முதற்கண், கவர்ச்சிமிக்க மலர் சோலை நிகழ்ச்சி பற்றிய நேயர்களின் கருத்துக்களைக் காண்போம்.
--மலர் சோலை, ஒரு அறிவியல் செய்தி என்றே கூறலாம். அனைத்தும் அருமையாக இருக்கின்றன. புதுமையான செய்திகள் இருக்கின்றன. கண்டுபிடிப்பு, அறிவியல் பயன் போன்றவை அறிந்து கொள்ள முடிந்தது என்கிறார் செஞ்சி பி.வின்சென்ட்.
--இந்நிகழ்ச்சியில், ஒலிம்பிக் பற்றி மேலும் ஆதாரபூர்வமாக அறியமுடிந்தது. போட்டியின் வரலாறு, கதைகள், தன்மை, நோக்கம் சிறப்பு ஆகியவற்றை எடுக்கக்கூடிய ஒரு செய்தி. அன்றை மலர்சோலை மிகவும் அருமை என்கிறார், S.நாட்டாமங்கலம், வி.ராமகிருஷ்ணன்.
--அமெரிக்காவில் ஒரு தம்பதியருக்கு 12வது குழந்தை பிறந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சி. அவர்கள் இல்லத்தில் புதிய நபர் வருகையை வரவேற்கின்றனரே. ஐரோப்பியர்கள் மிகவும் விரும்பி உண்ணும் உணவு, சீன உணவாகும். இதைப் பொன்ற தகவல்களை, மகிழ்ச்சியுடன் கேட்டறிந்ததேன் என்கிறார் ராசிபுரம், R.M.மோகன்.
சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சி, எப்பொழுதும் வரவேற்கப்பட்டது. இதில் அறிமுகப்படும் சீனாவின் புகழ்பெற்ற வரலாற்று சிறப்பிடங்களும் இயற்கை காட்சிதலங்களும் பல நேயர்களைக் கவர்ந்துள்ளன.
--இந்த நிகழ்ச்சி மூலம், 5 நட்சத்திர விடுதிகளோடு பசுமை நிறைந்த சாமன் நகரின் எழிலை விளக்கியது, அருமை என்கிறார், சின்னவளையம், P.P.பிரகாஷ்.
--இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் வழங்கிய சீன இசை மிகவும் அருமையாக இருந்தது. அது மட்டுமல்ல, நிகழ்ச்சியின் இறுதியாக வழங்கிய சுற்றுலா செல்வோருக்கு கூறிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று 30 பள்ளிப்பட்டி, P.R.சுப்ரமணியன்.
--ஹன் இன மக்களின் வாழ்க்கை முறைகளை பற்றி மிகத் தெளிவான முறையில் தொகுத்துக் கூறிய, சீனாவில் இன்ப பயணம் என்ற நிகழ்ச்சியின் தயாரிப்புக் குழுவுக்கு எனது நன்றியை கூற கடமைப்பட்டுள்ளேன். சீனாவின் சுற்றுலா இடங்களை அறிந்துகொள்ள இந்நிகழ்ச்சி மிகவும் உதவியாக உள்ளது என்கிறார் 30 பள்ளிப்பட்டி, ஆ.ஈ.ஸ்வரன்.
அடுத்து, நேயர் விருப்பம் பற்றிய சில கடிதங்கள். இந்த நிகழ்ச்சியில், நேயர்களுக்கு பிடிக்கும் சீன பாடல்களையும் தமிழ்பாடல்களையும் கேட்கலாம்.
--நேயர் விருப்பம் நிகழ்ச்சியில், நாங்கள் எதிர்பாராத நேரத்தில், குழந்தை பிறப்பிற்கு வாழ்த்து தெரிவித்து தாங்கள் வழங்கிய தமிழ்பாடல் மனதை தொடுகின்ற வகையில் இருந்தது. அந்த ஒரு சில நிமிடங்கள், எங்கள் குடும்பத்தையோ மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய சீன வானொலிக்கு, பாண்டமங்கலம், M.தியாகராஜன் நன்றியை தெரிவித்தார்.
--இப்பகுதியில், சீன இசையை நேயர் விருப்பமாக வழங்கினீர்கள். அந்த இசையை, சீன இசை நிகழ்ச்சியில் ஒலிபரப்பினால் நன்றாக இருக்கும். நேயர் விருப்பம் பகுதியில் இசையை வழங்கியது தவறு, இது என்னுடைய கருத்து. மற்றும் நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கிய பாசமிகு அறிவிப்பாளார் கலைமகள் அவர்களுக்கும் நன்றிகள் என்கிறார் கண்டமங்கலம், A.முஜீபுர் ரஹ்மான்.
--ஜுலை 18ம் நாள் ஒலிபரப்பான நேயர் விருப்பம் நிகழ்ச்சி, என்னை மிகவும் கவர்ந்தது. முன்பெல்லாம் கூட, இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பானது. நேயர்களின் பெயர்கள் மட்டும் கூறப்பட்டு, பாடல்கள் ஒலிபரப்பப்படும். ஆனால், இன்றைய நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமானதாக இருந்தது என்கிறார், வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்.
சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சீன வறுவல் நேயர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. சமைத்து ருசித்த பின்பு, அவர்கள் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
--சைவ உணவு வகைகள் சொன்னால் பயன் மிக்கது. சைவ சூப் வகைகள், கூட்டு வகைகள், சிப்ஸ் வகைகள் குழம்பு வகைகள் என ரக வாரியாக சொன்னால் நலமே. நாவுக்கும் சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் ஒர் உற்சாக வரவேற்பு என்கிறார் சென்னை-5, S.ரங்கதேவி.
--சீன உணவு முறை குறித்து அறிய முடிந்தது. குவாங்துங் உணவு சீன பாரம்பரிய உணவு என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டேன். இந்திய கொழுக்கட்டை போல் இறைச்சியுடன் கூடிய குவாங்துங் உணவை, சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது என்று, ஆரணி பொன்.தங்கவேலன் கூறினார்.
--இந்நிகழ்ச்சியில் புதுமையான முறையில் ஒரு புதிய வகை சூப்பினை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். இனிப்பான பழங்களைக் கொண்டு அதே நேரத்தில் சத்தான உணவாக இது இடம்பெற்றுள்ளது என்கிறார் சேந்தமங்கலம், ஜீ.பரிமளா.
--காளான் வறுவல் பற்றி அறிந்தேன். மேலும் காளானிலுள்ள சத்துக்கள் பற்றியும் அதனை சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த நோயுடையவர்களும் சாப்பிடலாம் என அறிந்துகொண்டேன். இந்த உணவினை பற்றி, எனது நண்பர்களுக்கு தெரிவிப்பேன் என்கிறார், வாதானூர், ஜீ.விநாயகமூர்த்தி.
--இதில், வேர்க்கடலை அவியல் தயாரிப்பு பற்றி கூறக் கேட்டேன். இந்த நிகழ்ச்சி சமீபத்தில் வழங்கியதாகும். இம்மாதிரி வழங்குவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்கிறார் விழுப்புரம், S.பாண்டியராஜன்.
|