தைவான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு குறித்து வாங் யீ விளக்கம்
2022-08-06 17:36:18

பினோம்பெனில் கிழக்காசிய ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் கூட்டங்களில் பங்கேற்ற பிறகு, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வெள்ளிக்கிழமை பிற்பகல் செய்தியாளர் சந்திப்பில், தைவான் விவகாரம் குறித்து சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறினார்.

அவர் கூறுகையில்,

தைவான் விவகாரம் குறித்து அமெரிக்க தரப்பு பல பொய் தகவல்களையும் உண்மையற்ற அம்சங்களையும் பரப்பி வருகின்றது. இந்நிலையில்,  உண்மைகளை தெளிவாகக் காட்ட வேண்டியது அவசியமானது. தைவான் எப்போதும் ஒரு நாடு அல்ல. ஒரே சீனா என்பது மட்டுமே உண்டு.  தைவான் நீரிணையின் இரு கரைகள் ஒரே நாட்டைச் சேர்ந்தவை. வரலாற்றிலும் இன்றைய காலத்திலும் காணப்பட்ட நிலைமை இது தான்.  1978ஆம் ஆண்டு சீனாவும் அமெரிக்காவும் தூதாண்மை உறவு நிறுவுவது தொடர்பான கூட்டறிக்கையில்,  சீன மக்கள் குடியரசின் அரசாங்கம், முழு சீனாவைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரேயொரு அரசாங்கம். தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும் என்று தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்நிலைமை சீர்கலைக்கப்பட்டுள்ளது.  இதற்கான காரணம், அமெரிக்கா மற்றும் தைவானிலுள்ள பிரிவினைச் சக்திகள் தான் என்று  தெரிவித்தார்.

சர்வதேச சட்டத்தைப் பின்பற்றி, பல்வேறு நாடுகளின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன் தெரிவித்ததற்கு வாங் யீ பதிலளிக்கையில்

அமெரிக்கா இத்தகைய நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்துவதை, நாங்கள் நீண்டகாலம் கேட்கவில்லை. தற்போது வரை, வேறு நாட்டின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டை அமெரிக்கா பலமுறை மீறியுள்ளது. இதில் அமெரிக்கா மாற்றம் செய்து சரியாக செயல்பட்டால், அதனை ஊக்குவிப்போம். இந்த நிலைப்பாட்டை நடைமுறையில் கொண்டு வருவது திறவு கோல் ஆகும். முதன்முதலில், தைவான் விவகாரத்தில், சீனாவின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டை மதிக்கும் வாக்குறுதியை அமெரிக்கா செயல்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.