• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கொண்டாட்டங்கள் நிறைந்த கேளிக்கை பூங்கா
  2017-01-29 19:37:01  cri எழுத்தின் அளவு:  A A A   

சந்திர நாட்காட்டியின் அடைப்படையில் பிறக்கும் சீனப் புத்தாண்டு வந்து விட்டாலே சீனாவில் கொண்டாட்ட நிலை பிறந்து விடும். புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகத் தொடங்கி புத்தாண்டுக்குப் பிறகான ஒரு வாரம் வரை சீனா முழுவதிலும் இத்தகைய கொண்டாட்டங்களைக் காண முடியும். அதிலும் பெய்ஜிங் போன்ற பெருநகரங்களில் காணப்படும் கொண்டாட்டங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அது ஒரு வகையான கொண்டாட்ட மன நிலையின் உச்சம். மகிழ்ச்சிக்காக மக்கள் ஒன்றிணையும் திருவிழா. புத்தாண்டின் போது சீனாவின் பல பகுதிகளில் இருந்து கல்வி, பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பெய்ஜிங்கில் வசிக்கும் பலரும் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பி விடுவதால் நகரங்கள் தனக்கே உரிய பரபரப்பை இழந்து விடும். ஆனால் நகரத்தின் பரபரப்பையும் கொண்டாட்டத்தையும் நகரங்களில் உள்ள பூங்காக்களில் காணலாம். புத்தாண்டின் முதல் நாள் தொடங்கி நடக்கும் இத்தகைய ஒன்றுகூடல் விழாவானது, சீன மொழியில் மியாவ் குய் என்று அழைக்கப்படுகின்றது. மியாவ் என்பதற்கு கோயில் என்றும் ஹுய் என்பதற்குக் கூடுதல் என்றும் பொருள். இப்பொழுது கோயில்கள் மட்டுமல்லாமல் பூங்காக்களிலும் இத்தகைய ஒன்றுகூடல் நிகழ்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் பெய்ஜிங்கில் இப்பொழுது குளிர் கொஞ்சம் கடுமை தான். ஆனாலும், உறைநிலைக்குக் கீழே குளிர் இருந்தாலும் பா ஜியாவ் கேளிக்கை பூங்காவில் மக்களின் கூட்டத்திற்குக் குறைவில்லை. வசந்த விழாவிற்காகவே பா ஜியாவ் பூங்கா சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பூங்காவின் முகப்பு பல்வகை ரோஜாக்களாலும் பூங்காவிற்குச் செல்லும் வழியெங்கும் சிவப்பு நிறத் தாள்களில் கத்தரிக்கப்பட்ட பல்வகைப் பூக்களாலும் அழகுபடுத்தப்பட்டிருந்தன. குழந்தைகளின் பெரு விருப்பத்திற்கு உரிய இந்த பூங்கா முன்னெப்போதையும் விட அதிகமாக பெரியோர்களாலும் குழந்தைகளாலும் நிறைந்து காணப்பட்டது. . எங்கு திரும்பினும் மனிதத் தலைகள். பெரு வனத்தில் கீச்சொலிகளை எழுப்பும் பறவைகளைப் போல சீனர்களின் பேச்சு அந்தப் பூங்கா எங்கும் கேட்டுக் கொண்டே இருந்தது.

சீனப்புத்தாண்டின் மற்றொரு சிறப்பு பல்வகை உணவுகள். புத்தாண்டின் தொடக்கத்தைப் பல்வேறு வகையான சிறப்பு மிக்க உணவுகளோடு கொண்டாடுவது சீனர்களின் வழக்கம். அத்தகைய சிறப்பு மிக்க உணவுக் கடைகள் பா ஜியாவ் பூங்காவின் முகப்பு தொடங்கி கடைசி வரை எங்கும் காணப்பட்டன. ஆட்டுக்கறி உணவுகள், பல்வகை இறைச்சி சார்ந்த உணவுகள், வித விதமான நூடுல்ஸ், சீனத் தனிச்சிறப்புமிக்க உணவுகள் எனப் பல்வகை உணவுகள் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளுக்கென அமைக்கப்பட்டிருந்த சிறப்பான விளையாட்டுக் கூடங்கள் எங்கும் குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டுக் கொண்டே இருந்தது. பொதுவாக குளிர்காலங்களில் நான் குடும்பத்தினரோடு அதிகம் வெளியே செல்ல விரும்புவதில்லை. குளிரினால் குழந்தைக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்கின்ற அச்ச உணர்வே அதற்குரிய மிக முக்கியமான காரணம். ஆனால், இது போன்ற கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எப்பொழுதும் கிடைப்பதில்லை என்பதனால் இந்த முறை குடும்பத்தினரோடு சென்று மகிழ்ந்தேன். ஒரு கூண்டுப் பறவை போல வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்த என் சிறு மகளுக்கு இந்த விடுதலை அலாதியான மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு சிறு குழந்தைக்கே உரிய ஆவலுடன் பார்க்கும் எதையும் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அவளிடம் இருந்தது. கடுமையான குளிரிலும் அவள் கேளிக்கை பூங்கா முழுக்க ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தாள். முன்பை விட இப்போது அவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள். அவளின் மகிழ்ச்சி எங்களுக்கு வசந்தத்தைக் கொண்டு வந்து சேர்த்தது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040