அமெரிக்கா-இந்தியா இடையே 2+2 பேச்சுவார்த்தை
2022-04-12 16:44:44

அமெரிக்கா-இந்தியா இடையே, வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கெடுத்த பேச்சுவார்த்தை 11ஆம் நாள் வாஷிங்டனில் நடைபெற்றது. பல துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்குவதாக வாக்குறுதி அளித்த அவர்கள், உக்ரைன் நிலைமை பற்றியும் விவாதம் நடத்தினர். அதேநாள், அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், இந்திய தலைமை அமைச்சர் நரந்திர மோடியுடன் காணொளி சந்திப்பு நடத்தினார்.

தூய்மை எரியாற்றல், அறிவியல் தொழில் நுட்பம், இராணுவம் ஆகிய துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பொருளாதாரத் தொடர்பை நெருக்கமாக்கி, மானுட பண்பாட்டியல் பரிமாற்றத்தை விரிவாக்குவதாக பைடனும் மோடியும் வாக்குறுதி அளித்தனர். மேலும் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு மூலம் கோவிட்-19 நோய் தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உலக பொது சுகாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், உலக உணவு பாதுகாப்பை முன்னேற்றி, இந்தோ-பசிபிக் பிரதேசத்தின் சுதந்திரம் மற்றும் திறப்பை உறுதி செய்யவும் இருதரப்பும் தொடர்ந்து பாடுபடும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.