2020 பொதுத் தேர்தலில் தலையீட்டுக்காக டிரம்ப் மீது குற்றச்சாட்டு
2023-08-15 17:42:44

அமெரிக்காவின் 2020ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தலின் முடிவைக் கவிழ்க்க முயன்றதற்கு, அந்நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் உள்பட சிலரின் மீது ஜார்ஜியா மாநிலத்தில் குற்ற அறிக்கை ஆகஸ்ட் 14ஆம் நாளிரவு தாக்கல் செய்யப்பட்டது.

2021ஆம் ஆண்டில் அரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகிய டிரம்ப் மீது வழக்குதாக்கல் செய்யப்பட்டது இது 4ஆவது முறையாகும்.

ஜார்ஜியாவின் ஃபுல்டன் மாவட்ட உயர்நிலை நீதிமன்றம் வெளியிட்ட இந்த குற்ற அறிக்கையில், டிரம்ப் உள்பட 19 பேர் மீது மொத்தம் 41 குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன. இவற்றில் 13 குற்றங்கள் டிரம்ப் மீது சாட்டப்பட்டுள்ளன.

டிரம்பின் வழக்கறிஞர் குழு வெளியிட்ட அறிக்கையில், குற்ற அறிக்கையிலும், புலனாய்வு மற்றும் குற்றச்சாட்டு நடைமுறைகளிலும் குறைபாடு உள்ளதோடு, அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறியதாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருவதோடு, தன் மீதான புலனாய்வு அரசியல் நோக்கிற்காக மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.