
ஐரோப்பிய உள்ளரங்க கால்பந்து சாம்பியன் பட்டப் போட்டி, 20ஆம் நாள் செக் நாட்டில் நிறைவடைந்தது. இறுதி போட்டியில், உலக சாம்பியனான ஸ்பெனிஷ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரஷிய அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. இத்தாலி அணி 3-1 என்ற கோல் கணக்கில் உக்ரைன் அணியைத் தோற்கடித்து வெண்கல பதக்கம் பெற்றது.
20ஆம் நாள் ஹாங்காங்கில் நடைபெற்ற சுவர் பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஹாங்காங் வீரர் வாங் வே ஹெங் 3-1 என்ற செட் கணக்கில் எதிர் தரப்பு வீரரைத் தோற்கடித்து ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றார்.
20ஆம் நாள் இத்தாலியில் நடைபெற்ற உலக கோப்பைக்கான சுயேச்சைப் பாணி உறைப்பனிச் சறுக்கல் போட்டியின் ஏரியல்ஸ் போட்டியில் சீன வீராங்கனை லீ நி நா 195.59 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். இன்னொரு சீன வீராங்கனை கோ சின்சின் மூன்றாம் இடம் பெற்றார். சுவீட்சர்லாந்து வீராங்கனை ஒருவர் சாம்பியன் பட்டம் பெற்றார்
19ஆம் நாள் ஸ்லோவெனியால் நடைபெற்ற உலக கோப்பைக்கான, குளிர்கால இருவகை உடல்திறன் விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான 10 கிலோமீட்டர் துரத்துதல் பந்தயத்தில் சீன வீராங்கனை குங் யிங் சௌ வெள்ளி பதக்கம் பெற்றார். இரண்டு நாளுக்கு முன் நடைபெற்ற 7.5 கிலோமீட்டர் போட்டியிலும் அவர் இரண்டாம் இடம் பெற்றார்.
பிரிட்டனின் பர்மிங்ஹம் நகரில் நடைபெற்ற சர்வதேச உள்ளரங்க தடகள போட்டியின் மகளிருக்கான கோலூன்றி உயரப் பாய்ச்சல் போட்டியில், ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சாம்பியனான ரஷியாவின் புகழ்பெற்ற வீராங்கனை யெலேன இசிந்பயேவா (YELENA ISINBAYEVA ) 4. 88 மீட்டர் என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். இது புதிய உலக சாதனையாகும். முந்திய 4.87 மீட்டர் என்ற உலக சாதனையையும் அவர் நிலைநாட்டி வருகின்றார்.
2005ஆம் ஆண்டு உள்ளரங்க தடகளப் போட்டி, மார்ச் திங்களில் சீனாவின் தியன் சின் மாநகரில் நடைபெறும். ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீரர் லீயூ சியாங், 60 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் கலந்துகொள்வார். ஆசியாவின் 8 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்து விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்வர்.
|