• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பள்ளியை அருங்காட்சியகமாக்கிய முன்னாள் ஆசிரியர்
  2015-10-02 18:53:50  cri எழுத்தின் அளவு:  A A A   

பள்ளிக் கூடம் என்றாலே ஜன்னல், கரும்பலகை, மேசை, நாற்காலிகள் என இருப்பதுதான் நமது நினைவுக்கு வரும். இந்த சூழல் இளம் சிறார்கள் சிலருக்கு பள்ளியின் மீதான பயத்தைக் கூட ஏற்படுத்தும்.

பள்ளி என்றால் ஏன் இப்படி இருக்க வேண்டும். அதை மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றினால் தான் என்ன என்று நினைத்த முன்னாள் ஆசிரியர், தனது எண்ணத்தை செயலாக்கி விட்டார்.

ரஷியாவைச் சேர்ந்தவர் வேலரி கார்மோவ், பள்ளியில் 25 ஆண்டுகளாக கலை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணியிலிருந்துதான் ஓய்வு பெற்றாரே தவிர, கலையிலிருந்து அல்ல.

ஓய்வு பெற்ற பின்னும், பள்ளியில் காப்பாளராக இணைந்து பள்ளியுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். பள்ளியில் தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறைக் காலத்தை தனது எண்ணத்துக்கு செயலாக்கம் தர வேலரி முடிவு செய்தார்.

சுமார் 2 திங்கள் காலமாக இரவு பகலாக உழைத்து பள்ளியில் உள்ள அனைத்து கட்ட்டங்களிலும் தனது கலையின் திறமையைப் பயன்படுத்தி விதவிதமான ஓவியங்களை வரைந்தார்.

இதில், மிகவும் பாராட்டப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், சுவர்களை வெறும் ஓவியங்களாக மட்டும் அவர் நிரப்பவில்லை. ஒவ்வொரு வகுப்பறைக் கட்டிடத்திலும் மாணவர்களுக்கு பயனுள்ள ஓவியங்களை வரைந்துள்ளார்.

ஒரு கட்டிடத்தில் 4 காலங்களின் நிலைகளை உணர்த்தும் ஓவியங்களும், மற்றொரு கட்டிடத்தில் இயற்கையின் முக்கியத்துவம், பிற உயிரினங்களின் வாழ்வியல் சூழல், கடலின் அழகு மற்றும் அதன் முக்கியத்துவம் என பலவகையிலான பயனுள்ள ஓவியங்களைத் தீட்டி பள்ளியையே ஓர் அருங்காட்சியகம் போல அவர் மாற்றி விட்டார்.

சிறார்கள் படிக்கும் வகுப்புகளில், நீதிக் கதைகளை விளக்கும் படங்களை அவர் வரைந்துள்ளார்.

இந்த யோசனை எப்படி உதித்தது என்று அவர் கூறுகையில், மாணவர்கள் பள்ளியை விட்டு செல்லாமலேயே, உலகை வலம் வர வேண்டும் என்று கருதியதால் தான் இவ்வாறு ஓவியங்களைத் தீட்டினேன் என்று தெரிவித்தார்.

தனது சிறு வயது முதலே ஓவியங்களைத் தீட்டுவதில ஆர்வம் கொண்ட வேலரி, 16 ஆவது வயதில் சோவியத்-பின்லாந்து போர் தொடர்பான ஓவியங்களை வீட்டில் வரைந்து தனது ஓவியத் திறமையை உலகுக்கு வெளிப்படுத்தினார்.

ஆனால், அப்துல் கலாமைப்போலவே, பள்ளிப் படிப்பை முடித்தபின்னர் விமான ஓட்டுநராக வேண்டும் என்று வேலரியும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், வாழ்க்கை போடும் கணக்கு வேறுதானே.

அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு பின்னர், விதி அவரை ஓவியப் பாதையிலேயே இழுத்து வந்துள்ளது.

நல்ல செயல்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் வேலரி, தற்போது எந்தப் பள்ளி தன்னை அழைத்தாலும் அங்கு சென்று ஓவியம் தீட்ட தயாராக உள்ளேன் என்று வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார். அநேகமாக ரஷியாவில் உள்ள பள்ளிகளில் வேலரின் ஓவியம் மிளிர்நாதலும் ஆச்சரியமில்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040