ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் இருந்தவாறு பேச்லெட்டுடன் காணொளி வழி சந்திப்பு
2022-05-25 15:35:30

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 25ஆம் நாள் பெய்ஜிங்கில் இருந்தவாறு காணொளி வழியில் மனித உரிமைக்கான ஐ.நாவின் உயர் ஆணையர் பேச்லெட்டுடன் சந்திப்பு நடத்தினார்.

சீனப் பயணம் மேற்கொள்ளும் பேச்லெட்டுக்கு ஷிச்சின்பிங் வரவேற்பு தெரிவித்ததோடு, சீன வரலாறு மற்றும் பண்பாட்டுடன் இணைந்து, சீன மனித உரிமை துறையின் வளர்ச்சியுடன் தொடர்புடைய முக்கிய விவகாரங்களை விளக்கிக் கூறி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசு பன்முகங்களிலும் மனித உரிமைகளைப் பேணிக்காத்து உத்தரவாதம் செய்யும் நிலைப்பாட்டை வெளிக்காட்டினார்.

சமமான, ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்கும் அடிப்படையில் பல்வேறு தரப்புகளுடன் மனித உரிமை துறையில் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு, ஒத்த கருத்துக்களை விரிவாக்கி, சர்வதேச மனித உரிமை துறையை முன்னேற்றி, பல்வேறு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய சீனா விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும், மக்களை மையமாகக் கொண்டு செயல்படுவது, பல்வேறு நாடுகளின் மனித உரிமைக்கான வளர்ச்சிப் பாதைக்கு மதிப்பளிப்பது, பல்வகை மனித உரிமைகளை ஒருங்கிணைத்து பேணிக்காப்பது, உலகளாவிய மனித உரிமை மேலாண்மையை வலுப்படுத்துவது ஆகியவை தற்போது செவ்வனே மேற்கொள்ள வேண்டிய 4 பணிகளாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேச்லெட் கூறுகையில், நடப்பு பயணத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றேன். சீன அரசு மற்றும் பல்வேறு சமூக துறைகளின் பிரமுகர்களுடன் பரந்தளவில் நேரடி தொடர்பு கொள்ள உள்ளேன். சீனா பற்றி நன்கு அறிந்து கொள்ள இப்பயணம் துணைபுரியும் என நம்புகின்றேன். வறுமை ஒழிப்பு, மனித உரிமை பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் சீனாவின் முயற்சிகள் மற்றும் சாதனைகளையும், பலதரப்புவாதத்தைப் பேணிக்காப்பது, உலகளாவிய சவால்களைச் சமாளிப்பது, உலகின் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவது உள்ளிட்ட துறைகளில் சீனாவின் பங்குகளையும் பாராட்டுகின்றேன் என்று தெரிவித்தார்.