சீனாவின் மேற்கில், சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் துருஃபான் அமைந்துள்ளது. அங்கு, பல சுற்றுலா தலங்கள் உண்டு. பாலைவனம், ஏரி, பனிமலை, பழமையான நகர் ஆகிய இயற்கைக் காட்சிகளும் பல்வேறு பண்பாட்டுக்காட்சிகளும் உண்டு. அன்றியும், உய்கூர் இனம், கசாக் இனம் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் தனித்துவம் வாய்ந்த பழக்கவழக்கங்களும் காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, அதன் சுற்றுலா துறை பெரிதும் வளர்ச்சிகண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்கும் இது பங்காற்றியுள்ளது.
வேளாண் குடும்பத்தில், தங்குவது என்பது, அதன் சுற்றுலா நடவடிக்கைகளில் ஒன்றாகும். குடும்பங்கள் இதை நடத்துவதற்கு உள்ளூர் அரசு ஏற்பாடு செய்துள்ளது. விவசாயி குடும்பத்தில் பயணிகள் தங்கியிருந்து உணவு உண்டு, குடும்பத்துடன் ஒன்று கூடி மகிழ்ந்து, வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
இமாக்குலி என்பவள், அழகிய உய்கூர் நங்கை ஆவாள். கோடைகாலத்திலும் இலையுதிர்காலத்திலும், பயணிகள், அதிக எண்ணிக்கையில் அவளுடைய வீட்டுக்கு வருகை தருகின்றனர். பயணிகளுக்காக நடனமாடுவதாக, அவள் கூறினாள்.
விருந்தினருடன் சேர்ந்து, நாங்கள் நடனமாடுகிறோம். தாய்தந்தையர், அக்கா அண்ணன் தங்கை ஆகியோரும் நடனத்தில் கலந்து கொள்வர் என்றாள்.
துருஃபான், சீனாவில் புகழ் பெற்ற திராட்சை ஊராகும். ஆண்டுதோறும் உள்நாட்டு வெளிநாட்டுப் பயணிகள் பலர் இங்கே வருகை தந்து, புத்தம் புதிய திராட்சை, உலர் திராட்சை, திராட்சை மது ஆகியவற்றைச் சுவைக்கின்றனர். விவசாயிக்குடும்பத்தில் தங்கி மகிழ்வது என்ற நடவடிக்கை பயணிகளுக்கு அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளது. பயணிகளின் வருகையால் இமாக்குலியின் குடும்பம், ஓர் ஆண்டில், 30, 40 ஆயிரம் யுவான் வருமானத்தைப் பெற முடிகிறதாம்.
ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் முதலான நாடுகளைச் சேர்ந்த பயணிகள் துருஃபானுக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.
துருஃபான் பிரதேசத்தில், சுற்றுலாத் துறை வளர்ச்சியடைந்து, பொருளாதார வருமானம் உயர்வதற்கு, குடும்பத்தினருடன் தங்கி மகிழ்வது என்ற நடவடிக்கையானது, சிறந்த வழிமுறையாகும். இயற்கை மற்றும் பண்பாட்டுச் சுற்றுலா மூலவளங்களைப் பயன்படுத்துவதில், துருஃபான் பெரிதும் கவனம் செலுத்தி வருகிறது.
இயற்கை காட்சிகள் மிகுந்து காணப்படும் பிரதேசம் அது. கடல்மட்டத்திற்குக் கீழே 154 மீட்டர் ஆழமான ஐதிங் ஏரி உள்ளது. Dead seaஐ அடுத்து, உலகின் 2வது ஆழமான பகுதியாகும். கோடைகாலத்தில், அதன் வெப்ப நிலை 47 சதம பாகையை எட்டக் கூடும்.
பழங்காலத்தில், புகழ்பெற்ற பட்டுப்பாதை துருஃபான் வழியாகச் சென்றது. மனித சமுதாயத்தின் பல்வேறு பண்பாட்டுக் காட்சிகளில் பல, நீண்ட காலமாக இங்கு அமைந்துள்ளன.
துருஃபான் பிரதேசத்தின் சுற்றுலாத் துறையின் பொறுப்பாளர் வைலிநியாச்சு கூறுகிறார்—துருஃபானுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பழமையான ஜியவ்ஹோ நகரை பரிந்துரைக்கிறோம். 2000 ஆண்டு வரலாறுடைய இந்நகர், உலகில் பேணிக்காக்கப்படும் மிக முழுமையான பண்படாத நகராகும். இந்நகரை, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வமாக அறிவிக்குமாறு விண்ணப்பித்துள்ளோம். அண்மையில், யுனெஸ்கோ இங்கு வந்து, சோதனை மேற்கொண்டது.
துருஃபான் பிரதேசத்தின் பண்பாட்டுக் காட்சிகளில், இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட சூகுங் மசூதி, புகழ்பெற்ற காவ்சாங் நகரின் இடிபாடு, ஆயிரம் புத்தர் கற்குகை ஆகியவை இடம்பெறுகின்றன. வண்ணமயமான தேசிய இனப் பழக்கவழக்கங்களும் காணப்படுகின்றன.
சுற்றுலாத் துறையை வளர்ச்சியுறச் செய்வதற்கான கொள்கையை 1989ஆம் ஆண்டில் துருஃபான் பிரதேசம் நடைமுறைப்படுத்தியது. இதனால், 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை அது முன்னேற்றுவித்துள்ளது என்றார் வைலிநியாச்சு.
கடந்த சில ஆண்டுகளில், துருஃபானின் சுற்றுலாத் துறை விரைவான வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த ஆண்டில் 2 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 15 லட்சம் பயணிகள் இங்கு வருகை தந்தனர். சுற்றுலா வருமானம் 38 கோடி யுவானை எட்டியுள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் அது 5 விழுக்காடு வகிக்கிறது. தற்போது, பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சுமார் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றார் அவர்.
தவிர, 2010ஆம் ஆண்டுக்குள், துருஃபானின் சுற்றுலா உற்பத்தி மதிப்பு, உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 8 விழுக்காடு வகிக்கக் கூடும். செழிப்பான சுற்றுலா மூலவளம் செவ்வனே பயன்படுத்தப்பட்டால், துருஃபான் பிரதேசத்தின் பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடையும் என்பதில் ஐயமில்லை.
|