• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆறாம் நாள்
  2011-08-16 09:08:20  cri எழுத்தின் அளவு:  A A A   

தொடக்கமாக

தாசியா பள்ளதாக்கு, சீன மூலிகை மருந்து தயாரிப்பு நிலையம் ஆகியவற்றை பார்த்விட்ட எங்களுக்கு, இன்று, அதாவது திபெத் பணிப்பயணத்தின் ஆறாம் நாள் எந்த புதிய அனுபவங்களை பெற போகிறோமோ! என்ற ஆவல் தான் மேலெழுந்திருந்தது. காலை எட்டு மணியளவில் தங்குவிடுதியை விட்டு புறப்பட்டோம்.

மலைவாழ் மக்களின் கிராமத்தில்

ஏறக்குறைய பத்தரை மணியளவில், லின்சு வட்டத்திலுள்ள நாயிகோவ் கிராமத்தை அடைந்தோம். திபெத் மக்களின் பரம்பரிய முறைப்படி, கத்தா என்ற பட்டுத்துணியால் செய்யப்பட்ட வெள்ளை துண்டை மாலையாக அணிவித்து அலுவலர்கள் வரவேற்றனர். அந்த கிராமத்தை பற்றிய பின்னணி மற்றும் சுற்றுச்சூழல்கள் பற்றி அலுவலர்கள் எங்களுக்கு விவரித்தனர்.

லோபா இனம்

நாயிகோவ் கிராமத்தில் லோபா இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மலைகளில் கடினமான வாழ்க்கை வாழ்ந்து வந்த இம்மக்கள், சீன அரசின் உதவியால், கிராமங்களுக்கு குடிபெயர்ந்து, தற்போது மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். மலையிலிருந்து இந்த கிராமத்திற்கு குடிபெயர்ந்தபோது அவர்கள் 36 குடும்பங்களாக, மொத்தம் 76 பேரே இருந்தனர். தற்போது, 166 பேராக அதிகரித்துள்ளனர். எட்டு பேர் பல்கலைகழக படிப்பை தொடர்கின்றனர். 18 பேர் மேனிலை கல்வி கற்கின்றனர். குழந்தைகள் எல்லோரும் தற்போது பள்ளிக்கல்வி பெற்று வருகின்றனர்

லோபா இன பாரம்பரியம்

லோபா இன மக்கள் பல்வண்ண ஆடைகளை அணிந்திருந்தனர். பல முத்து மாலைகளை அணிந்திருந்தனர். கைகளில் பலவித அணிகளையும் அணிந்திருந்தனர். அவர்களது பாரம்பரிய ஆடை பல்வண்ண நூல்களால் அழகாக பின்னப்பட்டிருந்தது. அவர்களது இன அடையாளத்தை காட்டும் வகையில் ஆடைகள் இருந்தன. அவர்களது தலைவர், கடும் நீல வண்ணத்தில் மேலாடை அணிந்திருந்ததோடு, பின் தலையிலிருந்து முதுகு வரை தொங்கிக் கொண்டிருக்கும் ஓநாய் தோலால் செய்யப்பட்ட தொப்பியை அணிந்திருந்தார்.

பாரம்பரிய ஆடை பின்னல்

லோபா இன மக்கள் கிராமத்தில் குடிபெயர்ந்த பின்னரும் தங்களது பாரம்பரிய ஆடை பின்னலை நுட்பங்களை மறந்துவிடவில்லை. அதை பாதுகாக்கும் பொருட்டு அரசு பாரம்பரிய ஆடை பின்னல் நிலையத்தை நிறுவியுள்ளது. கால் பட்டை, கை பட்டைகள் ஆகியவை அனைத்தையும் இம்மக்கள் இங்கு பின்னி பயன்படுத்தி வருகின்றனர். பல் வண்ண நூல்களை அங்குமிங்குமாக செலுத்தி இனிய வண்ணத்தில ஆடை பின்னும் நுட்பத்தை நீண்டநேரம் பார்த்து இரசித்தோம்.

