• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜுலை 20ம் நாளிட்ட நேயர் நேரம் நிகழ்ச்சியின் கடிதப்பகுதி
  2011-07-20 14:27:36  cri எழுத்தின் அளவு:  A A A   
கலை முதலாவதாக, நேயர் கடிதம் நிகழ்ச்சி பற்றி ஆரணி ரேவதி அனுப்பிய கடிதம். உலகின் பல பகுதிகளிலிருந்து வாரந்தோறும் சீன வானொலி தமிழ்ப் பிரிவிடம் தொடர்பு கொள்ளும் நேயர்களின் பெயர் பட்டியலை அறிவித்து, மகிழ்வூட்டுவது தான் நேயர் கடிதம் நிகழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியில் எனது பெயரை அறிவிப்பாளர் மோகன் வாசித்தபோது மகிழ்ச்சியடைந்தேன். மேலும், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்ற விபரங்களை செய்திகளில் செவிமடுத்தேன்.

தமிழன்பன் அடுத்தாக, இலங்கை ஆரயம்பதி முஹம்மது நிஸார் பாத்திமா நிப்றா இசை நிகழ்ச்சிகள் பற்றி அனுப்பிய கடிதம். நீண்டகாலமாக சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை கேட்டு வருகின்றேன். சீன தமிழை கேட்பதே எனக்கு தனி விருப்பம். அதில் ஒலிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. இனிய பழைய மற்றும் புதிய பாடல்களை வழங்கும் நேயர் விருப்பம், சீன இசை பாணிகளை அறிமுகபடுத்தும் சீன இசை நிகழ்ச்சி, வார நாட்களில் ஒலிபரப்பாகும் சீனப் பாடல் மற்றும் தமிழ் பாடல் அனைத்தும் எனக்கு மிகவும் விருப்பமானவை.

கலை தொடர்வது, உத்திரக்குடி கலைவாணன் ராதிகா அறிவியல், கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். அணுமின் நிலையங்களில் அதிக பணிகளை மனிதர்களே மேற்கொள்ளும் நிலை மாறி, இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து, பாதுகாப்பு வளாந்து வந்துள்ளதை அறிவியல் உலகத்தில் அறிந்தோம். நலவாழ்வு பாதுகாப்பில் சாதகமான உணவு அளவு பற்றி கூறப்பட்டது. கொழுப்பு வெளியேற்றத்திற்கு வெங்காயம் சிறந்தது. 300கிராம் தானியத்தை மூன்று நேரமும் ஊறவைத்து சாப்பிட வேண்டும். இரவு ஒன்பது மணிக்கு மேல் சிற்றுண்டி கூட சாப்பிடக் கூடாது என்றும் அறிவுறுத்தியதை புரிந்து கொண்டோம்.

தமிழன்பன் இனி, செந்தலை என்.எஸ்.பாலமுரளி வறியோருக்கு வீட்டு வசதி திட்டம் பற்றி எழுதிய கடிதம். சொந்த வீடு என்பது எட்டாக்கனியாகி கொண்டிருக்கும் இந்த நாட்களில், குறைந்த வருமானம் பெறுவோரும், சொந்த வீடுகளில் வாழ வழிசெய்யும் வறியோருக்கு வீட்டு வசதி திட்டம் சீனாவில் செயல்படுத்தப் படுவதை பாராட்ட வேண்டும். இத்திட்டத்தில் ஒரு கோடி வீடுகளை கட்டியமைக்க திட்டமிட்டுள்ளதை அறிந்தேன். உலகில் உன்னதமான திட்டங்களில் ஒன்று இது என்று கூறுவேன். இந்தியாவின் தமிழ் நாட்டிலும் இதுபோன்ற வீட்டு வசதி திட்டம் உள்ளது. ஆனால் எந்த அளவு நிறைவேறி வருகிறது என்பது எனக்கு தெரியாது.

கலை அடுத்து, சீன பண்பாடு நிகழ்ச்சி பற்றி பரசலூர் பி.எஸ்.சேகர் அனுப்பிய கடிதம். கி.மு.206 ஆம் ஆண்டுக்கு முன்னர், ஹான் வமசத்தின்போதே மூங்கிலிருந்து தாள் தயாரிப்பதை சீனர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை அறிந்தேன். அது போன்றே அச்சுக் கலை மற்றும் வெடிமருந்து கண்டுபிடித்ததில் உலகில் முன்னோடிகளாக சீனர்கள் திகழ்தார்கள் என்பதையும் அறிந்தோம். மூங்கிலில் துளைபோட்டு இசைக்கருவியாக பயன்படுத்தும் முறையும் சீனர்கள் அறிந்திருந்தது வியப்படைய செய்தது. சிறந்த நிகழ்ச்சி. மேலும், சீஆன் உலக தோட்டக்கலை கண்காட்சி பற்றிய விபரங்களை செய்தி விளக்கத்தில் கேட்டோம். ஒரு கோடியே 20 இலட்சம் மக்கள் அதனை பார்வையிடுவர் என மதிப்படப்பட்டதே அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியது.

