சீனாவில் இலையுதிர்காலத் தானிய நடவு பகுதி அதிகரிப்பு
2022-07-20 16:52:39

சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் ஜுலை 20ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சத்தின் பொறுப்பாளர் இவ்வாண்டின் முற்பாதியில் விவசாய மற்றும் கிராமப்புறப் பொருளாதார நிலைமை பற்றி அறிமுகம் செய்தார்.

நடுவண் அரசின் கொள்கை ரீதியான ஆதரவு மற்றும் பல்வேறு இடங்களின் முயற்சிகளுடன், இவ்வாண்டின் தானிய உற்பத்தி பொதுவாக சீரான நிலையில் உள்ளது. மூன்று பருவத் தானியங்களில், கோடைக்காலத் தானிய விளைச்சல் 143.5 கோடி கிலோகிராம் அதிகரிப்புடன் அமோக அறுவடை கண்டுள்ளது. முற்போக நெல் பயிர்களில் 60 விழுக்காட்டுக்கு மேற்பட்ட பகுதி அறுவடை செய்யப்பட்டுள்ளது. அதன் மொத்த விளைச்சல் சீரான நிலையில் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு ஆண்டின் தானிய உற்பத்தியில் இலையுதிர்காலத் தானியம் 75 விழுக்காடு வகிக்கிறது. பயிரிடுதல் பரப்பளவு விளைச்சலுக்கான அடிப்படையே ஆகும். தற்போது இலையுதிர்காலத் தானியம் பெரும்பாலும் பயிரிடப்பட்டுள்ளது. பூர்வாங்க மதிப்பீட்டின்படி, நடப்பு ஆண்டின் இலையுதிர்காலத் தானியப் பயிரிடுதல் பரப்பளவு கடந்த ஆண்டை விட அதிகரித்து 8.67 கோடி ஹெக்டருக்கு மேலாக இருக்கக் கூடும் என்று தெரிய வந்துள்ளது.