|
|
(GMT+08:00)
2004-05-20 20:38:08
|
|
தாங் கெ மெய் அம்மையார் பற்றி
cri
தாங் கெ மெய், பெய்ஜிங் கலை மற்றும் கைவினைத் தொழில் குழுமத்தின் பொதுக் கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைமை மேலாளர் ஆவார். ஷாங்காயில் பிறந்த அவர், இளம் வயதிலேயே நுண்கலையில் பேரார்வம் காட்டினார். துவக்கப்பள்ளியில் பயின்ற போது, கரும்பலகைச் செய்தித் தாளை வெளியிடுவதில் ஆசிரியருக்கு உதவினார். ஓய்வுநேரத்தில் புறநகருக்குச் சென்று, இயற்கை காட்சிகளை ஓவியமாகத் தீட்டினார். இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பின், செச்சியாங் நுண்கலைக் கல்லூரியில் தேர்ந்தார்.
1962ல், கல்லூரி வாழ்க்கையை முடித்துக்கொண்டு, பெய்ஜிங் வந்து, கலை வடிவமைக் கல்லூரியில் ஆரிசியராகப் பணிபுரியலானார்.
“அப்போது எனக்கு 23 வயது. சில மாணவர்கள் என்னைப் போன்றே இளைஞராவர். ஆனாலும் எனது சில கருத்தோட்டங்கள், புத்தம் புதியவை என்று அவர்கள் கருதியதால், எனக்கு பெரும் மதிப்பு அளித்தனர்” என்றார் தாங் கெ மெய்.
1972ல் கலை மற்றும் நுண்கலை ஆய்வகத்தில் அவர் பணிபுரியலானார். ஓவியப் படைப்பில் ஈடுபட்ட அதே வேளையில், தத்துவ ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டார். பெய்ஜிங்கின் புகழ் பெற்ற சின்தாலான் எனும் கைவினைத் தொழில் மீது பேரார்வம் காட்டினார். இத்தகைய கைவினைப் பொருள் பற்றிய உள் நாட்டு வெளிநாட்டுத் தரவுகளை அவர் அலசி ஆராய்ந்தார். பின், அரண்மனை ஆய்வாளரான நிபுணர் சூ சியா சியென்னைச் சென்று பார்த்தார். அத்துடன், அதன் செய்முறை நுட்பத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு, தொழிற்சாலைக்குச் சென்று பயிற்சி பெற்றார். இதன் அடிப்படையில் “பெய்ஜிங் சின்தாலானின் வரலாற்றுச் சுருக்கம்” என்னும் தலைப்பில் நூலை எழுதினார்.
“கைவினை நுண்கலை ஆய்வகமானது, சீனாவின் கைவினைத் தொழிலை ஆராயும் ஆய்வகமாகும். ஜேட் (Jade) பொருட்கள், தந்தம், மெழுகுப்பொருள் சின்தாலான், தரைக் கம்பள தயாரிப்பு நுட்பம் உள்ளிட்ட பல, இடம்பெறுகின்றன. சீனாவை, குறிப்பாக பெய்ஜிங்கின் பாரம்பரியக் கைவினைக் கலையை மிகவும் விரும்புகிறேன்” என்றார் அவர்.
பெய்ஜிங்கின் பாரம்பரியக் கைவினைத் தொழிலானது அரண்மனைக் கலை என்று கூறலாம். பெய்ஜிங் 800 ஆண்டு தலைநகர வரலாறுடையது.
லியௌ, ஜின், யூவான், மின், சின் ஆகிய 5 வமிச ஆட்சிகளிலும் அது நிலைபெற்றுள்ளது. ஆகவே, நாட்டின் தலைசிறந்த கைவினைத் தொழிலாளர்கள் இங்கு ஒன்று திரள்கின்றனர். பெய்ஜிங் பாரம்பரியக் கைவினைத் தொழில் சீனாவில் முதலிடம் வகிக்கின்றது. உலகளவிலும் பெயர் பெற்றது.
80ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், தாங் கெ மெய் பெய்ஜிங் கலை மற்றும் கைவினைத் தொழில் குழுமக் கூட்டு நிறுவனத்தின் தலைமை கைவினைக் கலைஞராக அவர் நியமிக்கப்பட்டார். அதன் தொழில் நுட்பம் மற்றும் கலைப் பணிக்குத் தலைமை தாங்கினார். அப்போது பெய்ஜிங்கில் 30 ஆயிரம் பேர், கைவினைத் தொழிலில் ஈடுபட்டனர். அத்துடன், ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் பதனீட்டுக் கைவினைத் தொழிலில் ஈடுபட்டனர். இக்கூட்டு நிறுவனம், ஆண்டுதோறும் ஈட்டிய அந்நியச் செலாவணி முன்னணியில் இருந்தது.
பாரம்பரியக் கைவினைத் தொழில் கலையைக் கையேற்று வளர்ச்சியுறச் செய்யும் வகையில், அவர் தலைமையில் தொழிலாளர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. அங்குப் பெருவாரியான திறமைசாலிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
1995ல் அரசவைக்காக திபெத்தின் 11வது பான்சானுக்கான “முத்திரை, புத்தகம், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பலகை” ஆகியவற்றை தயாரிக்கும் சிறப்புப் பணிக்கு இந்நிறுவனம் பொறுப்பேற்றது. அப்போது 11வது பான்சானின் மறுபிறப்பு குழந்தைக்கான குலுக்குத் தேர்வு சடங்கு நடைபெறவிருந்த நேரம் அது. தயாரிப்புப் பணி மிகவும் கடினம். தாங் கெ மெயும் சில நிபுணர்களும் உடனே வடிவமைப்பு பணியில் பங்கு கொண்டனர். நடுவண் அரசின் கோரிக்கைக்கிணங்க தங்க முத்திரை, தங்கப் புத்தகம் ஆகியவற்றில் உள்ள கட்டுரைகள் சீன மொழி மற்றும் திபெத் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். முன்னாள் அரசு தலைவர் சியாங் செ மின் எழுதிய “நாட்டைப் பேணிக்காத்து மக்களுக்கு நன்மை விளைவிக்கிறோம்” எனும் எழுத்துக்கள் தங்கப் பலகையில், பொறிக்கப்பட வேண்டும். இப்பணியை 6 நாட்களில் இவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினர். இதனால் தாங் கெ மெய், மென் ரகத் தொழில் துறை அமைச்சகத்தின் பாராட்டைப் பெற்றார். தலைவர் சியாங் செ மின் அவரை வரவேற்றார்.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற தாங் கெ மெய் அம்மையார், சீனக் கைவினைத் தொழில் மற்றும் நுண்கலைக் கழகத்தின் துணைத் தலைமை உறுப்பினராகப் பணியாற்றுகிறார். சீனாவுக்கும் பிற நாடுகளுக்குமிடையிலான பண்பாட்டுப் பரிமாற்றத்தை முன்னேற்றுவிக்க அவர் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். தற்போது, கைவினைத் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்டு அவர் கவலைப்படுகிறார். இக்கலை இளைஞரை ஈர்க்க வேண்டும். பாரம்பரியத்தைக் கையேற்கும் அதே வேளையில் அதைத் தொடர்ந்து போற்றி வளர்ச்சியுறச் செய்ய வேண்டும் என அவர் கருதுகிறார்.
“எழுச்சிமிக்க பாதையை கைவினைத் தொழில் மேற்கொள்ள வேண்டும். பண்டைக்கால தலைசிறந்த பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் கையேற்கும் அதே வேளையில், நவீன கருத்தோட்டங்களையும் கொண்டிருக்க வேண்டும்” என்றார் அவர்.
|
|
|