இனிய இல்லங்கள்

லோபா இன மக்களின் தெருக்களில் சுற்றி வந்தோம். அங்கிருந்த ஏறக்குறைய எல்லா வீடுகளும், மரத்தால் செய்யப்பட்டிருந்தன. கிராமத்தை சுற்றிலும் காரை மற்றும் சல்லி கலவையால் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. எல்லா வீடுகளிலும், தொலைக்காட்சி, வீட்டுவசதிப் பொருட்கள், குளிர்காலத்தில் வெப்ப வசதி போன்ற வசதிகள் காணப்பட்டன. சீருந்துகள், துள்ளுந்துகள், டிராக்டர் எனப்படும் இழுவை இயந்திரம் போன்றவை சில வீடுகளுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்தன. அவர்களின் வீடுகளில் வரவேற்பறை, படுக்கையறை, பணியறை, தானிய அறை, சமையலறை, கழிவறை வசதிகள் காணப்படுகின்றன. சில வீடுகளின் முன்னால் பூந்தோட்டமும் காணப்பட்டது.

நெஞ்சில் நின்ற கிராமத்து இராகம்

லோப இன மக்களில் யாசியா என்ற முதிய பெண்ணொருவரை சந்தித்தோம். எங்களோடு மிகவும் எளிதாக பழகிய அவர், பாடல்கள் பாடுவதில் சிறந்தவர் என்று அறிந்தவுடன் அவரை பாடக் கேட்டுக்கொண்டோம். இதமான, இனிய, எளிதாக கவரக் கூடிய ஜியாஜிங்தியாவ் இராகத்தில், கிரமப்பாடல் ஒன்றை அவர் பாடி, எங்களை மகிழ்வூட்டினார். பாடலின் சில வரிகளை அவர் பாடியவுடனே, அப்பாடலின் இரகத்தை வரிகளின்றி இசையாக எங்கள் நா அசைபோட தொடங்கியது. அந்த அளவுக்கு அவர் பாடிய கிரமத்து இசை எளிமையாக, எளிதாக மனதில் பதிந்து விடுவதாய் இருந்தது. சீன அரசின் கொள்கைகளால் லோபா இன மக்கள் பெற்ற நன்மைகளை விவரிப்பதாய் அந்த பாடல் இருந்தது.

பரப்புரை அமைச்சரோடு சந்திப்பு

அன்றைய மதியவுணவை, அப்பகுதி பரப்புரை அமைச்சர் சாங்ரன் அம்மையாருடன் உண்டு மகிழ்ந்தோம். அவரது பெற்றோர் திபெத்தில் சேவைபுரிய மனமுவந்து குடியேறினர். திபெத்தில் தான் சாங்ரன் அம்மையார் பிறந்து வளர்ந்துள்ளார். எங்களோடு இனிமையாக பேசி, நாங்கள் விரும்பிய உணவு வகைகளை மீண்டும் மீண்டும் வரவழைத்து விருந்தளித்த அவரது பெருந்தன்மையை மறக்க முடியாது.

பிரியாவிடை விருந்து

நாங்கள் பரப்புரை அமைச்சர் சாங்ரன் அம்மையாருடன் மதியவுணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, பட்டாசு ஒலி காதை துளைத்தது. நம்மூரில் அமைச்சர் வந்துவிட்டால் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிக்காட்டுவதுபோல இவ்வூரிலும் வழக்கம் இருக்கிறதோ என்று எண்ணிபோது, இல்லை இல்லை. கீழே திருமண விழா போலும். அதற்காக தான் இந்த பட்டாசு ஒலி என்று விளக்கம் கூறினர்.

ஆனால், சாப்பிட்டு முடித்துவிட்டு கீழே வந்தபோது தான் அது திருமண விருந்தும் அல்ல என்று புரிந்தது. பன்னிரெண்டு வயதான சிறுமி மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய தொப்பி மற்றும் ஆடைகளுடன் சிறப்பு மேசையில் உறவினரோடு உணவருந்தி கொண்டிருந்தார். சிறுமி என்றவுடன் பூப்புனித நீராட்டு விழா என்றும் நினைத்துவிடாதீர்கள். இந்த சிறுமி ஆன்குவேய் மாநிலம் சென்று மேனிலை கல்வி பெறும் வாய்ப்பு பெற்றிருக்கிறாள். அதனை கொண்டாடுவதற்காக அளிக்கப்படும் விருந்து தான் அது. பட்டாசு கொளுத்தி, அறுசுவை விருந்தளித்து திருமண விழா போல் கொண்டாடும் அளவுக்கு, மேனிலை கல்வி பெறுவது உயர்வாக அனைவராலும் கருதப்படுகிறது. எனவே அவர்களது இனத்தவர் ஒருவர் மேனிலை கல்விக்காக வெளியூர் செல்கின்றபோது பிரியாவிடை விருந்து அளித்து அனுப்பி வைப்பது திபெத் மக்களிடம் வழக்கமாக தொடர்கிறது.

