• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-23 16:31:53    
மண் வளம் பெற

cri

உலகளவில் கச்சா எண்ணெயின் விலையேற்றம் பல்வேறு துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கைக்கு மிக முக்கியமான உணவுப் பொருட்களின் விலையேற்றம் மனிதகுலத்தின் நாடிநரம்புகளை பாதித்தது போலாகிவிட்டது. தேவையதிகம் கொண்ட நாடுகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, தானிய இறக்குமதியை அதிகரித்துள்ளன. இயற்கை அழிவுகள், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைச்சீற்றங்கள் பல நாடுகளில் உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டாலும், உணவுக்கு தேவையான தானியங்கள் பயிர்செய்யப்படும் விளைநிலங்களின் மண்வளம் குறைந்து கொண்டே வருவது ஆழமாக கவனிக்க வேண்டிய விடயம். உயிரி மற்றும் கலப்பின விதை தொழில் நுட்பங்கள் அதிக விளைச்சல் தரும் விதை வகைகளை உருவாக்கி, உலக உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

உலக அளவில் மண்வளம் குறைந்து வருவதால் ஐந்தில் ஒரு பகுதி விளைநிலங்களின் மண்ணின் தரம் குறைந்துள்ளது. இதனால் உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது என்று உலக மூலவள ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. மணலும், கூழாங்கற்களும் நிறைந்த, மண்வளம் குன்றிய நிலத்தில் எந்த வீரியமான விதைகளை விதைத்தாலும் பயனில்லை என்று உலக உணவுத்துறையில் பரிசு பெற்ற ஹான்ஸ் ஹாரன் தெரிவிக்கிறார். ஜநா மற்றும் உலக வங்கியின் உதவியோடு இவருடைய குழுவினர் வழங்கிய 2500 பக்க அறிக்கையில் விளைநிலங்களின் மண் வளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை முக்கிய பரிந்துரையாக வலியுறுத்தியுள்ளனர்.

ஆப்பிரிக்க சகாரவை சுற்றியுள்ள ஒரு மில்லியன் சதுர மைல் விளைநிலங்கள் தொடர்ந்து உற்பத்தியில் வீழ்ச்சி கண்டு வருவதாக உலக வேளாண் நிறுவன சங்கத்தின் 2008 மார்ச் திங்கள் அறிக்கை குறிப்பிடுகிறது. ஆப்பிரிக்காவில் மரபணு மேம்படுத்தப்பட்ட சோள பயிர், ஒர் ஏக்கர் நிலத்தில் 9000 பவுண்ட் சோளம் விளைவிக்கக்கூடும். ஆனால் செழுமையற்ற மண்ணும், உரங்கள் வாங்குவதற்கு போதிய வசதியில்லாமையும் ஏழை ஆப்பிரிக்க விவசாயிகளின் நிலத்தில் 500 பவுண்ட் விளைச்சலையே பெறச்செய்கின்றன. உலகளவிலான உணவுப் பிரச்சனைக்கு சந்தையிலான பல்வேறு சக்திகள், பொருட்களின் எதிர்கால மதிப்பேற்றத்தை யூகித்து அவற்றின் சீரான விநியோகத்தை கட்டுப்படுத்துவது, பதுக்கல் ஆகியவற்றை காரணிகளாக நிபுணர்கள் கருதுகிறார்கள். இத்தகைய பொருளாதார காரணிகளுக்கு அப்பாற்பட்டு வறட்சி, வெள்ளப்பெருக்கு, பயிர்களில் ஏற்படும் நோய்கள் ஆகியவையும் உள்ளன. ஆனால் வளங்குன்றி, பயன்குறைந்த விளைநிலம் தான் மூலமாகும்.

