மருத்துவப் பொருட்களின் வினியோகத்துக்கான பல்வேறு உத்தரவாத நடவடிக்கைகள்
2022-12-30 10:47:49

சீன அரசவையின் கூட்டுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இயங்குமுறை டிசம்பர் 29ஆம் நாள் இணைய வழி செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில், மருத்துவப் பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து, எதிரணு சோதனை பொருள் மற்றும் தடுப்பூசி போன்ற முக்கியப் பொருட்களின் வினியோகத்தை உத்தரவாதம் செய்யும் விதம், தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அமைச்சகம், தேசியச் சந்தை ஒழுங்கு நிர்வாகம், தேசிய மருத்துவத் தயாரிப்புகள் நிர்வாகம் உள்ளிட்ட பல வாரியங்கள் மேற்கொண்ட பல்வகை நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டன.

காய்ச்சல் மற்றும் வலிக்கு எதிரான மருந்துகளுக்கான தேவை குறுகிய காலத்தில் தீவிரமாக அதிகரித்துள்ள நிலைமையில், தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் ஏற்பாட்டில், பல்வேறு இடங்களிலுள்ள தொழில் நிறுவனங்களின் உற்பத்தித் திறன் விரிவாக்கத்துக்கு உதவியளிக்கப்பட்டு, மருந்துகளின் உற்பத்தியும் வினியோகமும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனிடையில், புதிய ரக கரோனா வைரஸ் சோதனைக்கான 49 எதிரணு சோதனை பொருட்களுக்கு சீனத் தேசிய மருத்துவத் தயாரிப்புகள் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்புடைய தொழில் நிறுவனங்களின் தினசரி உற்பத்தி திறன் 11 கோடி நபர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.  மேலும், உலகளவில் மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பூசி உற்பத்தி வரிசையும்  சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஆண்டு உற்பத்தித் திறன் 700 டோஸ்களுக்கு மேலாகும். இதனிடையே, அண்மையில் அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட 4 புதிய தடுப்பூசிகளின் உற்பத்தியும், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.

தவிரவும், தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், வணிக அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், சீனாவின் பெரிய மின்னணு வணிகத் தளங்கள் குறிப்பிட்ட மருந்து விற்பனை தளத்தை உருவாக்கியுள்ளன. தற்போது 11 மாநிலங்கள் மற்றும் மாநகரங்களில் இணைய வழி பயன்பாட்டுக்கு வந்துள்ள இத்தளம், 66 லட்சம் மக்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கி, 20 லட்சம் நோயாளிகளுக்குச் சேவைபுரிந்துள்ளது. சேவையைப் பெற்றவர்களில் 80 விழுக்காட்டினர் தொலைதூரக் கிராமப்புறங்களில் வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.