2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரபூர்வமாக துவக்குவதெனவும், திடீரென ஏற்படக் கூடிய நிகழ்ச்சிகளைச் சமாளிக்கும் ஆணை மையம் 2005ஆம் ஆண்டின் முற்பாதியில் நிறுவப்பட உள்ளதாகவும் பெய்சிங் மாநகர அரசு மார்ச் 23ஆம் நாள் அறிவித்தது. பயங்கரவாதத்தையும் குண்டு வெடிப்பையும் தடுப்பது என்பது பாதுகாப்பு பணியில் முக்கிய அம்சமாகும் இதற்காக, பல்வகை பயங்கரவாத நிகழ்ச்சிகளைத் தடுக்கவும் சமாளிக்கவும் கூடிய பாதுகாப்புப் படை ஒன்றை பெய்சிங்கில் நிறுவி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பாதுகாப்பாக நடைபெறுவதற்கு அது உத்தரவாதம் தரும் என்று தெரிகிறது.

மார்ச் 27ஆம் நாள் சீனாவின் பத்தாவது தேசிய விளையாட்டுப் போட்டியின் முதலாவது தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. வட கிழக்கு சீனாவிலுள்ள ஹார்பின் நகரில் நடைபெற்ற மகளிருக்கான விரைவு பனிச்சறுக்கல் போட்டியில் வீராங்கனை வாங் மன் லி 156.740 புள்ளி என்ற மொத்த சாதனையுடன் குறுகிய தூர பன்முக உடல்திறன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்பு கமிட்டியின் செயற்குழு மார்ச் 28ஆம் நாள் அதன் 52வது கூட்டத்தை நடத்தியது. பெய்சிங் 2008 ஒலிம்பிக் கலைநிகழ்ச்சிகள் பற்றிய ஒட்டு மொத்த திட்டம் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. பெய்சிங் ஒலிம்பிக் கலைநிகழ்ச்சிகளின் போது, பல்வேறு நடவடிக்கைகளை சிக்கனத்துடன் நடத்திட வேண்டும். மனித பண்புடைய ஒலிம்பிக் விளையாட்டு என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் பொது மக்கள் கலந்துகொள்ளும் நடவடிக்கைகளை அதிகமாக ஏற்பாடு செய்யலாம் என்று பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் கமிட்டித் தலைவர் லீயு ச்சி வற்புறுத்தினார்.

11 மலையேற்ற வீராங்கனைகள் இடம்பெறும் ஒரு மகளிர் மலையேற்ற அணி மார்ச் 25ஆம் நாள் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசாவிலிருந்து புறப்பட்டது. அவர்கள் நல்ல வழியைத் தேர்ந்தெடுத்து, மே திங்களின் துவக்கத்தில் உலகின் மிக உயரமான ஜுங்முலோங்மா சிகரத்தில் ஏறத் துவங்குவர். சீன மகளிர் இந்த சிகரத்தில் வெற்றிகரமாக ஏறியதன் 30ஆம் ஆண்டு நிறைவின் நினைவாக இந்த மலை ஏற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 26ஆம் நாள் நிறைவடைந்த மூன்றாவது சீன-சியோ மன் சர்வதேச மாரதான் எனும் நெடுந்தூர ஓட்டப் போட்டியில் சீன வீராங்கனை சோ சுன் சியூ மகளிர் பிரிவில் முதலிடம் பெற்றார். சீனாவின் தென்கிழக்கு கடலோர நகரான சியாமன் நகரம் 2003ஆம் ஆண்டு சர்வதேச மாரதான் ஓட்டப் பந்தயத்தை முதல் தடவையாக நடத்தியது. இந்த முறை மாரதான் போட்டியில் முழு தூரம், அரை தூரம், பத்து கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், ஆகிய நான்கு பிரிவுகள் இருந்தன. 34 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 920 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துகொண்டனர்.
|