சீனாவில் தனிநபர் வருமான வரிச் சீர்திருத்தம்

மதியழகன் 2018-06-19 18:38:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் வருமான வரிச் சட்டத் திருத்த வரைவு, செவ்வாய்கிழமை காலை 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் நிலைக் குழுவின் 3ஆவது கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் திருத்த வரைவு, சீனாவின் தனிநபர் வருமான வரியில் பெரிய சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு, மாதததிற்கு தற்போதுள்ள 3,500 யுவானில் இருந்து 5,000ஆக உயர்த்தப்படும்.

சீனாவில், மதிப்புக் கூட்டு வரி, தொழில் நிறுவனங்களின் வருமான வரி ஆகியவற்றை அடுத்து, 3ஆவது முக்கிய வரி வகையாக, தனிநபர் வருமான வரி விளங்குகிறது. 2017ஆம் ஆண்டு, இந்த வரித் தொகை, ஒரு லட்சத்து 19ஆயிரத்து 660 கோடி யுவான் ஆகும். 1980ஆம் ஆண்டு தனிநபர் வருமான வரிச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு 7ஆவது முறையாக மேற்கொள்ளப்படும் பெரிய திருத்தம் இதுவாகும்.

2018ஆம் ஆண்டு மார்ச் திங்கள் அரசுப் பணியறிக்கையில், தனிநபர் வருமான வரியைச் சீர்திருத்தம் செய்து,  வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்றும்,  மக்கள், உழைப்புடன் வருமானத்தை அதிகரித்து, வசதியான வாழ்க்கையை அடைய வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டது. எனவே,  தனிநபர் வருமான வரிச் சீர்திருத்தம் தொடர்பாக கட்சி மற்றும் அரசின் தீர்மானத்தைச் செயல்படுத்தும் விதமாக, இந்தச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரி விலக்கு உச்சவரம்பு, 5,000 யுவானாக உயரும் என்பது தொடர்பான  திருத்தம் பற்றி, சீன நிதித்துறை அமைச்சர் லியு குன் கூறியதாவது:

பொது மக்களின் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்தில் கொண்டு, இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொலைநோக்குத் தன்மை வாய்ந்த இத்திருத்தத்தால், வரிச் சுமை வெவ்வேறு அளவில் குறையும். குறிப்பாக, நடுத்தர வருமானத்தின் கீழ் உள்ளவர்களின் வரிச் சுமை தெளிவாகக் குறையும். அதனால், மக்களின் வருமானம் அதிகரித்து, நுகர்வுத் திறன் உயரும் என்று தெரிவித்தார்.

கூடுதலாக, இந்தத் திருத்த வரைவில் புதிய சலுகைகள் இணைக்கப்படும்.  தற்போதுள்ள  ஓய்வூதியக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வேலை இழப்புக் காப்பீடு உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளின் அடிப்படையில், குழந்தைக் கல்வி, தொடர் கல்வி, கடும் நோய், வீட்டுக் கடன் வட்டி, வீட்டு வாடகை ஆகியவற்றுக்கான செலவுகள் தொடர்பான சிறப்புப் பிரிவுகள் புதிதாக சேர்க்கப்படும். தனிநபர் வருமானத்தில் இருந்து இந்தச் செலவுகள்  நீக்கப்பட்ட பிறகான தொகைக்கே வரி வசூலிக்கப்படும். இதனால், வரி வசூலிப்புத் தொகை மேலதிகமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, வரி ஏய்ப்புக்கு எதிராக, இந்த திருத்தத் வரைவில் புதிய விதிகள் விதிக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்