இந்தியாவில் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியுடன் கடன் ஒப்பந்தம் கையெப்பம்!
2022-08-23 14:21:22

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரச்  சேவையை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் திங்கள்கிழமை 9 கோடியே 63 லட்சம் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய பொருளாதார விவகாரத் துறையின் மூத்த அதிகாரி ரஜத் குமார் மிஸ்ரா, இந்தியாவிலுள்ள ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனர் டகேயொ கோனிஷி ஆகியோர் புதுதில்லியில் கையெழுத்திட்டனர்.

2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும்  குழாய் நீரை வழங்குவதையும், பாதுகாப்பான, நிலையான  கிராமப்புற நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவைகளை உறுதி செய்வதையும் இலக்காகக் கொண்ட இந்திய அரசின் ஜல் ஜீவன் என்னும் திட்டப்பணியின் நோக்கங்களுடன் இத்திட்டம் இசைவாக உள்ளது என்று மிஸ்ரா கூறினார்.