• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-18 16:59:06    
தலைக்கு மேல் கத்தி

cri
உலக நாடுகளின் வேகமான பொருளாதார வளர்ச்சி காரணமாக நச்சுத்தன்மை கொண்ட கழிவுப்பொருட்களின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. நச்சுதன்மை கொண்ட வேதிப்பொருட்களில் இருந்து, மக்கிபோகாத நெகிழிப் பொருட்கள் வரை, பயன்படாத கணினிகள், அவற்றின் உதிரிபாகங்கள் என பல வகையான மின்னணு சாதனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் மலைமலையாக குவியத் துவங்கியுள்ளன. இந்த கழிவுகளை வெற்றிகரமாக கையாளும் வழிகளை ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் வாங்குகின்ற பொருட்களில் பலவற்றை, பயன்படுத்திய பின்னர் காயிலாங் கடையில் போட்டு சிறுதொகையாவது பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் அவற்றை மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என பிரித்து கையாளும் முறைகள் நிறையவே உள்ளன. தொழில் நுட்பவளர்ச்சில் மேம்பாடு அடைந்துள்ள இன்றும், கழிவுப்பொருட்களை கையாளும் வசதியில்லாமல் பல நாடுகள் அல்லல் படுகின்றன. புவியிலேயே இப்படியிருக்க விண்வெளியில் குவிந்துள்ள குப்பைகளை பற்றி என்ன சொல்வது?

விண்வெளியில் குப்பைகளா? என்று வியப்படைய வேண்டாம். விண்வெளிக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் விண்வெளியில் தான் உள்ளன. இப்படி மனிதரால் தேவையின்றி விண்வெளியில் விடப்பட்ட பொருட்களை தான் விண்வெளி கழிவுகள் அல்லது விண்வெளி குப்பைகள் என்று கூறுகின்றோம். ராக்கெட்டை முன்னோக்கி தள்ளுகின்ற எரிபொருள் கலன்கள், செயலிழந்த செயற்கைக்கோள்கள், செயற்கைக்கோள்களிலிருந்து வெடித்து சிதறிய பகுதிகள், துண்டுகள், துகள்கள், ராக்கெட் இயந்திர பட்டைகள், சிறிய திருகாணி, குறடு மற்றும் பிற சிறிய பொருட்கள் அனைத்தும் விண்வெளிக்கழிவுகளே.

முன்னாள் சோவியத் யூனியன் 1957 ஆம் ஆண்டு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பி விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை தொடங்கியது முதல், எண்ணிக்கையில்லா கழிவுகள் அல்லது குப்பைகள் பரந்த விண்வெளியில் கொட்டப்பட்டுள்ளன என்று தான் குறிப்பிட வேண்டும். இவ்வாண்டு தொடக்கத்தில் கண்களால் காணக்கூடிய அளவில் 17,000 கழிவுகள் விண்வெளியில் உள்ளதாக Houston னிலுள்ள ஜான்சன் விண்வெளி மையத்தின், நாசாவின் விண்வெளிக்கழிவுகள் திட்டத்தின் தலைமை அறிவியியலாளர் நிக்கோலாஸ் ஜான்சன் தெரிவித்தார். அப்படியானால் கண்காணிப்பு கருவிகளால் பார்க்க முடியாத கழிவுகளின் எண்ணிக்கை தெரியவில்லை. கடந்த எப்ரல் திங்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற அமெரிக்க சமூக மாநாட்டில் பங்குபெற்ற அறிவியலாளர்கள் 150 மில்லியன் துண்டுகளுக்கு மேலாகவே விண்வெளியில் கழிவுகள் உள்ளதாக குறிப்பிட்டனர். இவற்றில் பெரும்பாலானவை விண்வெளி வீரர்களால் வீசப்பட்டவை. இதற்கு முந்தைய புள்ளிவிபரங்கள் 45 விழுக்காடு விண்வெளி கழிவுகள் அமெரிக்காவாலும், 48 விழுக்காடு ரஷியாவாலும் குவிக்கப்பட்டவை என்று தெரிவிக்கின்றன. 1.2 விழுக்காடு மட்டுமே சீனாவால் உருவாக்கப்பட்டது.