கோம்போ திபெத் இனம்

மதிய உணவுக்கு பின்னர், மதியம் ஒன்றரை மணியளவில், கோம்போ திபெத் இன மக்கள் வாழும் கிராமத்தை பார்வையிட்டோம். பரப்புரை அமைச்சர் சாங்ரன் அம்மையாரும் எங்களுடன் வந்து அந்த கிராமத்தை முழுவதும் சுற்றிக் காட்டினார். கோம்போ திபெத்தின மக்கள் வாழும் அந்த கிராமம் பாங்சுங் கிராமம் என்றழைக்கப்படுகிறது. கிராமத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும், தனித்தனி சுற்றுச்சுவர்கள் இருந்தன. இங்குள்ள வீடுகள் அனைத்தும் இரண்டு மாடி வீடுகளாகவே இருந்தன. திபெத்திய பாணியில் அலங்கரிக்கப்பட்ட வாயில்கள், சன்னல்கள், மாடி அமைப்புமுறை அனைத்தும் அமைந்திருந்தன. அங்குள்ள வீடுகள் அனைத்தும் சற்று பெரிய வீடுகளாக இருந்தன.

நட்சத்திர தங்குவீடுகள்

பாங்சுங் கிராமத்திலுள்ள வீடுகள் அனைத்தும் கிராம சுற்றுலா வளர்ச்சி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, சுற்றுலா பயணிகள் இந்த வீடுகளில் வந்து தங்கி சுற்றுலா நாட்களை இன்பமாக கழிக்கலாம். நட்சத்திர தகுநிலை பெற்ற தங்குவீடுகளையும் இங்கு காணமுடிந்தது. மேலும், மரங்களை பலகைகளாக அறுக்க மின் வாள், ஒவ்வொரு வீட்டிற்கு முன்னால் மிக பெரிய முற்றம், உணவு விடுதி, பொழுதுபோக்கு இடங்கள், உடற்பயிற்சி இடம் போன்ற வசதிகளும் அக்கிராமத்தில் காணப்படுகின்றன.

பழமை மாறா பாங்சுங் கிராமம்

இந்த கிராமத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தபோது, சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையுடைய மரத்தை எங்களுக்கு காட்டினர். பழங்காலத்திலிருந்தே இருந்து வரும் பல்வேறு தலைமுறை கோம்போ திபெத்தின மக்களின் அடையாளமாக அந்த மரம் வரலாற்று முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. மேலும், முன்னர் இம் மக்கள் வாழ்ந்து வந்த வீடுகளும் பழம்பெரும் வாழ்க்கையின் சின்னங்களாக விடப்பட்டுள்ளன. முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள அந்த பழைய வீடுகள் மண் கலவையால் கட்டப்பட்டவை. அவற்றின் உள்ளே சென்று திரும்பியபோது, மூச்சி திணறி வெளியே வந்த உணர்வு எழுந்தது. அத்தகைய நிலையிலிருந்து, இன்று சிறந்த விசாலமான வீடுகளில் வாழும் அளவுக்கு கோம்போ திபெத்தின மக்கள் வளர்ந்துள்ளனர்.

நட்சத்திர தங்குவீட்டில்

அங்குள்ள நட்சத்திர தங்குவீட்டில் அரைமணிநேரம் அமர்ந்து அங்குள்ள வசதிகளை பார்வையிட்டோம். மிக பெரிய அரங்கு போன்ற அறையில் சுவரையொட்டி உல்லாசமாக அமர்ந்து கொள்ளவதற்கு ஏற்ற மெத்தைகளுடன் கூடிய இருக்கைகளுடன் அறைகள் உள்ளன. அறையில் தொலைக்காட்சி வசதி உள்பட அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. சமையலறையில் திபெத்திய பாணி நிறைந்திருந்தது. வீட்டிலுள்ள அனைவரும் ஒரே நேரத்தில் சுற்றி அமர்ந்து உணவு உண்ணும் வகையில் சமையலறை காணப்பட்டது. அதிலுள்ள அடுப்பு சற்றே வேறுப்பட்டிருந்தது. கீழ் பகுதியில் விறகு எரிப்பதற்கு திறப்பு காணப்பட்டது. விறகு எரிவதற்கு மேலே இரண்டு அடுக்காக இரும்பு பாளங்கள் இட்டு கட்டப்பட்ட அமைப்பு உள்ளது. விறக அல்லது எரிவாயு மூலம் வெப்பமேறும் இந்த இரும்பு பாளங்களில் சமையல் பாத்திரங்களை வைத்து சமைக்கலாம். அடுப்பின் ஒருபுறம் வழியாக புகை வெளியேறுவதற்கு புகைப்போக்கி குழாயும் பொருத்தப்பட்டிருக்கிறது. சமையலறையின் ஒரு பக்க சுவரின் ஓரத்தில் அலமாறி வைக்கப்பட்டு, அனைத்து பாத்திரங்கள், குவளைகள் அதில் அடுக்கப்பட்டுள்ளன.

