தௌ மதம், சீனாவிலுள்ள பல மதங்களில் ஒன்றாகும். இதற்கு சுமார் 1800 ஆண்டுகள் வரலாறு உண்டு. இந்த மதத்தின் தொண்டர்கள் மதப்பாடத்திற்கு பின் கொன்பு பயிற்சியிலும் ஈடுபடுவதுண்டு. மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில், பிரபல தௌ மதப் புனிதத் தலமான வூத்தான் மலை அமைந்துள்ளது. கடந்த பல நூறு ஆண்டுகளாக, வூத்தான் மலை அதன் அழகான சிகரம், கம்பீரமான தௌ மதக் கட்டடங்கள் ஆகியவற்றின் காரணமாக, உலகில் புகழ்பெற்றுள்ளது. அண்மையில் வூத்தான் மலைப் பகுதியில் சுற்றுலா மேற்கொண்ட சீன வானொலி செய்திமுகவர் எழுதிய இது தொடர்பான கட்டுரையின் முதல் பகுதியை வழங்குகிறோம். வூத்தான் மலை பற்றி குறிப்பிடும் போது, சீன வரலாற்றில் புகழ்பெற்ற ஒரு மன்னர் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் 600 ஆண்டுகளுக்கு முந்திய மிங் வமிசக்காலத்தில் ஆட்சி செய்த யுன்ல மன்னர் ஆவார். மன்னரின் அதிகாரத்தைக் காட்டுவதற்காக அவர் பெரும் அளவில் தௌ மதக் கட்டடங்கலைக் கட்டுமாறு கட்டளை பிறப்பித்தார்.
இக்கட்டளைக்கிணங்க, 3 லட்சத்துக்கு அதிகமான சிற்பிகள் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக உழைத்து, 30க்கும் மேற்பட்ட கம்பீரமான தௌ மதக் கட்டடங்களைக் கட்டிமுடித்தனர். இந்தக் கட்டடங்கள், பெய்சிங்கிலுள்ள அரண்மனை அருங்காட்சியகம் போல மிங் வமிசக் காலத்திலான மன்னர் குடும்பக் கட்டடங்களாகும். இதனால், வூத்தான் மலைக் கட்டடங்கள், செங்குத்தான மலையிலுள்ள அரண்மனை அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகின்றன. 1994ல் அவை, ஐ.நா யுனெஸ்கோவால் உலகப் பண்பாட்டு மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஹுபெய் மாநிலத்தின் தலைநகரான வூஹெனிலிருந்து புறப்பட்டு, புகை வண்டியில் 7 மணி நேரம் செலவழித்த பின்னர், சுற்றுலா பேருந்து மூலம் வூத்தான் மலையைச் சென்றடையலாம். வழியில் மலை சூழந்துள்ள நீளமான பாதையில் பல தேயிலைத் தோட்டங்கலையும், மலைகளுக்கிடையில் வரிசை வரிசையாக நிற்கும் சிறிய வீடுகளையும் கண்டுகளிக்கலாம்.
வூத்தான் மலைத் தொடரில் 72 பெரிய மற்றும் சிறிய மலைகள் உள்ளன. இம்மலைக்களுக்கிடையில் பல்வகை தௌ மத அரண்மனைகள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தியெசு மலை சிகரமானது, வூத்தானின் மிகவும் உயரமான மலையாகும்.