• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-18 15:24:47    
சதுப்பு நிலத்தில் பறவைகளை பாதுகாக்கும் மக்கள்

cri

காலை மூடுபனி கலையாத போது பச்சையான நாணல் படர்ந்த சதுப்பு நிலத்தில் பறவைகளின் அருமையான பாடல் ஒலியைக் கேட்கலாம். ஒரு லட்சத்துக்கு அதிகமான ஹெக்டர் நிலப்பரப்புடைய Xiang Hai சதுப்பு நிலம், சீனாவின் தேசிய அளவிலான இயற்கை புகலிடமாகவும், உலகளவில் முதல் தர சதுப்பு நிலமாகவும் இருக்கிறது. இங்கே நீர், புல் மற்றும் மரங்கள் அதிகம். பறவைகள் மேலும் அதிகம். சிறிதும் பெரிதுமான பறவைகள் சுமார் 300 வகைகளில் உள்ளன. பல பறவைகள் உலகளவில் அரிய பறவை வகைகளைச் சேர்ந்தவை. Xiang Hai Hu ஏரி, பறவைகள் விரும்பும் இடமாகும்.

பறவைகள் மனித குலத்தின் நண்பர்களாகும். அவை இடம் பெயர்ந்து, இனப் பெருக்கம் செய்து, பறக்கும் போக்கில் எதிர்பாராத நிலையும், உயிராபத்தை விளைவிக்கக் கூடிய நிலையும் கூட ஏற்படும். அப்போது, மனித குலம் அவற்றை பாதுகாக்க வேண்டும். Xiang Hai பறவைக்கான முதலுதவி அணியின் தலைவர் Lin Baoqing கூறியதாவது—

"பறவைகள் இடம் பெயரும் முக்கிய வழியில் Xiang Hai Hu இயற்கை புகலிடம் அமைந்துள்ளது. உணவுப் பற்றாக்குறை, நோய் அல்லது எதிர்பாராத சம்பவத்தின் காரணமாக சில பறவைகள் காயமடையலாம்" என்றார் அவர்.

காயமுற்ற அரிய வகை பறவைகளைக் காப்பாற்றும் பொருட்டு, பறவைகளின் முதலுதவி அணியை Xiang Hai Hu இயற்கைப் புகலிடம் உருவாக்கியுள்ளது. ஒரு நாள், சில நூறு கிலோமீட்டர் தொலை தூரத்தில் அமைந்துள்ள ஒரு நகரிலிருந்து உதவிக்கான வேண்டுகோள் இவ்வணிக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்டது. இவ்வணியின் தலைவர் Lin Baoqing உடனடியாக வாகனத்தில் அந்நகருக்கு விரைந்து சென்றார்.

"பார்த்த போது, ஒரு செங்கொண்டை கொக்கு கடும் நச்சு அடைந்திருந்ததை கண்டறிந்தேன். உடனே நச்சு நீக்கும் ஊசி போட்டேன். இயற்கைப் புகலிடத்துக்குத் திரும்பிய பின், இந்த நோய் அறிகுறிக்கு ஒட்டுமொத்த சிகிச்சை அளித்தோம். இந்த நாரை, நாரை தீவில் சுமார் 7 ஆண்டுகள் வாழ்ந்து, 4 முறை இனப் பெருக்கம் செய்துள்ளது" என்று Lin Baoqing கூறினார்.

Xiang Hai Hu இயற்கைப் புகலிடத்தில், காயமுற்ற பறவைகளைக் காப்பாற்றுவது, முதலுதவி அணியினரின் பணி மட்டுமல்ல, உள்ளூர் பொது மக்களின் கடமையும் ஆகும். அண்மையில் காயமுற்ற ஒரு வெண் நாரைக்கு நல்லவர் ஒருவர் உதவினார். Xiang Hai இடத்தில் வாழும் விவசாயி Li Chunfu ஒரு நாள் மோட்டார் வாகனத்தில் மகனை இருத்தி சென்று கொண்டிருந்தார். கிராமத்தின் நுழைவாயில் அருகில், ஒரு வெண் நாரையை அவர் பார்த்தார். அதன் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்திக் கொண்டிருந்தது. வாகனத்திலிருந்து உடனடியாக இறங்கி, அந்த வெண் நாரையை எடுத்துக் கொண்டு, அதனை இயற்கைப் புகலிடத்துக்கு அனுப்ப விரும்பினார். அவரது மகன் வெண் நாரையை மிக அருகில் பார்ப்பது இதுவே முதல்முறை. எதிர்பாராத நேரத்தில், விழிப்புடன் இருந்த வெண் நாரை திடீரென கொத்தியது. அவரது மகனின் கண்ணில் காயம் ஏற்பட்டு இரத்தம் பெருகி வழிந்தது. Li Chunfu வெண் நாரையை இயற்கைப் புகலிடத்துக்கு அனுப்பிய பின், காயமடைந்த தனது மகனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அவர் பேசுகையில், வருத்தமடையவில்லை, காயமுற்ற வெண் நாரையைக் கண்ட அவரால் அதனை காப்பாற்றாமல் இருக்க முடியவில்லை என்று கூறினார்.