லாமாலிங் பௌத்த மடம்

பிற்பகல் நான்கு மணியளவில் திபெத்தின் கிழக்கு பகுதியிலுளள் பாயி மாவட்டத்தின் மிக முக்கிய பௌத்த மத தலத்திற்கு அழைத்து சென்றனர். நிங்மா பௌத்த மத பிரிவினருக்கு சொந்தமான இந்த கோயில் மற்றும் மடத்தின் வரலாற்று பின்னணியை புரிந்து கொள்ளவும், பௌத்த மத பிரிவுகளை அறியவும் இந்த சந்திப்பு அடிப்படையிட்டது. திபெத்திய பௌத்த மதம் ஏழாம் நுற்றாண்டில் முதல் முதலாக தோன்றியது. திபெத் அரசரை திருமணம் செய்த வென்செங் இளவரசி, திபெத்திற்கு சென்றபோது, பன்னிரெண்டு வயது சாக்கியமுனி கௌதம புத்தரின் சிலையை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் திபெத் பௌத்த மதம் நான்காக பிரிந்தது. ஒன்று கிடேன், இரண்டு காக்யு, மூன்று சாக்யா, நான்கு நிங்மா. லாமாலிங் பௌத்த மடம் நிங்மா பிரிவினருக்கு சொந்தமானது. இந்த பிரிவின் தலைவர் பத்மசாம்பவா ஆவார். பிற பிரிவுகளில் லாமாக்கள், பௌத்த துறவிகள் தனித்தனி மடங்களில் வேவ்வேறு இடங்களில் வாழ்வர். ஆனால், லாமாலிங் பௌத்த மடத்தில் லாமாக்களும், பௌத்த துறவிகளும் இணைந்து வாழ்கின்றனர்.

இரண்டு பௌத்த அரங்குகள் உள்ள இந்த பௌத்த மடத்தில், மூன்று மாடி கட்டமைப்பு உள்ளது. அவற்றில் வெண்கலம் மற்றும் தங்கத்தால் செய்யப்படட்ட தலைவர் பத்மசாம்பவா சிலைகள் உள்ளன. மூன்றாவது மாடியில் சாக்கியமுனி கௌதம புத்தரின் சிலை காணப்படுகிறது. நிங்மா பௌத்த மத பிரிவு உள்ளூர் போன் மதத்திடமிருந்து பல பாரம்பரியங்களை உள்வாங்கி கொண்டது. இயற்கைக்கு மதிப்பளிக்கும் போன் மதம் இவ்வுலகிலுள்ள எல்லாம் ஓர் ஆற்றலை கொண்டுள்ளது என்பதை ஏற்கின்றது. பிறப்புறுப்பு வழிபாடும், பிறப்புறுப்புகளுக்கு காணிக்கை செலுத்துவதும் இந்த பிரிவினரிடத்தில் உள்ளது.

முடிவாக

லோபா இன மக்கள், கோம்போ திபெத்தின மக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லாமாலிங் பௌத்த மடம் ஆகியவற்றை பார்த்து விட்டு பாயி நகரத்தில் தங்கியிருந்த தங்குவிடுதிக்கு விரைந்தோம். அடுத்த நாள், லாசா நோக்கிய பயணம் எங்கள் மனங்களில் நிழலிட்டது. மீண்டும் இயற்கைக் காட்சிகளின் நடுவில் நீண்ட பயணம் மேற்கொள்ள போவது மகிழ்ச்சியளித்தது.

பாயி நகரத்திலிருந்து,

தமிழன்பன்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040