அண்டவெளி, வானியல், வானிலை, அறிவியல் ஆராய்ச்சிகள் என மட்டுமே செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட காலம் மலையேறிபோய்விட்டது. இன்றைய நவீன தொழில்நுட்ப புரட்சியாய் உருவாகியுள்ள தகவல் தொடர்பு வசதிகளை வர்த்தகமாக மாற்றும் வகையில் பல செயற்கைக்கோள்களை எல்லா நாடுகளும் போட்டிப்போட்டு கொண்டு அனுப்பிவருகின்றன. சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த செயற்கைக்கோள்கள் செயலிழந்து கழிவுகளாகிவிடுகின்றன. இவை சுற்றுவட்டப்பாதையில் இயங்கி ஆய்வுசெய்துவரும் செயற்கைக்கோள்களோடு மோதினால், அதன் செயல்பாட்டைப் பாதிப்பது மட்டுமல்ல அதிக விண்வெளிக்கழிவுகளையும் உருவாக்கும். கடந்த வாரத்தில் ஏற்பட்ட இரு செயற்கைக்கோள் மோதிக்கொண்ட விபத்தை இங்கே குறிப்பிடலாம். அமெரிக்க Iridium 33 வர்த்தக செயற்கைக்கோளும், ரசியாவின் செயலிழந்த செயற்கைக்கோளும் ஒன்றொடொன்று மோதி சிதறியது என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பெப்ரவரி 11 ஆம் நாள் தெரிவித்தது. இந்த செயற்கைக்கோள் மோதல் சம்பவம் சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக, மிதந்து கொண்டிருக்கும் விண்வெளிக் கழிவுகளின் சராசரி வேகம், நொடிக்கு 10 கிலோமீட்டராகும். அதிகபட்ச வேகம் நொடிக்கு 16 கிலோமீட்டர். சீருந்திலோ, பேருந்திலோ செல்லுகின்றபோது 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதாக சொன்னால் ஒரு மணிநேரத்திற்கு 80 கிலோமீட்டர் என்று பொருள். இந்த வேகத்தில் சென்றாலே பறந்து போகிறார் பாருங்கள் என்று கூறுவதுண்டு. அப்படியானால் ஒரு மணிநேரத்திற்கு சராசரியாக 57,600 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிவரும் விண்வெளி கழிவுகள், ஒன்றோடு ஒன்று மோதினாலோ அல்லது ஆராய்ச்சிகளை மேற்கோண்டிருக்கும் செயற்கைக்கோளோடு மோதினாலோ ஏற்படும் விளைவை சொல்லி தெரிய வேண்டியதில்லை. 10 கிராம் எடையுள்ள சிறிய கழிவுப்பொருள் மோதினாலே, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய சீருந்து மோதினால் ஏற்படுகின்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று சீன விண்வெளி கழிவுகள் திட்டத்தின் தலைமை அறிவியலாளர் Du Heng கூறியுள்ளார்.

எனவே விண்வெளி ஆய்வில் ஈடுப்பட்டுள்ள பல்வேறு நாடுகள் விண்வெளியில் பெருகி வரும் கழிவுகளை பற்றி அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. விண்வெளிக்கழிவுகளை குறைக்கும் சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அறிவியலாளர்கள் மாநாடு அறிவுறுத்தியது. செயலிழக்கின்ற பல்வேறு செயற்கைக்கோள்களால் தான் அதிகளவில் விண்வெளிக்கழிவுகள் ஏற்படுகின்றன. எனவே அவை செயலிழக்கும் முன்பே மிகவும் அதிக உயரத்திற்கு அனுப்பிவிடுவது மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் முன்னேறிய மாற்றங்களை புகுத்துவது ஆகியவை விண்வெளிக் கழிவுகளை குறைக்கும் வழிமுறைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு அதிக செலவு ஆகும். புதிய தொழில்நுட்ப மாற்றங்களை செயல்படுத்தவும் பல ஆண்டுகள் தேவைப்படும். சர்வதேச அளவில் ஒரு கட்டுப்பாடோ அல்லது விதிகளோ பெரிய அளவில் இல்லாததால் கழிவுகளை குறைக்கும் முயற்சிகளுக்கு நாடுகள் அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை. இழப்பீடு கோரும் வரையறைகளும் இதுவரை இல்லை. இவ்வாறே நீடித்தால் பல கோடி செலவிட்டு செயற்கைக்கோள்களை அனுப்பும் வளரும் நாடுகளுக்கு இத்தகைய செயற்கைக்கோள் மோதல் பெரும் இழப்பாக போய்விடும்.

பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் எச்சரித்த செயற்கைக்கோள்கள் மோதிக்கொள்ளும் சாத்தியக்கூறு முதல் முறையாக நிகழ்ந்துள்ளது. இனிமேல் விண்வெளி விதிமுறைகளின் உருவாக்கத்தை பற்றி சர்வதேச நாடுகள் சிந்திக்க தொடங்கும் என்பதில் ஐயமில்லை. தலைக்கு மேல் கத்தி தொங்கும் இக்கட்டில் இருக்கிறேன் என்றால் இனிமேல் விண்வெளி கழிவுகளை எண்ணிக்கொள்ளலாம்.