Xiang Hai இடத்தின் சூழல் அழகானது. இவ்விடத்திலுள்ள பறவைகள் அழகானவை. இவ்விடத்தில் Li Chunfu போன்று பறவைகளை விரும்பி பாதுகாக்கும் மக்கள் அதிகம். Xiang Haiயிலுள்ள காட்டுப் பறவைக்கான மருத்துவ உதவி மையத்தில், கடந்த சில ஆண்டுகளில், காட்டு செங்கொண்டை கொக்கு, கானமயில், தங்க கழுகு உள்ளிட்ட 15 வகைகளைச் சேர்ந்த 113 பறவைகள் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு காப்பாற்றப்பட்ட பறவை பற்றியும் மனதைத் தொடும் கதை ஒன்று இருக்கிறது என கூறலாம்.

Xiang Hai Hu இயற்கைப் புகலிடத்தின் பணியாளர்கள் காயமுற்ற செங்கொண்டை கொக்கு ஒன்றை வெற்றிகரமாக காப்பாற்றினர். ஓராண்டுக்குப் பின், குணமடைந்த இந்த கொக்கை இயற்கை சூழலுக்கு திரும்ப வைக்க பணியாளர்கள் விரும்பினர். ஆனால் மருத்துவ உதவி மையத்துக்கு முன்னிருக்கும் நாணல் சதுப்பு நிலத்தில் அது தங்கியிருந்தது. அப்போது பல காட்டுக் கொக்குகள் தென் பகுதியிலிருந்து Xiang Haiக்கு திரும்பின. காப்பாற்றப்பட்ட கொக்கு காட்டுக் கொக்கு ஒன்றுடன் காதல் கடலில் மூழ்கியது. விரைவில் அவை ஒரு குடும்பத்தை உருவாக்கின. குளிர்காலத்தில் பறவைகள் இடம்பெயரத் துவங்கின. காப்பாற்றப்பட்ட கொக்கும் அதன் குழந்தைகளும் தங்கியிருந்தன. அந்த காட்டுக் கொக்கு மட்டும் கொக்குக் குழுவுடன் தென் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. ஆனால் அடுத்த ஆண்டின் வசந்த காலத்தில் பறந்து சென்ற அந்த காட்டுக் கொக்கு தூரத்திலிருந்து Xiang Haiக்கு திரும்பியதை பணியாளர்கள் கண்டறிந்து வியப்படைந்தனர். பணியாளர் Wang Liwei கூறியதாவது—

"அந்த காட்டுக் கொக்கு நாணல் சதுப்பு நிலத்தில் இடைவிடாமல் கீச்சு குரலில் பாட தொடங்கியது. பறவைகளின் இசை ஒலி, ஆடல், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி என கண்டறிந்தோம். குளிர்காலம் மீண்டும் வந்த போது, நாங்கள் காப்பாற்றிய கொக்கு மீண்டும் பிரிவைச் சந்திக்குமா என வளர்ப்புப் பணியாளர் கவலைப்பட்டார். ஆனால் கடைசித் தொகுதியான செங்கொண்டை கொக்குகள் இடம்பெயர்ந்த பின்னும், அந்த காட்டுக் கொக்கை காண முடிந்தது" என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில் Xiang Hai Hu இயற்கைப் புகலிடம் சுமார் 5 இலட்சம் யுவானை முதலீடு செய்து, அவசர மருத்துவ உதவிக்கான 2 வாகனங்களை வாங்கி, 24 மணி நேர தொலைபேசி தொடர்பு முறையை உருவாக்கி, காட்டுப் பறவைகளின் அவசர மருத்துவ உதவிக் குழுவை விரிவாக்கியுள்ளது. தற்போது நவீன மயமான மருத்துவ உதவி மையமும் நிறுவப்பட்டுள்ளது. காட்டுப் பறவைகள் காப்பாற்றப்பட்டு உயிர் பிழைக்கும் விகிதம் 90 விழுக்காட்டுக்கு மேலாகும். Xiang Hai Hu இயற்கைப் புகலிடத்தின் நிர்வாகப் பணியகத்தின் துணைத் தலைவர் Bao Jun கூறியதாவது—

"கடந்த சில ஆண்டுகளாக, வெற்றிகரமாக காப்பாற்றிய பறவைகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மருத்துவ உதவி அளவு, Ji Lin மாநிலத்தின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிக்கும் உள்மங்கோலியாவின் சில பகுதிகளுக்கும் விரிவாகியுள்ளது" என்று அவர் கூறினார்.

அன்பான மக்களால் தான், காயமுற்ற பறவைகள் காப்பாற்றப்பட்டு புதிய உயிருடன் இயற்கைச் சூழலுக்கு திரும்பி, நீல வானத்தில் தாராளமாக பறக்க முடியும்.