இந்தியாவில் பயணிகள் ரயில் ரத்து – மின்சாரப் பற்றாக்குறை எதிரொலி
2022-05-01 16:52:11

இந்தியாவில் மின்சாரப் பற்றாக்குறை நிலவி வருவதற்கு மத்தியில், நிலக்கரி ஏற்றிச் செல்லும் தொடர்வண்டிகள் விரைவில் செல்லும் விதம், 42 பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைவாக உள்ளதால், அவைகளுக்கு நிலக்கரியை துரிதமாகக் கொண்டு செல்லும் விதம் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

42 தொடர்வண்டிகள் சேவை ரத்து செய்யப்பட்டதால், இத்தொடர்வண்டிகளின் 753 பயணங்கள் ரத்தாகின. இதனால், நிலக்கரி ஏற்றிச் செல்லும் தொடர்வண்டி எவ்வித தடையும் இன்றி விரைவாகச் செல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நிலக்கரி உற்பத்தி மாநிலங்களான சத்தீஷ்கர், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மின்சாரத் தட்டுப்பாடு அறைகூவலாக மாறியுள்ளது.