
சார்ஸ், பறவை புளு, வெறிமாட்டு நோய் ஆகியவை பல்வேறு நாடுகளில் தலைதூக்கத் தொடங்கியதனால், இறைச்சியைப் பலர் தவிர்க்க முன்வந்துள்ளனர். மாட்டிறைச்சி, கோழியிறைச்சி என ஆர்வத்துடன் உட்கொண்ட இறைச்சி வகைகளுக்கு, சுயமாகத் தடை விதித்துக் கொண்டுள்ளனர். சரி, இவ்வாறு இறைச்சியைத் தவர்த்து, சைவ உணவுக்கு மாறுவது நல்லதுதான். காய்கறிகளை இறைச்சிக்குப் பதிலாக-மாற்றாக உண்பதில் தவறில்லை. ஆனால், அதில் ஓர் அபாயம் நிலவுவதாக சத்துணவு நிபுணர் கூறுகின்றனர். சத்துக் குறைவு காரணமாக, சத்துப் பற்றாக்குறைக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். மரக்கறி உணவுக்கு மாறுபவர்கள், நல்ல உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும், உடல்நலம் குன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என விரும்புகின்றனர். தமது உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என, அவர்களில் சிலருக்கு மருத்துவர் அறிவுரை-பரிந்துரை செய்திடுகின்றனர் என்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த சத்துணவு நிபுணர் சபினா வின்டெர்ஸ்டீய்ன். சைவ உணவு மட்டுமே உட்கொண்டு உடலின் எடையைக் குறைக்க வேண்டும் என்று சிலர் ஆவல்படுகின்றனர். சைவ உணவு உட்கொள்வோரைப் பல்வேறு வகைப்படுத்துகிறார்
வின்டெர்ஸ்டீய்ன். முதல் வகை, தேன் உள்பட விலங்குடன் தொடர்புடைய அனைத்தையும் புறக்கணிப்போர். இரண்டாம் வகை, முட்டை, பால், தயிர் போன்றவற்றையும் உண்போர். மூன்றாம் வகை, முட்டையைப் புறக்கணித்து, பால், தயிர் போன்றவற்றை உட்கொள்வோர். நான்காம் வகை, தீவிரமான சைவ உணவுப் பிரியர்கள். ரொட்டி உள்பட, சமைக்கப்பட்ட பொருட்களைத் தவிர்ப்போர், காய்கறிகளைப் பச்சையாகவும் பழங்களையும் உண்போர்.

பொதுவாகவே, சைவ உணவு உட்கொள்வோர் பற்றி சில ஐயங்கள் நிலவியதாக, பேராசிரியர் கிளாஸ் லீட்ஸ்மேன் கூறுகிறார். ஆனால், சைவ உணவு உட்கொள்வோர் உடல்நலம் மிக்கவர், புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சிறுநீரகத் கோளாறு போன்றவற்றால் குறைவாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதைப் பல்வேறு ஆய்வுகள் தற்போது நிரூபித்துள்ளன என்கிறார் அவர். அதேவேளையில், சைவ உணவுக்கு முற்றிலுமாக மாறுவோர் எதிர்காலத்தில் சத்துக்குறைவுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கிறார் நிபுணர் கார்னிலியா அம்மையார். சத்துணவு பற்றி அவர்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாதது என்கிறார் அவர். பரிபூரண சைவ உணவானது, வைட்டமின் B, கால்சியம், இரும்புச் சத்து, அயோடின் முதலியவற்றின் பற்றாக்குறைக்கு ஆளாக்கலாம் என்கிறார் கார்னிலியா. கர்ப்பிணிப் பெண்டிர், குழந்தைக்குத் தாய்ப்பால் தரும் பெண்டிர் முதலியோர், குழந்தைகள்-இவர்கள், முழு சைவ உணவுப் பிரியர்களாக மாறக் கூடாது. சிறு குழந்தைகளைப் பொறுத்தவரை, சைவ உணவை மட்டுமே தருவது, மிகவும் ஆபத்தானதாம். முட்டை, பால், பயறு வகைகள், பட்டாணி, அவரை ஆகியவை உணவில் இடம்பெறுமேயானால், போதிய அளவு புரதச் சத்து இயல்பாகவே கிடைத்துவிடுகிறது. இறைச்சியை முற்றிலுமாகத் தவிர்ப்போருக்கு-வைட்டமின் B12 கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. ஏனெனில், இது, காய்கறிவகைகளில் காணப்படவில்லை. எனவே, காய்கறி உணவை மட்டுமே உண்போர், இனி போதிய அளவு பால், தயிர் முதலானவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும், அல்லது, மருத்துவரைக் கலந்து ஆலோசித்து, B12 கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் கார்னிலியா.

ஜெர்மனி என்பது, இறைச்சிப் பிரியர்களுக்குப் பெயர் பெற்ற நாடு. ஆனால், அங்கு, இப்போது இறைச்சியை விரும்புவோர் எண்ணிக்கை பெரிதும் குறைந்துவருகின்றது. ஜெர்மனியில், 1988 இல், ஓர் ஆண்டில் ஒருவர் உட்கொண்ட இறைச்சியின் அளவு 70 கிலோ. 2002 இல், இது 60 கிலோவாகக் குறைந்துவிட்டது. அதே வேளையில், காய்கறி உணவு பக்கம் கட்சி மாறுவோர் எண்ணிக்கை நிதானமாக அதிகரித்து வருகின்றது என்று புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. ஜெர்மனியில், 1983 இல், சைவ உணவுப்பிரியரின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 0.6 விழுக்காடு மட்டுமே. ஆனால், இன்று அது 8 விழுக்காடாக அதிகரித்திருக்கின்றது. ஆக, எந்த வகை உணவு நமக்கு ஏற்றது என்பதை, நாமே தீர்மானித்துக் கொள்ளலாம்.
|