்தால் உணர்ச்சி வசப்பட்டு சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம், சீன செயலிகளுக்குத் தடை விதிப்போம் என்று நல்லுறவுக்கான ஒவ்வொரு கதவுகளாக மூடினால் அதனால் ஏற்படப்போகும் நன்மை தீமை என்ன என்பதை யோசிக்க வேண்டும்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் போர் நடந்த போதும் சீனாவின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட வில்லை. சீனா தொடக்கத்தில் இருந்தே, தனக்கென ஒரு பாதையை அமைத்து, இணையம் ஆனாலும் தொழில்நுட்பம் ஆனாலும் சொந்தமாக எல்லாவற்றையும் உருவாக்கி வைத்துள்ளது. இந்தியா எல்லா வசதி வாய்ப்புகளை கொண்டிருந்தும், இன்று வரை அமெரிக்காவையும், பிற நாடுகளையும் சார்ந்து இருக்கும் நிலையில் திடீர் என சீன பொருட்களைப் புறக்கணிக்கப்போவதாக கொள்கை முடிவு எடுக்குமானால் எத்தனை நாளைக்கு அது நிற்கும்.

 59 சீன செயலிகளுக்கு தடைவிதிப்பதாக அறிவித்துள்ள அரசு இதற்கு மாற்று ஏற்பாடு என்ன செய்துள்ளது. தொழில் சார்ந்து சீனாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் வி.சேட் மூலம் தான் தங்கள் வர்த்தக உரையாடல்களை மேற்கொள்கிறார்கள். இந்த தடை நடவடிக்கையால் அவர்களின் வர்த்தகம் பாதிக்கப்படும். எனவே வி.பி.என் மூலம் மீண்டும் அவர்கள் இந்த செயலிகளை சட்ட விரோதமகா பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அரசால் அனைத்தையும் கண்காணிக்க முடியுமா?

உணமையிலேயே அரசு சீனாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் தடை செய்ய விரும்புகிறதா அவ்வாறு செய்யதான் முடியுமா? அப்படி செய்தால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று இப்போது சீன பொருட்களுக்கு எதிராக கோஷம் போட்டுக் கொண்டிருக்கும் கூட்டங்களுக்கு தெரியுமா? அடிப்படை உலோகங்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள், ஜவுளி மற்றும் மூலப்பொருட்கள் சீனா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் முக்கிய பொருட்களாகும், அதே நேரத்தில் இந்தியா முக்கியமாக சீனாவின் இயந்திர மற்றும் மின்சார பொருட்களை இறக்குமதி செய்கிறது. விளையாட்டுப் பொம்மைகள் முதல் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களின் தேவைக்கும் சீனாவுடனான வர்த்தகம்தான் நமக்கு கை கொடுத்து வருகிறது.

சீனா-இந்தியா இருதரப்பு வர்த்தகம் கிட்டதட்ட 100 பில்லியன் டாலர்களை நெருங்கி வருகிறது. இந்தியாவில் சீனாவின் முதலீடுகள்  8 பில்லியன் டாலருக்கு மேலாக உள்ளது. இரு நாடுகளும் பொருளாதாரத்தில் ஒன்றை ஒன்று தவிர்க்க முடியாத ஆசியாவின்  தூண்களாக உள்ளன. இதை மறந்து தற்போதைய சூழலை மட்டும் கருத்தில் கொண்டு இதுபோன்ற வெற்று அறிவிப்புகளை அரசு வெளியிடுமானால் அது யாரை திருப்திப்படுத்துவதற்காக. என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

மேக்-இன் இந்தியா திட்டமே இன்னமும் ஏட்டளவில் இருக்கும் நிலையில் தற்சார்பு இந்தியாவின் திட்டம் மாய மந்திரத்தால் உடனே வந்துவிடுமா? சீனாவின் பொருட்களை புறக்கணிப்பது, சீனாவுடனான வர்த்தக உறவைத் துண்டிக்க நினைப்பதும் சகோதரர்களுக்குள் இருக்கும் நிலத்தகராறில் வீட்டுக்கு தீ வைப்பது போல் ஆகிவிடும்.

இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்று உலக அரங்கில் போற்றப்படுவது போல் சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில் சுமுகமான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண விளைவதே விவேகமான செயலாகும்.

மக்கள் தொகை அதிகம் கொண்ட இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று சார்ந்து ஒத்துழைப்புடன் செயல்படுவதுதான் ஆசியாவின்  பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது என்பதை இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட விளையும் கூட்டங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்