• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-07 22:40:11    
எய்ட்ஸூக்கு எதிரான முதிய கண்டுபிடிப்பு

cri
எய்ட்ஸ் என்னொரு அரக்கன் இன்றைய இளைய சமூதாயத்தை வேகமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றான். தெரிந்தோ தெரியாமலோ செய்துவிட்ட தவறுக்கு மனிதன் தானே இரையாகிக் கொண்டிருக்கின்றான். எய்ட்ஸ் நோயைப் பரப்பும் எச்ஐவி கிருமி மனித உடம்பின் செல்லுக்குள் நுழைந்து நோய் எதிர்ப்புத் திறனை வெகுவேகமாக அழித்து வருவதாக அறிவியல் அறிஞர்கள் கவலைப்படுகின்றனர். இந்த எச்ஐவி கிருமி மனித உடம்புக்குள் எவ்வாறு நுழைகின்றது? மனித உடம்பின் செல்லில் ஒரு இடைவெளி உண்டு. இந்த இடைவெளியை எச்ஐவி கிருமி ஆக்கிரமித்துக் கொண்டு நுழைந்த வேகத்திலே ஒன்று பலவாக பலநூறாக பல்கிப்பெருகி அந்த செல்லை அழிக்கிறது. பிறகு இன்னொரு செல்லுக்குச் தாவுகின்றது. இவ்வாறாக பல செல்கள் அழிக்கப்பட்டு உடம்பின் நோய் எதிர்ப்புத் திறன் குறையும் போது தயாராகக் காத்திருக்கும் ஏராளமான தொற்று நோய்களில் ஒன்று உடனே வந்து ஒட்டிக் கொள்கின்றது. இப்போது சீன அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டு ஆராய்ச்சி மூலம் மனித உடம்புக்குள் எச்ஐவி கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்தும் ஒரு வழியைக் கண்டு பிடித்துள்ளனர். அதாவது மனித உடம்பின் செல்லில் உள்ள இடை வெளியில் எச்ஐவி கிருமி நுழைவதற்கு முன் அதை நிரப்பக் கூடிய ஒரு அணுத்திரள் கூட்டுப் பொருளை உருவாக்கியுள்ளனர். இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு என்று சீனாவின் அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சியில் அன்ஹுய் மாநிலத் தலைநகர் ஹெபெஃயில் உள்ள பல்கலைக்கழக நிபுணர்களும் அமெரிக்க ஆராய்ச்சி அறிஞர்களும் கூட்டாக ஈடுபட்டனர். இதைப் பற்றிச் செய்தி வெளியிட்ட அமெரிக்க வேதியியல் சங்கத்தின் பத்திரிகை எச்ஐவி கிருமிகளை ஒழிக்கும் திசையில் இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்று வர்ணித்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு பற்றி அடுத்த மூன்று முதல் ஐந்தாண்டுகளில் மேலும் ஆராய்ச்சி நடைபெறும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியின் விளைவாக எச்ஐவி கிருமியை ஒழிக்கும் ஒரு மருந்து தயாரிக்கப்பட்டு மருத்துவமனைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படலாம். ஆனால் இது அவ்வளவு எளிதில் நடைபெற்றுவிடாது. நீண்டகாலம் ஆகும் என்று சீனத் தேசிய எய்ட்ஸ் பால் வினை நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் சன் சியெ கூறுகிறார். புதிய வழிமுறை பற்றி திரும்பத் திரும்ப பல பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். உதாரணமாக மனித உடம்பின் செல்லில் உள்ள இடைவெளிக்குள் செலுத்தப்படும் அணுத்திரள் கூட்டுப் பொருள் எச்ஐவி கிருமி நுழையாத படிக்கு நீண்டகாலத்திற்கு அங்கேயே இருக்கும் என்பதை அறிவியல் அறிஞர்கள் நிரூபிக்க வேண்டும் என்று அவர் கூறினார். உலகில் தினமும் 16000 புதிய எச்ஐவி கேஸ்கள் வருகின்றன. ஒவ்வொரு நிமிடமும் 5 பேர் எச்ஐவி கிருமிக்கு இரையாகி மடிகின்றனர். இப்படிப்பட்ட துயரகரமான நிலையில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்கு புதிய மருந்துகள் பற்றிய கண்டுபிடிப்புக்கள் வெளிவருவது ஊக்கம் தருவதாக உள்ளது.