|
|
(GMT+08:00)
2004-04-26 10:34:05
|
|
தொழிலில் ஈடுபட்டுள்ள நாடு திரும்பிய சீன மாணவர்கள்
cri
கடந்த 20 ஆண்டுகளில், சுமார் 6 லட்சம் சீன மாணவர்கள், வளர்ந்த நாடுகளுக்குச் சென்று, கல்வி பயின்றுள்ளனர். அவர்கள் நாடு திரும்பி, தொழில் நடத்தத் துவங்கியுள்ளனர். நாடு திரும்பி தொழில் நடத்தும் இந்தப் பேரெழுச்சியில், அவர்கள் பெரிதும் விரும்பும் இடங்களில் சூசோ நகரும் ஒன்றாகும். இது ஜியாங்சு மாநிலத்தில் அமைந்துள்ளது.
இந்நகர், சிலிகான் பள்ளத்தாக்கு போல் இருக்கிறது என்று ஆன் போ தகவல் குழுமக் கூட்டு நிறுவனத்தின் ஆளுனர் ஊ ஹோங் அம்மையார் கூறினார். 1980ஆம் ஆண்டில் அவர் அமெரிக்கா சென்று, பெர்க்ளி பல்கலைக்கழகத்தின் மென் பொருள் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். அதன் பின், சிலிகான் பள்ளத்தாக்கில் 10 ஆண்டு பணி புரிந்தார். 4 ஆண்டுகளுக்கு முன், சூசோ நகருக்கு வந்து, மென்பொருள் கூட்டு நிறுவனத்தை நடத்தலானார்.
சூசோ நகரின் சூழ்நிலை சீராக இருப்பதாக உணர்ந்தேன். உள்ளூர் அரசின் ஆதரவினால் இந்நகரைத் தேர்ந்தெடுத்து, தொழில் துவங்கினேன். தவிர, சூசோ நகர் ஷாங்காய் மாநகருக்கு அருகில் அமைந்துள்ளது. உழைப்பு ஆற்றலுக்கான செலவு குறைவு என்றார் அவர்.
சூசோ நகரில், ஆன் போ குழுமம் போன்று, 260 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவ்வெண்ணிக்கை, ஆண்டுக்கு 20 விழுக்காடு என்ற வேகத்தில் அதிகரித்துள்ளது. தகவல் தொழில் நுட்பம், சூழல் பாதுகாப்புத் தொழில் நுட்பம், உயிரின மருந்தாக்கம் ஆகிய உயரிய தொழில் நுட்பத் துறையில் இவை முக்கியமாக ஈடுபடுகின்றன.
சூசோ நகரில் இத்தகைய தொழில் நிறுவனங்கள் ஒன்று திரள்வதற்கு உள்ளூர் அரசின் ஆதரவு முக்கிய காரணமாகும். வெளிநாடுகளில் கல்வி பயின்ற சீன மாணவர்களுக்கான சிறப்புத் தொழில் நடத்தும் மையத்தை, சூசோ நகராட்சி நிறுவியுள்ளது. அத்துடன், பெரும் நிதி மற்றும் கொள்கை ரீதியான ஆதரவையும் வழங்கியுள்ளது.
இதற்காக 40 கோடி யுவானை அரசு முதலீடு செய்துள்ளது. எங்கள் மையத்திலுள்ள 400க்கு அதிகமான தொழில் நிறுவனங்களில் பல, வெற்றி பெற்றுள்ளன என்கிறார், சூசோ நகர அதிகாரி சியுங் பிங் அம்மையார்.
துவக்கத்தில் நிதிப் பற்றாக்குறை நிலவியது. அதைச் சமாளிக்கும் பொருட்டு, தொழில் நிறுவனங்கள் நிதி பெற இம்மையத்தின் நிர்வாக வாரியம் பெரிதும் துணைபுரிகிறது.
அரசின் இலவச நிதி உதவியைப் பெற அவர்களுக்குத் துணைபுரிகிறோம். வங்கிகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறோம் என்கிறார் இம்மையத்தின் மேலாளர் லீ சொங் யாங்.
தற்போது, சீனாவில் சிறியதும் பெரியதுமாக 400க்கு அதிகமான இத்தகைய தொழில் நடத்தும் மையங்கள் உண்டு. வெளிநாடுகளில் கல்வி பயின்ற சீன மாணவர்களுக்கான தொழில் மையம் வியத்தகு சாதனை ஈட்டியுள்ளது.
புதிய உயரிய தொழில் நுட்ப பிரதேச அலுவலர் அனைவரும், சேவை உணர்வுடன் பணியாற்றுகின்றனர். தொழில் நிறுவனங்கள் எங்களிடம் உதவியை நாடுவதற்கு முன்பாகவே, அவற்றின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்முயற்சியுடன் உதவுகிறோம் என்கிறார் சூசோ நகராட்சியின் அதிகாரி வூ தியான் செங்.
வெளிநாடுகளில் கல்வி பயின்ற சீன மாணவர்கள் சூசோ நகரில் நடத்தும் தொழில் நிறுவனங்கள் தற்போது விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றன. 2003 தொடக்கம், வெளிநாடுகளில் முதுகலைப்பட்டம் மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற பல மாணவர்கள், இங்குத் தொழில் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
|
|