தமிழன்பன் தொடர்வது, மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி நீலகிரி கிழ்குந்தா கே.கே.போஜன் எழுதிய கடிதம். டிராகன் பற்றி பல தகவல்களை சீன பண்பாடு நிகழ்ச்சியில் கேட்டிருக்கிறோம். டிராகன் படகு விழா பற்றி இன்றைய மலர்ச்சோலை நிகழ்ச்சியில் கேட்டோம். 58 நாடுகளில் இந்த விழா கொண்டாடப்படுவது, அரசு விழாவாக முக்கியத்துவம் பெற்றது, சந்திர நாள்காட்டியில் இவ்விழா குறிக்கப்படுவது போன்ற இவ்விழா பற்றி அரிய தகவல்களை இன்றைய நிகழ்ச்சி தாங்கி வந்தது. மேலும், நேயர்களின் நட்பு பயண அனுபவம் ஒவ்வொரு நாளும் சிற்றலையில் அறிவிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. நான்கிங்கில் சுற்றுலா பயணம், நியான் ஆற்று பாலம், சீன மக்களின் தலைசிறந்த 10 வெளிநாட்டு நண்பர்களில் ஒருவரான சன்யாட்சன் கல்லறை சந்திப்பு என்பவை மூன்று நேயர்களின் பணய அனுபவத்தை நாள்தோறும் கேட்கும் ஆவலை கூட்டின.

கலை இனி, செய்தி விளக்கம் பற்றி கல்பாக்கம் மும்பை சுகுமார் அனுப்பிய கடிதம். இந்திய இலங்கை கப்பல் போக்குவரத்து தொடங்கிய விபரத்தை கேட்டேன். இரு நாட்டு உறவையும், வர்த்தகத்தையும் இது வளர்க்கும். மேலும், மூன்று நேயர்களின் நட்புப் பயண அனுபவத்தில் சீனாவில் சுற்றி பார்த்த இடங்களை பாண்டிச்சேரி என். பாலகுமார் அறிவித்தார். நன்றாக இருந்தது. சீனா சுற்றுலா தலங்கள் பற்றிய குறுந்தகடுகள் அனுப்பினால், பல நேயர்கள் பயனடைவர் என்று எண்ணகின்றேன். பிளம் பூ மலை பற்றிய இன்பப் பயண நிகழ்ச்சி தகவல் சிறப்பாக அமைந்தது.

தமிழன்பன் அடுத்ததாக, சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி பற்றி திருநெல்வேலி எஸ்.பொருநை பாலு எழுதிய கடிதம். தமிழ் நாட்டில் அதிகமாக கிடைக்கும் காத்தரிக்காய் சமையல் ஒன்றை தமிழ்ப்பிரிவின் தலைவர் கலையரசியும் கிளிட்டஸூம் வழங்கினர். கத்தரிக்காய் சமையல், கத்தரிக்காயிலுள்ள உயிர்சத்துக்கள், மருத்துவக் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறை போன்றவற்றை அழகான தமிழில் மிக சிறப்பாக வழங்கினர். சீன கத்தரிக்காய் சமையலை எங்கள் இல்லத்தில் சமைத்து உண்டு மகிழ்ந்தோம்.

கலை தொடர்வது, இலங்கை கினிகத்தேனை எஸ்.வி.துரைராஜா மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீன வானொலி இலங்கை பண்பலை 102யில் மலர்ச்சோலை நிகழ்ச்சி செவிமடுத்தேன். உலகளவில் நிகழ்ச்சி புதுமையான நிகழ்ச்சிகள் இனிமையாக இருந்தன. சீனாவில் ஆண் ஒருவர் தனது முகத்தை கறுப்பு துணியால் மூடிக் கொண்டு தெருவில் உட்கார்ந்தபடி மணப்பெண் தேடியது நகைப்பாய் இருந்தது. பண்பலை வழியாக சீனத் தமிழ் நிகழ்ச்சிகளை கேட்க வாய்ப்பு வழங்கியிருப்பது, சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை தவறாமல் கேட்பதற்கு உதவியளிக்கிறது.

தமிழன்பன் இனி, தினம் ஓர் இனிய கீதம் பற்றி பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன் எழுதிய கடிதம். நிகழ்ச்சிகளுக்கிடையில் ஒலிபரப்பாகும் தமிழ் அல்லது சீனப்பாடல் எங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன. சீன வானொலியின் மீதான அன்பு, பாசம், நட்பு மூன்றும் சேர்ந்து எங்கள் நெஞ்சத்தை வசியமாக்கிவிடுகிறது. மேலும், நேயர்களின் விருப்பப்பாடல்களை தனிசிறப்பு மிக்க முறையில் இசைலயத்தோடு நேயர் விருப்பமாக வழங்கி எங்களை கவர்ந்திழுக்கும் சீனா வானொலி தமிழ்ப்பிரிவு முன்னேறுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

கலை அடுத்து, ஆரணி எல்.தேவிகா ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் மீட்புதவி பற்றி அனுப்பிய கடிதம். ஜப்பானில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதையும், அதனால் எழுந்த ஆழிப்பேரலையால் ஏற்பட்ட அழிவுகளையும் சீன வானொலி தமிழ்ப்பிரிவு வழியாக அறிய வந்தேன். ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவு அதிர்ச்சியளித்தது. மேலும், சீனாவின் மனிதநேய மீட்புதவிப் பொருட்கள் ஜப்பானுக்கு சென்றடைந்த விபரங்களை அறிந்தேன். உலக மக்களின் துயர்துடைப்பில் சீனாவின் பங்கை அந்த உதவி வெளிப்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040