விளைநிலங்களின் மண் வளநிலை இவ்வாறிருக்க, சுரங்கங்களுக்கு அருகிலுள்ள மண் மாசுபடுத்தப்பட்டு பல்வேறு உலோக நச்சுகளை கொண்டுள்ளதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. உலக அளவில் இத்தகைய மனித காரணங்களால் வளம் குன்றிபோகும் நிலப்பரப்பு அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. குறிப்பாக பிறாக்கண்டம் எனப்படும் ஆர்சனிக் நச்சு இத்தகைய நிலங்களில் அதிகமாக இருக்கிறது. 2800 சுரங்கங்களை கொண்டுள்ள சீனாவிற்கு, இத்தைகய மண்ணில் உள்ள நச்சை போக்கி, அதன் வளத்தை மீட்டெடுப்பது மேலதிக நன்மை பயக்கும் விடயமாகும். தற்போது Pteris vittala என்ற சீனச் செடிகளை வளர்த்து சுரங்கங்கள், ஆலைகள் மற்றும் அவற்றின் கழிவு நீர் வெளியேறும் பகுதிகளில் உள்ள மண்ணை சுத்தப்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த மண்வள சீரமைப்பு முறையில், மண் ஆய்வு, சுத்தப்படுத்துவது, வேதியல், உலோக, கரிம மற்றும் கதிரியக்க கழிவுகளிலிருந்து மீட்டெடுப்பது ஆகிய வழிமுறைகள் அடங்கியுள்ளன. சீன அறிவியல் கழகத்தில் சுற்றுச்சூழல் மீட்பு மைய ஆய்வாளர் Chen Tongbin னும் அவரது குழுவினரும் Pteris vittala என்ற சீன செடிகளை கொண்டு மாசுபடுத்தப்பட்ட மண்ணிலிருந்து ஆர்சானிக் போன்ற உலோக நச்சுகளை பிரித்தெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.

1998 ஆம் ஆண்டு மத்திய சீனாவின் Hunan மாநிலத்தில் Pteris vittala என்ற சீன சொடிகளை கொண்டு நிலத்திலான arsenic நச்சை பிரித்தெடுக்க தொடங்கினர். இந்த செடி வகையுடன் பன்னிரெண்டுக்கு மேற்பட்ட மாசுபாடு அகற்றும் செடிவகைள் பயிரிடப்பட்டு ஆய்வு செய்ய்ப்பட்டன. அதில் Pteris vittala என்ற சீன செடி வகை தான் மிக அதிக ஆர்சானிக் நச்சை உறிஞ்சி, மாசுபடுத்தப்பட்ட நிலம் தனது வளமையை திரும்பபெற உதவியது. அதன் இலையில் மிக அதிகமாகவும், இலையின் தண்டுப்பகுதியில் சற்றே குறைவாகவும் வேரில் அதைவிட குறைவாகவும் ஆர்சனிக் நச்சு உறிஞ்சப்படுகிறது. தானிய வயல்களில் நடத்தப்பட்ட ஆய்வை விட கூடார பயிரிடுதலில் அதன் பயன் இரண்டு மடங்காக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கிலோ மண்ணில் 5070 மில்லி கிராம் ஆர்சானிக் நச்சை இச்செடி உறிஞ்சக் கூடும் என்றும் அறியபட்டது. Guangxi தன்னாட்சி பிரதேசம், Hunan, Yunnan, Zhejiang, Guangdong மாநிலங்களில் இந்த வழிமுறையில் செய்யப்பட்ட பணிகள் நல்ல பயனை தந்துள்ளன. சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், ஆலைகள், அவற்றின் கழிவுநீர் வடியும் பாதைகளில் உள்ள மண் இத்தகைய வழிமுறையால் பண்படுத்தப்பட்டு வளப்படுத்தப் படுகின்றன.

இந்த மண்வள சீரமைப்பு முறை சீனாவில் மாசுபாடு அகற்றும் செடிவகைகளை அதிகமாக வளர்த்து, உயிரின சுற்றுச்சூழலில் மிக பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இவ்வாறு ஆர்சனிக் நச்சை அகற்ற உதவிய Pteris vittala செடிகளை எரியூட்டி அழிக்கும்போது ஏற்படும் மாற்றம் மற்றும் அதன் ஆற்றல் பற்றிய அண்மைய ஆய்வு ஏப்ரல் திங்களில் வெளியான சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இதழில் இடம்பெற்றது. பிரித்தெடுக்கப்பட்ட இந்த ஆர்சனிக்கை நச்சை பயன்தரும் வகையில் மாற்றுவது எப்படி? இவர்களின் அடுத்த ஆய்வு இதை பற்றித்தான். எல்லாவற்றிற்கும் இயற்கையை நம்பி நாம் இருப்பதால் மண் வளம் பாதுகாக்கப்படுவது அவசியமாகும். உயிர் வாழ்வுக்கு மண் முக்கியம். அதன் வளம் குன்றிப்போகும் போது வாளாயிராமல், இயற்கையில் கிடைக்கக்கூடிய மாற்றுவளங்களை கொண்டு, புத்தாக்க வழிமுறையில் உலகை உருவாக்குவது நம் கையில் தான் உள்ளது. மண் வளம் பெருக இயற்கை வளம் வளர்ப்போம்.